தமிழ்நாட்டின் 'மைக்ரோ உலகத்திலிருந்து' (Micro-world) துண்டிக்கப்பட்டு வரும் 'மேக்ரோ உலகம்’ (Macro-world (6)
'பிரிவினை நோய்கள்' மூலம் மரணத்தை தழுவும் திராவிடர்/திராவிட கட்சிகள் ?
'தமிழ்நாட்டில் ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து
உச்சமாகி, இன்று மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper middle class- குடும்பப்பிள்ளைகளும் கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை) திருட்டு, (மது/போதை மாத்திரை,
சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில் பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம்
அதிகரித்துள்ள விளைவில் முடிந்துள்ளது.' (‘'புரட்சி'(?) சமூக செயல்நுட்பம் மூலம் சீரழிந்த
தமிழ்நாட்டை, எவ்வாறு மீட்பது?’; https://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_7.html)
இன்று தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி சிற்றூர்களில்
உள்ள பள்ளி மாணவர்கள் கூட 'டாஸ்மாக்' மட்டுமின்றி, பெட்டிக்கடைகளில் கிடைக்கும் கஞ்சா
உள்ளிட்ட இன்னும் பல போதை மாத்திரைகளுக்கு அடிமைப்படும் போக்கும் 'அதிவேகமாக' வளர்ந்துள்ளது.
அதில் சிக்காத பிள்ளைகளின் பெற்றோர்களின் எண்ணிக்கையும் 'அதிவேகமாக' குறைந்து வருகிறது.
எந்த வழியிலும் அதி வேகமாக பணக்காரர் ஆகும் நோயில் சிக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகளாக உள்ள பெற்றோர்களின் விகிதாச்சாரமானது அதிகரித்து, மேற்குறிப்பிட்ட நேர்மையான பெற்றோர்களின் எண்ணிக்கையானது இன்னும் குறைவாக இருப்பதை, ஒரு முறையான ஆய்வு வெளிப்படுத்தினால் வியப்பில்லை. ஏமாற்றுவதில் வல்லவரான மாணவர்களின் பெற்றோர்கள் ஏமாளிகளாக பயணித்து, மேலே குறிப்பிட்ட அதிர்ச்சி தரும் உண்மைகளை தப்பித்தவறி கண்டுபிடித்து, அதன் காரணமாகவே பலவித உடல்/மன நோய்களுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது
மேலே குறிப்பிட்ட கொடுமைகள் மட்டுமின்றி, கீழ்வரும் சமூக அநீதியிலும் தமிழ்நாடு சிக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் +2 தேர்வில் மொத்த மாணவர்களில், தமிழ்வழிக்கல்வி
மாணவர்கள் எத்தனை சதவீதம் பயில்கிறார்களோ, அத்தனை சதவீத உள் இடஒதுக்கீடானது, எம்.பி.பி.எஸ்
உள்ளிட்ட படிப்புகளில் அமுலாகாத வரையில், நீட் தேர்வு இருந்தாலும், இல்லையென்றாலும்
சமூக அநீதியே தொடரும். தமிழ்நாட்டில் இன்றுள்ள இட ஒதுக்கீடானது, சமூக அநீதி மட்டுமின்றி,
தமிழில் சரியாக எழுதவும் படிக்கவும் தெரியாத தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்களை உருவாக்கி
வரும் ‘தமிழர் அடையாள அழிப்புக்கும்’ காரணமாகி வருகிறது.
சங்க காலம் முதல் 1967 வரை முறையாக பராமரிக்கப்பட்ட ஏரிகளும், ஆறுகளும், மட்டுமின்றி, கிரானைட் மலைகளும், காடுகளும் உள்ளிட்ட இயற்கை கனிவளங்கள் எல்லாம், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில் ஊழல் பேராசைக்கு தீனியாகி வருகின்றன. அதைக்கண்டு கொள்ளாமல், 'காலதேச வர்த்தமான மாற்றங்களுடன்' பயணிக்காமல், 'பெரியார் பல்லவி'யிலேயே பயணிப்பவர்கள் எல்லாம், மேலே குறிப்பிட்ட கொடுமைகள், சமூக அநீதிகள் பற்றி, இதுவரை எவராவது கவனம் செலுத்தியிருந்தால், அது பாராட்டுதலுக்கு உரியது. இதுவரை கவனம் செலுத்தாதவர்கள் எல்லாம், இனியாவது கவனம் செலுத்தினால், அது வரவேற்கத் தக்கதாகும். மாறாக அவ்வாறு சீரழித்தவர்களிடமிருந்து 'பாராட்டு, பணம்' உள்ளிட்ட 'பலன்கள்' அனுபவித்த 'தமிழ், தமிழ் இசை, பகுத்தறிவு, பக்தி' வியாபாரிகள் எல்லாம் மனித இழிவுக்கு இலக்கணமானார்கள். தாமும் தமது குடும்பப் பிள்ளைகளும் படித்த காலத்தில், பணியாற்றும் காலத்தில், எந்த பொதுப்பிரச்சினைக்கும் போராடாதவாறு 'பாதுகாப்பு மண்டிலத்தில் வாழ்வியல் புத்திசாலிகளாக' வாழ்ந்து கொண்டு, குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் போராடி படிப்பையும், வாழ்வையும் கெடுத்துக் கொண்டதையும், தீக்குளித்ததையும் ஆதரித்தவர்களும், அந்த வகையில் அடக்கம்.
'பெரியார் குறுகிய இன அடிப்படையில் பயன்படுத்திய
'திராவிடர்' என்ற சொல்லை விடுத்து, பிராமணர்களை கட்சியில் சேர்த்து, பரந்த புவியியல்
அடிப்படையிலான 'திராவிட' என்ற சொல்லை தேர்தெடுத்து', 'திராவிட முன்னேற்ற கழகம்' தொடங்குவதாக
அண்ணா விளக்கம் அளித்தார்.
அவ்வாறு உருவான தி.மு.க-வானது, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க
என்று பிரிந்து, செயல்பட்ட போதும், மத்தியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க,
ம.தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளுமே அமைச்சர் பதவிகளை 'அனுபவித்ததானது'(?), தமிழ்நாட்டில்
திராவிடக்கட்சிகளின் 'இந்துத்வா எதிர்ப்பிற்கு' சாவு மணி அடித்ததாகி விட்டது.
அது போலவே, ஈ.வெ.ரா அவர்கள் மறைவிற்குப் பின் தி.மு.கவை
ஆதரித்து கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், எம்.ஜி.அரை ஆதரித்து திருவாரூர் தங்கராசு
தலைமையிலான திராவிடர் கழகம், வே.ஆனைமுத்து தலைமையில் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக்கட்சி'
என்று மூன்று கட்சிகளாக பிரிந்து செயல்பட்டன.
பின் ஜெயலலிதா காலத்தில், கீ.வீரமணியின் தலைமையில்
செயல்பட்ட தி.க வானது மேலும் பிரிந்து, இன்று கொளத்தூர் மணி தலைமையில் ஒரு கட்சியும்,
கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் இன்னொரு கட்சியும் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக
ஆங்காங்கே குழுக்களாகவும் 'வளரும்'(?)நோக்கில், வெவ்வேறு பெயர்களில்,'பெரியார்' கட்சிகள்
பல செயல்பட்டு வந்தாலும் வியப்பில்லை.
ஜெயலலிதாவின் 'மர்மமான' மரணத்திற்குப் பின், 'திராவிடக்
கட்சிகள்'(?)மேலும் பிரிந்து, இன்னும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன.
திராவிடர்/திராவிட கட்சிகளை சீரழித்து வரும் 'பிரிவினை
செயல்நுட்பத்தில்', தமிழ்நாட்டில் தேசியக்கட்சிகளில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்
சிக்கியது. அதிலும் கூட திராவிடர்/திராவிட கட்சிகளின் பிரிவினைகளுக்கும், காங்கிரஸ்,
கம்யூனிஸ்ட் ஆகிய தேசியக் கட்சிகளின் பிரிவினைக்கும் இடையே வேறுபாடும் வெளிப்பட்டது.
பிரிந்த கட்சிகள் மீண்டும் சேர்வது, அடுத்து பிரிவது போன்ற போக்குகள் எல்லாம், தமிழ்நாட்டில்
அந்த தேசியக் கட்சிகள் மூலமாகவே வெளிப்பட்டன. அண்ணா காலத்திலேயே தி.மு.கவிலிருந்து
பிரிந்து, ஈ.வெ.கி. சம்பத், 'தேசியத்தை' உள்வாங்கி உருவாக்கிய கட்சியும் அந்த போக்கில்
சிக்கியே, காங்கிரசில் அக்கட்சியும் இணைந்து கரைந்து போனது. அது போலவே திராவிட கட்சித்தலைவரான
திருநாவுக்கரசர் தொடங்கிய கட்சியும் கரைந்து, அவர் பா.ஜ.கவில் சேர்ந்து, பின் காங்கிரசில்
நுழைந்து, தமிழ்நாட்டில் அக்கட்சியின் தலைவராக உள்ளார். அவருக்கு போட்டியாக மீண்டும்
தலைவராகும் வாய்ப்புள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சம்பத்தின் மகன் ஆவார்.
தமிழ்நாட்டில் காங்கிரசைப் போல தமிழக பா.ஜ.கவானது
பிரிவினைக்கு உள்ளாகாவிட்டாலும், அந்த 'பிரிவினை நோயின்' துவக்க வெளிப்பாடாகிய 'தனிநபர்
விசுவாசம்' அடிப்படையில் குழுக்களாக செயல்பட்டு வருவதும் ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.
காங்கிரஸ் பாணியில், தமிழக பா.ஜ.கவும் திராவிடக்கட்சிகளின் 'செல்வாக்குள்ள'(?) நபர்களை
எல்லாம், ஒருவர்பின் ஒருவராக கட்சிக்குள் அனுமதிக்கும் போக்கில் பயணிக்கிறது.
தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வரும் இது போன்ற போக்குகள்
எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த ‘சமூக சிக்னல்கள்’ ஆகும். அந்த சிக்னல்களை ஆய்வுக்கு
உட்படுத்தி உரிய பாடங்கள் கற்று பயணிக்கும் மனிதர்களும் கட்சிகளுமே, தமிழ்நாட்டின்
அடுத்த கட்ட அரசியலை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். மற்ற மனிதர்களும்
கட்சிகளும் தமிழ்நாட்டின் அடுத்த கட்ட போக்கில் சருகாகி உதிர்வதும், ஓரங்கட்டப்பட்டு
'சமூக குப்பை'யாக ஒதுக்கப்படுவதும் அரங்கேறப்போகிறது, என்பதற்கான சமூக சிக்னலும் வெளிப்பட்டு
வருகிறது.
புற்று நோயின் செல்கள் கட்டுப்பாடின்றி பிரிந்து,
எண்ணிக்கையில் வளர்ந்து சம்பந்தப்பட்ட உடலை சீரழித்து மரணிக்கச் செய்வது போலவே, மேலே
குறிப்பிட்ட 'பிரிவினைப் போக்குகள்' என்ற 'சமூக புற்றுநோயில்’, மேலே குறிப்பிட்ட கட்சிகள்
சிக்கி மரணித்து வருகின்றனவா? மேலே குறிப்பிட்ட கொடுமைகளும், சமூக அநீதிகளும், 'அந்த' சமூக புற்றுநோயின் விளைவுகளா? என்ற சமூகவியல்
ஆய்வுக்கான நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.
தமிழ்நாட்டின்
வாக்காளர்களும் தேர்தல்களில் அந்த கட்சிகள் பின்பற்றிய 'ஆதாய நோயில்' சிக்கி, வளர்ந்து
வந்தார்கள். அந்த போக்கில், மக்களின் கோபமும், வெறுப்பும் குறிப்பிட்ட ஆட்சி மாற்ற
கட்ட அளவுக்கு மேல் (Threshold level) வளரும் அளவுக்கு முட்டாள்த்தனமாக ஆண்ட ஆளுங்கட்சிகள்
தோல்வியைத் தழுவும் போக்கும் 1996 முதல் அரங்கேறியது. 'திருமங்கலம் ஃபார்முலா'வை அறிமுகப்படுத்தி வெற்றியை
'சுவைத்தவர்கள்', அடுத்து வந்த பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவியதற்கும், அந்த போக்கே
காரணமானது.
'அரசியல் நீக்கம்' விளைவித்த 'தனிநபர் விசுவாசம்'
அடிப்படையில், நடுமட்டத்திலும், குறிப்பாக
கிராமங்களிலும் செல்வாக்கு பெற்றிருந்த ஜெயலலிதா என்ற ஒரே தலைவர் மறைந்ததானது, மேற்குறிப்பிட்ட
'ஆதாய நோயில்' விளைந்த 'அரசியல் அமாவாசைகளின் புரட்சியை தூண்டுவித்தது;
என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html
)
ஆளும் திராவிடக்கட்சியைத் தோற்கடித்து, சட்டசபை எதிர்க்கட்சியான
திராவிடக்கட்சியை டெபாசீட் இழக்க வைத்து, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தேர்தல் சாதனைகளை
எல்லாம் பின்னுக்குத் தள்ளி;
1967இல் முளைவிட்ட ஆதாய அரசியலின் உச்சக்கட்டமாக, சசிகலா குடும்பத்தின் சுயேட்சை வேட்பாளர்
தினகரன் பெற்ற வெற்றியானது, இன்றுள்ள திராவிடர்/திராவிட, தேசியக் கட்சிகளின் எதிர்காலம்
குறித்த முக்கிய சிக்னலாகவே தெரிகிறது.
'திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா;
முடித்து வைப்பவர் சசிகலாவா?' என்ற தலைப்பில் 2016 டிசம்பரில் கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.
2017 டிசம்பரில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவின்
மூலம், மேலே குறிப்பிட்ட கணிப்பு சரி என்ற சிக்னல் வெளிப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனாது,
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாகி விடும்.
அது போலவே திராவிடர் கழகத்தை தொடங்கியவர் ஈ.வெ.ரா
அவர்கள்; முடித்து வைப்பவர் திவாகரனா? என்ற கேள்வியினை, கீழ்வரும் செய்தியானது எழுப்பியுள்ளது.
‘தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அம்மா அணி
என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திவாகரன், அம்மா அணியை ”அண்ணா திராவிடர் கழகம்” எனத்
தனி கட்சியாக அறிவித்து, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார்.’ ; https://www.vikatan.com/news/tamilnadu/127268-new-party-launched-by-divakaran.html
‘1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்,
'தேர்தல் அரசியலில்' தமது கட்சி பங்கேற்காது;
என்று இருந்த நிலையில் குறை கண்டு, அண்ணாவும், அவரின்
ஆதரவாளர்களும், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து;
'திராவிடர்' என்ற சொல்லில் இருந்த 'ர்' ஐ நீக்கி,
அந்த அடிப்படையில் பிராமணர்களையும் 'திராவிட தேர்தல் அரசியலில்' அனுமதித்து, 'திராவிட
முன்னேற்ற கழகம்' 1949இல் தொடங்கினர்.’
என்பதை, 'திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர்
அண்ணா; முடித்து வைப்பவர் சசிகலாவா?' என்ற தலைப்பிலான, மேலே குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.
அவ்வாறு திராவிட தேர்தல் அரசியலானது முடிவுக்கு வந்து
விட்டதை ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிவானது வெட்ட வெளிச்சமாக்கியது.
1944இல் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய 'திராவிடர் கழகம்'
என்பதில் இருந்த 'ர்'ஐ நீக்கி, தி.மு.கவை உருவாக்கி, தி.க வானது செல்லாக்காசாகும் போக்கினை,
அண்ணா தொடங்கி வைத்தார். அதன் உச்சக்கட்ட தொடர்ச்சியாக, அவ்வாறு நீக்கப்பட்ட 'ர்' என்ற
எழுத்தை மீண்டும் ஒட்டி, அதில் 'அண்ணா' என்ற சொல்லையும் சேர்த்து, ”அண்ணா திராவிடர்
கழகம்” எனத் தனி கட்சியை திவாகரன் அறிவித்துள்ளார்.
திராவிடர் கழகத்தை தொடங்கியவர் ஈ.வெ.ரா அவர்கள்;
முடித்து வைப்பவர் திவாகரனா? என்ற கேள்வியினை, அந்த அறிவிப்பானது எழுப்பியுள்ளது. எதிரெதிராக பயணித்தாலும், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரனும், திவாகரனும், தெரிந்தோ, தெரியாமலோ, 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவிகளாக' பங்களித்து வருகிறார்களா? என்பதும், மேலே குறிப்பிட்ட ஆய்வுகளில் அடக்கமாகும்.
‘ஒரு மனிதர் நல்ல அல்லது தீய செயலில் ஈடுபட, அவர்
மனதில், அதற்கான தூண்டுதல் எண்ணம் (Motivation)
உருவாக வேண்டும்.
செயலில் ஈடுபட தூண்டுதல் எண்ணம் உருவாக, மனதில் அது
தொடர்பான ஈடுபாடு (interest) இருக்க வேண்டும்.
மனதில் ஈடுபாடு உருவாக வேண்டுமானால், அதற்கான தேவைகளை
(Needs) அந்த மனிதர் உணரவேண்டும்.’ (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_11.html
)
எனவே ”அண்ணா திராவிடர் கழகம்” தொடங்கிய திவாகரன்
முதல், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள் வரையில், இடையில் தோன்றிய
திராவிடர்/திராவிட கட்சிகள் உள்ளிட்டு, எந்த எந்த தேவைகளின் அடிப்படைகளில், அந்தந்த
தலைவர்கள் அந்தந்த கட்சிகளை உருவாக்கினார்கள்? அதில் எந்தெந்த கட்சிகளில், எந்தெந்த
மட்டங்களில், 'வாரிசுகள்' எல்லாம், நேரு குடும்ப வாரிசு அரசியல் பாணியில் வளர்ந்து
வருகிறார்கள்? அவ்வாறு 'வளர்ந்து'(?) வரும் போக்கிற்கு, அந்தந்த கட்சிகளின் 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா, தேசியம்'(?) போன்றவை எல்லாம் எந்த அளவுக்கு 'நரிகளுக்கான புலி வேடமாக' பயன்பட்டு வருகின்றன? அந்த சீரழிவு போக்கின் வெளிப்பாடாகவே, 'பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில் விமர்சிப்பதைப் பொதுவாக வெளிப்படையாகச் செய்வது யாருக்குச் சாதமாக முடியும்?' என்ற கருத்தானது, 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில் வெளிப்பட்டுள்ளதா?(குறிப்பு கீழே) ஜெயலலிதாவின் 'மர்ம' மரணத்திற்குப் பின், 'அரசியல் அமாவாசைகளின் புரட்சி' என்ற மழையில், 'அந்தந்த' வேடங்கள் களைந்து வருவதை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவானது வெட்ட வெளிச்சமாக்கியதா? என்பது ஆய்விற்குறியதாகும். ‘அந்த தேவைகள்’ உருவான சமூக செயல்நுட்பங்களும்
ஆய்விற்குறியதாகும்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் வரை சீரழித்து வரும்
பல வகை போதைகளும், திரிந்த சமூக நீதியில் வளர்ந்து வரும் தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களும்,
அதன் மூலம் வளர்ந்து வரும் ‘தமிழர் அடையாள அழிப்பும்’, ஆதாய அரசியலில் கட்சிகளை சீரழித்து
வரும் பிரிவினைப் போக்குகளும்;
மேலே குறிப்பிட்ட
'அந்த தேவைகள்' உருவான சமூக செயல்நுட்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியதன் விளைவுகளே
அகும்.
குறிப்பு: துக்ளக் இதழில் எனது கட்டுரைகள் வெளிவருவதை விரும்பாத, 'பெரியார்' ஆதரவாளாரிடமிருந்து வந்த மேற்குறிப்பிட்ட கருத்தானது, கீழ்வருபவைக்கு முரண்பட்டதாகும்.
ஈ.வெ.ரா அவர்கள் சென்னை லட்சுமிபுரம் பிராமணர் அமைப்பில் ஆற்றிய உரை; மற்றும் 1944க்கு முன் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களில், 'பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில்' விமர்சிக்காமல், பகிரங்கமாக முத்துச்சாமி வல்லத்தரசு, ஜீவா போன்றவர்கள் எழுதிய மடல்களை அப்படியே 'குடிஅரசில்' வெளியிட்டு, விளக்கமும் வெளியிட்டார் ஈ.வெ.ரா. 'அறைக்குள் ஒரு விமர்சனம்; வெளியில் பொது அரங்கில் பாராட்டு' என்ற இரட்டை வேடப்போக்கானது, தி.மு.க தொடங்கிய பின் 'வளர்ந்த' போக்காகும்; மக்களை 'உணர்ச்சிபூர்வ ஆடுகளாக' கருதும் 'மேய்ப்பர் மனநோயாளிகளும்' வளர்வதை ஊக்குவித்து. இன்று எல்லா கட்சிகளிலும் அந்த நோயானது, எந்த அளவுக்கு பற்றியுள்ளது? என்றும், ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.
குறிப்பு: துக்ளக் இதழில் எனது கட்டுரைகள் வெளிவருவதை விரும்பாத, 'பெரியார்' ஆதரவாளாரிடமிருந்து வந்த மேற்குறிப்பிட்ட கருத்தானது, கீழ்வருபவைக்கு முரண்பட்டதாகும்.
ஈ.வெ.ரா அவர்கள் சென்னை லட்சுமிபுரம் பிராமணர் அமைப்பில் ஆற்றிய உரை; மற்றும் 1944க்கு முன் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களில், 'பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் அறைக்குள் தனிப்பட்ட உரையாடல்களில்' விமர்சிக்காமல், பகிரங்கமாக முத்துச்சாமி வல்லத்தரசு, ஜீவா போன்றவர்கள் எழுதிய மடல்களை அப்படியே 'குடிஅரசில்' வெளியிட்டு, விளக்கமும் வெளியிட்டார் ஈ.வெ.ரா. 'அறைக்குள் ஒரு விமர்சனம்; வெளியில் பொது அரங்கில் பாராட்டு' என்ற இரட்டை வேடப்போக்கானது, தி.மு.க தொடங்கிய பின் 'வளர்ந்த' போக்காகும்; மக்களை 'உணர்ச்சிபூர்வ ஆடுகளாக' கருதும் 'மேய்ப்பர் மனநோயாளிகளும்' வளர்வதை ஊக்குவித்து. இன்று எல்லா கட்சிகளிலும் அந்த நோயானது, எந்த அளவுக்கு பற்றியுள்ளது? என்றும், ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.
(வளரும்)
No comments:
Post a Comment