Thursday, December 3, 2020

 

தமிழக பா.ஜ.கவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 'அனுகூல சத்ருவாக' மாரிதாஸ்?

 

இணையத்தில் தற்செயலாக முதல் முறையாக மாரிதாஸின் காணொளியைப் பார்த்து வியந்தேன்.

தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை இலங்கையில் முதலீடு செய்ததுள்ளது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு நவீன யுத்திகளோடு விளக்கியிருந்தார்.

2014இல் மோடி பிரதமரான பின்னர் தமிழ்நாட்டின் ஊழல் திமிங்கிலங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழ்நாடானது திராவிட ஊழலில் இருந்து விடுபடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்திருப்பவர்களில் நானும் ஓருவன். ஆனாலும் மோடி தமிழ்நாட்டை ஊழலில் இருந்து மீட்பார் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் படித்த பிராமணரல்லாத வெகு சிலரில் நானும் ஒருவன்.

ஆனால் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கருணாநிதி , மாறன், சசிகலா மற்றும் அவர்களின் பினாமிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனைகள் எல்லாம் அவர்களை அச்சுறுத்தி பா.ஜ.கவின் சுயநலன்களுக்காக பணிய வைக்கும் முயற்சிகளே ஆகும்;

என்ற கருத்தானது பொதுமக்களிடம் வளர்ந்து வருகிறதா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் முறை ஒத்தி வைக்கப்பட்டு தினகரன் வீட்டில் சோதனைகள் நடந்து. தினகரனும் தேர்தல் கமிசன் இடைத்தரகரும் கைது செய்யப்பட்டு, தேர்தல் கமிசனில் தினகரனுக்கு உதவிய அதிகாரி அகப்படுவார், என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் வளர்த்தன. அதற்கு மாறாக தினகரன் விடுதலையாகி, அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வாக்குக்கு பணம் விநியோகித்த செய்தியும் வெளியாகி, பா.ஜ.கவை நோட்டாக்கட்சியாக்கி வெற்றி பெற்றார். இன்று வரை அந்த வழக்கு 'எந்த வேகத்தில்' அமுங்கிப் போனது? பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று 'சட்டத்தின் ஆட்சி' பாதுகாவலர்களும், தமிழக பா.ஜ.கவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இடையில் ஜெகத்ரட்சகன் போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எல்லாம் பா.ஜ.கவில் சேரலாம், என்ற செய்திகளும் ஊடகங்களில் வெளிப்பட்டன.

பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநில சிறையில் இருந்து, 'நன்னடத்தை' காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார் என்ற செய்திகள் வெளிவந்ததானது, தமிழ்நாட்டு மக்களிடையே தமிழக பா.ஜ.கவிற்கு எந்த அளவு கெட்ட பெயரை வளர்த்தது? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

அடுத்து மாரிதாஸின் காணொளியில் கீழ்வருவது வெளிப்பட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சிறையில் சசிகலாவின் அராஜகங்களை குறிப்பிடாமல், முன்கூட்டியே சசிகலா விடுதலையாவதற்கான நியாயங்களை காணொளி மூலமாக மாரிதாஸ் வெளிப்படுத்தி சசிகலா ஆதரவாளர்களை மகிழ்வித்தவர் ஆவார்.

எம்.ஜி.ஆர் இருந்தது வரையில் முதல்வராக முடியாத கருணாநிதி, எம்.ஜி.ஆர் மறைந்த பின் 1996லும், 2006லும் முதல்வரானதற்கு சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த கோபமானது முக்கிய காரணமாகும். சசிகலா குடும்ப அரசியல் மீது மக்களுக்கு இருந்த கோபமானது, கருணாநிதி குடும்ப அரசியல் மீது இருந்த வெறுப்பை விட அதிகமானதே காரணமாகும்.

வரும் 2021 தேர்தலில் சசிகலா ஆதரவு கூட்டணியா? தி.மு.க கூட்டணியா? என்பது குவியமானால், தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும், உதயநிதி மூலமாக தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது சீர் குலைந்து வரும் நிலையிலும். மாரிதாஸ் போன்றவர்களின் பங்களிப்பும் அந்த தி.மு.க வெற்றியில் இடம் பெறும்.

மு.க.அழகிரி என்றாலே, மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் எரிந்து பத்திரிக்கையாளர்கள் அநியாயமாக இறந்ததே மக்களுக்கு ஞாபகம் வரும். மு.க அழகிரியின் ஆசிர்வாதத்தோடு பா.ஜ.கவில் நடிகர் நெப்போலியன் சேர்ந்து, உடனே தமிழக பா.ஜ.க துணைத்தலைவரானார். தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி, எச்.ராஜா, மு.க.அழகிரியை தமது நண்பராக அறிவித்து, மு.க.அழகிரி விரைவில் பா.ஜ.கவில் சேர்வார், என்று அறிவித்துள்ளார்.

எச்.ராஜா, மாரிதாஸ் போன்ற இன்னும் பலரின் பங்களிப்புடன், தமிழ்நாட்டு மக்களின் நாடித்துடிப்புகளுக்கு எதிரான திசையில்,  சசிகலா, மு.க.அழகிரி சார்புடன் 2014 முதல் தமிழக பா.ஜ.க பயணிப்பதானது தமிழ்நாட்டின் துரதிஷ்டமே ஆகும். உதயநிதி மூலமாக தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப்பின்னலானது அதிவேகமாக சீர்குலைந்து வருவதால், தி.மு.க ஆட்சியைப் பிடிக்காது, என்பது எனது கணிப்பாகும். 1952 தேர்தலைப் போல 2021 தேர்தல் முடிவுகள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

தமிழக பா.ஜ.க தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலை சரியாக விளங்கிக் கொண்டு, சரியான திசையில் பயணிப்பது தாமதாவது ஆபத்தாகும்  ஏனெனில் இந்தியாவிலேயே நோஞ்சான் மாநிலமாக தமிழ்நாடு இனியும் நீடித்தால், (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html   )

சமுக காங்கிரின் நோயில் சிக்கும் ஆபத்தும் கூடி வருகிறது.

இந்தியாவுடன் ஒட்டாத 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிக்கலுடன் அரசியல் நீக்கம் (depoliticize) வளர்ந்துள்ள தமிழ்நாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இடையே நோஞ்சான் கட்சிகள் மூலமாக இடைவெளி நீண்டகாலம் நீடிக்குமானால், அந்த அபாயமானது மீளமுடியாத (irreversible) நிலையை எட்டிவிடும்.

மலாய் - சீன இனக்கலவரம் வெடித்து 'சமூக காங்கிரின்' பகுதியாக சிங்கப்பூர் மாறியதாலேயே, தனிநாடு கோரிக்கை இல்லாமலேயே, சிங்கப்பூரை மலேசியா தாமாகவே துண்டித்து தனிநாடாகப் பயணிக்கச் செய்தது.

ஊழலில், பொது ஒழுக்கக்கேட்டில் இன்றைய தமிழ்நாட்டைப் போலவே, அந்த காலக்கட்டத்தில் (1960களில்) சிங்கப்பூர் இருந்ததை, சிங்கப்பூரில் புகழ் பெற்ற நடன ஆசிரியர் மறைந்த பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார். சிங்கப்பூரானது வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு சீரடைந்ததற்கு, மறைந்த லீ குவான் யூ முக்கிய காரணமாவார். அதனை அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களே, அவர் மறைந்த பின் நடந்த இறுதி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்கள்; என்றும் கேள்விப்பட்டேன். லீ குவான் யூ மறைந்ததற்கு சிங்கப்பூரில் விடுமுறை விடப்படவில்லை. தமது காலத்திற்குப் பிறகு, தாம் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்றக்கூடாது என்றும், இடித்துத்தரைமட்டமாக்கி விட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு மறைந்தார்.

நேர்மையான சுய சம்பாத்தியம் இன்றி, அரசியலில் நுழைந்து, ஊழல் வழிகளில் பணக்காரர் ஆன தலைவரல்ல‌ லீ குவான் யூ. 1960களில் விடுதலையான சிங்கப்பூரானது, லீ குவான் யூவுக்குப் பதிலாக, ஊழல் கொள்ளைக்குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்தால், இன்று உலகில் ஊழல் குடும்ப ஆட்சிகளில் சிக்கி சீரழிந்து வரும் நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இருந்திருக்கும். லீ குவான் யூவும், அவரின் கட்சியும் நோஞ்சானாக இல்லாமல், பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஊழல் ஒழிப்பில்  வலிமையுள்ளவர்களாக இருந்ததால், சிங்கப்பூர் தப்பித்தது. நோஞ்சான் நோயின் முக்கிய அம்சமே 'ஊழலுடன் சமரசம்' என்பதை, அந்நோயில் இருந்து விடுபட்ட‌ சிங்கப்பூர் உணர்த்தியுள்ளது.

மலேசியா தமது நாட்டின் நலனுக்குக் கேடாக இருப்பதாகக் கருதி, தனிநாடு கோரிக்கையே இல்லாத நிலையில் சிங்கப்பூரை துண்டித்து தனிநாடாக்கியது.1960களில் விடுதலையான சிங்கப்பூரானது, லீ குவான் யூவுக்குப் பதிலாக, ஊழல் கொள்ளைக்குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

என்ற கேள்விக்கு விடையாக, இந்தியாவின் சமூக காங்கிரின் பகுதியாக தமிழ்நாடு மாறி, இந்தியாவின் நலனுக்குக் கேடாக இருப்பதாகக் கருதி துண்டிக்ப்படும் தமிழ்நாடு இருக்கும். தமிழ்நாட்டின் பிரிவினைக் கட்சிகள் எல்லாம் ஊழலுடன் சமரசமாகி, வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்களின் ஆதரவுடன் பயணிப்பதும், கிறித்துவ முஸ்லீம் மதமாற்றங்கள் மூலமாக இந்தியாவுடன் ஒட்டாதவர்களின் எண்ணிகை அதிகரித்து வருவதும், அதற்கு வினையூக்கி (catalyst) ஆகும். அது நடந்தால், 1944இல் ஈ.வெ.ரா மேற்கொண்ட பாதகமான சமூக மடைமாற்றத்தின் விளைவாகவே, அது வரலாற்றில் இடம் பெறும்.

அந்த பாதக மடைமாற்ற சமூக செயல்நுட்பத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் முயற்சியே, வைக்கம் ஈ.வெ.ராவை 'பெரியார்' சிறையில் இருந்து மீட்கும் முயற்சியாகும். மாரிதாஸ் போன்றவர்கள் வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ராவின் பங்களிப்பினை இழிவுபடுத்தி வரும் காணொளிகளைப் பார்த்து, அதன்பின் பழ.அதியமானின் 'வைக்கம் போராட்டம்' நூலினை முழுவதும் படித்தால், தமிழக பா.ஜ.கவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த அளவுக்கு பாதகமான 'அனுகூல சத்ருவாக', தமது வரைஎல்லைகள்(limitations) தெரியாமல் மாரிதாஸ் போன்றவர்கள் பயணித்து வருகிறார்கள்? என்பது தெளிவாகும்.

காலம் தாழ்ந்து தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலைத் தீர்த்து, தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் இணைக்க பா.ஜ.க தலைவர் எல்.முருகனும், துணைத்தலைவர் அண்ணாமலையும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் எவ்வாறு சீர் குலைந்து வருகின்றன? என்பதும் தெளிவாகும்.

தமிழக பா.ஜ.கவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 'அனுகூல சத்ருவாக' மாரிதாஸ் போன்றவர்கள் பயணிப்பதை அறிவுபூர்வமாக விமர்சித்து, உரிய திருத்தங்கள் மேற்கொண்டால், மேற்குறிப்பிட்ட ஆபத்தில் இருந்து தமிழ்நாடு தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது. கந்தன் கருணையாலும் முருகன் அருளாலும் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

No comments:

Post a Comment