Monday, February 18, 2019


வாழ்க்கையின் ஓட்டத்தில், செயல் சாத்தியம் அறிந்த‌ 'சுதந்திரர்களாக' வாழும் இரகசியங்கள்(3)


'சமூக காங்கிரின்' (Social Gangrene) நோய்க்கிருமிகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை?


பல வருடங்களுக்கு முன், தமக்கு நெருக்கமான, அப்போது சற்று வசதி குறைவான உறவினரின் குழந்தையை தமது வீட்டில் வைத்து, ஆங்கிலவழி விளையாட்டுப்பள்ளியில் சேர்த்து;

'அம்மா, அப்பா' தெரியாமல், 'மம்மி, டாடி'யுடன், 'uniform, neck tie, Shoes' வாங்கிக் கொடுத்து, அடிப்படைக்கல்வி வரை தாம் படிக்க வைத்ததை, சில மாதங்களுக்கு முன் பெருமையுடன் நினைவு கூர்ந்து என்னிடம் விளக்கிச் சொன்னார் ஒரு பெண்மணி.

வசதி வர ஆரம்பித்தவுடன், அந்த குழந்தையின் பெற்றோர்கள் தமது வீட்டிலேயே படிக்க வைத்து, வருடங்கள் ஓடி, இன்று அந்த குழந்தை கல்லூரி மாணவராகி விட்டார். இன்று அதிக வசதியுடன் வாழும் பெற்றோர் தம்மை மதிக்கவில்லையென்றாலும், இன்று கல்லூரி மாணவராயிருக்கும் 'அந்த' குழந்தைக்கு தம் மீது வளர்த்த பாசம் இருக்கும்;

என்பதையும், அதே பெருமையுடன் விளக்கினார்.

சில வாரங்களுக்கு முன் உறவினர் குடும்ப நிகழ்ச்சியில், 'அந்த' பெற்றோர்களுடன் 'அந்த' கல்லூரி மாணவரும் வந்திருக்கிறார். தமது பெற்றோர்களைப் போலவே, அந்த மாணவரும், தம்மை விட ஒப்பீட்டளவில் வசதி குறைவான நிலையில் இன்றுள்ள அந்த பெண்மணியுடன் பேசுவதைத் தவிர்த்து உதாசீனப்படுத்தியுள்ளனர்.

அதனையும் அந்த பெண்மணி என்னிடம் வருத்தத்துடன் விளக்கினார்.

குழந்தைகள் ஆரம்பப்பள்ளி வரையில் தாய்மொழிவழியில் படிக்காத காரணத்தால், தமிழ்நாட்டில் அவர்களும், அவர்களின் பெற்றோர்களும் 'சுயநல மனித மிருகங்களாக' நடமாடுவது பற்றிய எனது அனுபவங்களை எல்லாம் ஏற்கனவே அவ்வப்போது நான் அவரிடம் விளக்கியிருந்தேன். அவரது மேலே குறிப்பிட்ட அனுபவமும் அந்த வகையையேச் சாரும் என்று நான் சொன்னவுடன், தாமதமின்றி, "ஆமாம் சார், அது தான் காரணம்' என்று உடனே அவர் ஒப்புக்கொண்டார்.

உரையாடலில் நாம் வெளிப்படுத்தும் கருத்தானது 'ஒத்திசைவு ஏற்புக்கு' (Resonance Reception) உள்ளாகும் வாய்ப்பிருப்பதானது, அப்போது எனக்கு புரிந்தது.

தாய்மொழிவழிக்கல்வியால் குழந்தைகள் இயல்பான வளர்ச்சி திரிந்து, தமிழ்நாட்டில் 'சுயநலமிருக' திசையில் வளருவது தொடர்பான அனுபவங்களை எல்லாம் அவ்வப்போது அவரிடம் பகிர்ந்து கொண்டதன் விளைவே, அந்த 'ஒத்திசைவு ஏற்புஆகும்.

நாம் வாழும் வாழ்க்கையை ஒரே நேரத்தில் நமக்காகவும், சமூகத்திற்காகவும் சமன் செய்து (Balance) வாழும்போது,  நம்மையறியாமலேயே நாம் ஒரு சமூக விஞ்ஞானியாகவும் (Social Scientist) வாழும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வாழும் போது, கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) எல்லாம் வேறு வழியில் கிடைக்க வாய்ப்பில்லாத உள்ளீடுகளாகவும் இருக்கக்கூடும்.

அது தொடர்பான அனுபவங்களில் ஒன்றே மேலே குறிப்பிட்டதாகும்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் கிடைத்த உள்ளீடு:

கிராமத்தில் சிறு விவசாயம் மற்றும் கூலி வேலை கணவன் பார்க்க, அருகாமை நகரில் ஒரு வீட்டில் தங்கி முழுநேர பணியாளாக மனைவி வேலை பார்த்து, தமது ஒரே மகனை ஒரு பெருநகர பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். நிறைய 'Arrears' உடன் படித்த மகன், தனக்கு மோட்டர் சைக்கிள் வாங்கித் தருமாறு நச்சரிக்க, அதற்கான பணம் தம்மிடம் இல்லை என அந்த தாய் தெரிவித்தார். 'பின் ஏன் என்னை மகனாக பெத்த?' என்று மகன் கோபமாக கேட்டான்.

கடந்த 10 வருடங்களாக, இது போன்ற 'லாஜிக்', மேற்குறிப்பிட்ட குடும்பப் பின்னணியுள்ள கல்லூரி மாணவர்களிடம் இருந்து வெளிப்படுவதும், எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

இது போன்ற அனுபவங்களை எனது சமூக வட்டத்தில் விவாதிப்பதன் மூலமாக கிடைக்கும் பின்னூட்டங்களும் எனக்கு மதிப்பு வாய்ந்த உள்ளீடுகளாக வெளிப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிராமங்களிலும், நகரங்களில் வசதி குறைவாக வாழ்க்கையைத் தொடங்கிய குடும்பங்களிலும், மேலே குறிப்பிட்ட போக்குகள் அதிகரித்து வருகின்றன. எனவே இனிமேல் தமக்கு தெரிந்த குடும்பங்களில் மேலே குறிப்பிட்டவாறு படித்து, இன்று கல்லூரி மாணவர்களாயிருப்பவர்கள் தமது உற்றத்தையும் சுற்றத்தையும் எப்படி மதிக்கிறார்கள்? அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து இன்று கல்லூரி மாணவர்களாயிருப்பவர்கள் எப்படி மதிக்கிறார்கள்? என்று கண்காணித்து தெரிவிக்குமாறு, மேலே குறிப்பிட்ட பெண்மணியிடம் கோரிக்கை வைத்து, அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு தெரியாமலேயே, அவரை ஒரு சமூக விஞ்ஞானியாக செயல்பட வைத்துள்ளேன். என்னைச் சுற்றியுள்ள அது போன்ற சமூக விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிகளின் வெளிப்பாடே, எனது பதிவுகளின் அடித்தளமாகும்.

நமது வாழ்வையே சமூகவியல் பரிசோதனையாக (Sociological Experiment) கருதி, ஒரே நேரத்தில் நமக்கு நாமே முதல் மனிதராக இன்ப துன்பங்களை அனுபவித்து, மூன்றாம் மனிதராக நெறிப்படுத்தி வாழும் இரகசியமானது,  ஆடம்ஸ் ஸ்மித்தின் 'Theory of Moral Sentiments'(https://en.wikipedia.org/wiki/The_Theory_of_Moral_Sentiments) என்ற நூலில் வெளிப்பட்டுள்ளது
(‘படைப்புக்கான(Creative) கருக்களும், திறவுகோல்களும், நல்ல மற்ற தீய எண்ணங்களும் தொடர்புடைய தோற்றுவாய்கள் பற்றிய ஆய்வுகள்?’; 
http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

குக்கிராமங்களில் கூட ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி வரும் தமிழ்நாட்டில், விளையாட்டுப் பள்ளி முதல் அடிப்படைக்கல்வியை ஆங்கிலவழியில் படித்து இன்று கல்லூரி மாணவர்களாகவும். இளைஞர்களாகவும் இருப்பவர்களில்

நான் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், பயணங்களில், எனது உற்றத்தில், சுற்றத்தில், எனது கவனத்தை ஈர்த்தவர்களை எல்லாம் கூர்ந்து கவனித்து பெற்ற அனுபங்களை, கீழ்வருமாறு வெளிப்படுத்தியுள்ளேன்.

விளையாட்டுப் பள்ளி முதல் அடிப்படைக்கல்வியை ஆங்கிலவழியில் படித்து வளர்ந்தவர்களில் பெரும்பாலோர், தாம் எதிர்பார்க்கும் 'லாபத்திற்கு' லாயக்கற்ற பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது
(‘‘சொந்த காசில் சூன்யம்வைத்துக் கொள்பவர்களின் நாடாகி வருகிறதா, தமிழ்நாடு?’; 
http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

'திராவிட' கட்சிகள் வளர்ந்த பின்னணியில், ஊழலின் துணையுடன் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது தமிழ்நாட்டில் வளர்ந்த போக்கில், அவ்வாறு உற்றத்தையும், சுற்றத்தையும் 'நியூசென்ஸ்' என்று கருதும் போக்கில், தாம் எதிர்பார்க்கும் 'லாபத்திற்கு' லாயக்கற்ற தமது சொந்த கிராமத்தையும்/ஊரையும் தொடர்பறுத்து பயணிக்கும் போக்கும் கூடவே வளர்ந்ததாகூடுதலாக தம்மை ஆளாக்கிய கிராமத்தையும் பெற்றோரையும், அதே போக்கில் தொடர்பறுத்து, 'முற்போக்காக' வலம் வர 'பெரியார்' முகமூடியும் பயன்பட்டதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அத்தகையோரை அடையாளம் கண்டு ஒதுக்காமல், அவர்களோடு 'ஒட்டி' பயணித்ததற்கு தண்டனையாக, அந்த 'வேரை' இழந்து வாழ்பவர்களையும் நானறிவேன்.

ஆனால் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் பல தலைமுறைகள் கடந்து, இன்றும் தமது வேரைத் தேடி சொந்த கிராமத்திற்கும், கோவில் திருவிழாவுக்கும் 'புனித யாத்திரை' போல பயணம் மேற்கொண்டு வருவதையும் நானறிவேன்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிவேகமாக அதிகரித்து வருகிறார்கள். ஆனால் சிங்கப்பூரில் ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழ்க்குடும்பப் பிள்ளைகள் எல்லாம் தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும், என்பது அரசாணையாகும். அவ்வாறு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். அந்த அளவுக்கு சிறந்த கல்விமுறையில், திறமையுள்ள தமிழாசிரியர்கள் பங்களிப்புடன் அந்த சாதனை நடந்து வருகிறது. சிங்கப்பூர், மலேசியா தொலைக்காட்சிகளில் ஆங்கில ஆதிக்கமற்ற தமிழையும் கேட்க முடிகிறது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்,சிங்கப்பூரில் ஒரு பிராமண நண்பரைச் சந்தித்தேன். அவர் முன்பு என்னுடன் பணியாற்றிய சக பேராசிரியர். பின் Non-Destructive Testing துறையில் நிபுணராகி, பல நாடுகளில் பணியாற்றி சிங்கப்பூரில் நிரந்தரமாக தமது குடும்பத்துடன் 'செட்டில்' ஆனார். உலக நாடுகளில் அவர் பணி தொடர்பாக நடந்த கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் தத்தம் தாய்மொழியினருடன் தமது தாய்மொழியில் உரையாடுவதைக் கண்ட மேற்குறிப்பிட்ட நண்பர் போன்றவர்கள் எல்லாம் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழில் உரையாட தூண்டப்பட்டனர். அதன் தொடர்விளைவாக, தமது குடும்பப் பிள்ளைகள் எல்லாம் தமிழில் சரளமாக பேசவும் எழுதவும் தனிப்பயிற்சி கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பொதுவாக ஒரே தாய்மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியில் தான் உரையாடுகின்றனர்.அதில் தமிழர்கள் மட்டுமே, அதிலும் அதிகம் படித்தவர்கள், பெரும்பாலும் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.அவர்களை 'ஏக்கமுடன்' பார்த்து,  மற்ற தமிழர்களும், அது போல நாமும் பேச வேண்டும் என்ற 'இலட்சியத்துடன்'(?) வாழ்கின்றனர். அத்தகையோரில் குடிப் பழக்கம் உடையவர்கள், மது போதையில் தப்பும் தவறுமாக தங்களுக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் பேசி, அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.’ 

அது மட்டுமல்ல, உற்றம், சுற்றம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளின் மகத்துவம் தெரியாமல்;

வசதியில் உயர்ந்தவர்களுக்கு நெருக்கமாகவும், தமக்கு லாபமானவர்களின் தொடர்புகளையே முக்கியமாகக் கருதியும்;

அத்தகையோர் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், மரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 'மட்டுமே' செல்லும் 'வாழ்வியல் புத்திசாலிகளையும்' நானறிவேன். 1970களிலிருந்து ஆங்கிலவழிப் பள்ளிகள் 'புற்றீசல்' போல வளர்ந்த போக்கில், வலுவான சமூகத் தூண்டலில், இயல்பில் பலகீனமானவர்களாக இருந்ததால் சிக்கியவர்களே, மேலே குறிப்பிட்ட 'வாழ்வியல் புத்திசாலிகளில்' பெரும்பாலோர் ஆவார்கள்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்அந்த போக்கில் 'எந்த'(?) குறுக்கு வழியிலாவது, 'அதி வேகப் பணக்காரன்' ஆனதமது மகனை/மகளை;


'ஈன்ற பொழுதிற்பெரிது உவக்கும் தன்மகனை
 'அவேபன்' எனக்கேட்ட தாய்'

'புதிய திருக்குறள்' (69); அவேபன்: 'தி வேகப் ணக்காரன்'

அரங்கேறி வரும் நாடாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது'அந்த' வளர்ச்சிப் போக்கில், 'மனித இழிவுக்கு இலக்கணமான' வழிகளில் பயணிக்கும் 'அவேபனுக்கு' நெருக்கமாகும் நோக்கில், உற்றம், சுற்றம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை எல்லாம் 'காவு' கொடுக்கும் மனிதர்கள் வளரும் நாடாகவும் 'திரிந்து' தமிழ்நாடு சீரழிந்தது(‘திரிந்தபுறநானூறு 182’; 
http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html )

சுமார் 5 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அடுத்து வருகிறது.

தஞ்சைப் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 'மெஸ்’(?) (டீ, காபி இருக்காது. சாப்பிட்ட இலையை நாமே எடுத்துப் போட வேண்டும்) தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்கும்.  

இயன்றவரை ஆங்கிலச் சொல்லைத் தவிர்க்கலாமே என்று கருதி,

" வெங்காய ஊத்தப்பம் வேண்டும்" என்றேன்.

சர்வர்'(?) குழம்பி "ஆனியன் ஊத்தப்பம் தானே சார் " என்றார்.

 ஆமென்றேன்.

 பின் சில நாட்கள் கழிந்து, அதே பகுதியில் உயர்தர (அதிக விலை) 'ஓட்டலிலும்' அதே அனுபவம் கிடைத்தது.

வாடகைக்காரிலும், ஆட்டோவிலும் செல்லும் சமயங்களில் திரும்புவதற்கு 'வலது' என்று சொன்னால் விளங்கிக் கொள்ளாத ஓட்டுநர் 'Right’ ' என்று சொன்னால் தான்;

'இடது' என்று சொன்னால் விளங்கிக் கொள்ளாத ஓட்டுநர் 'Left ' என்று சொன்னால் தான்;

விளங்கிக் கொள்கிறார்கள். அலுத்துப் போய், இப்போதெல்லாம் நான் அது போன்ற சமயங்களில் 'Right, Left ' என்று சொல்ல ஆரம்பித்து விட்டேன்.

மேலே குறிப்பிட்ட சிங்கப்பூரில் வாழும் எனது நண்பரின் வெளிநாட்டு அனுபவங்கள் அவரையும், அவர் குடும்பத்தினரையும் தமிழில் பேசத் தூண்டும் வகையில் இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் வாழ, ஆங்கிலம் அதிகமாக கலந்து பேசத் தூண்டும் வகையில் இருக்கிறது. தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்த மாணவர்களின் எண்ணிக்கையும், அதிவேகமாகக் குறைந்து வருகிறது.

மேலே குறிப்பிட்ட எனது சிங்கப்பூர் நண்பரைப் போல வாழ்பவர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம் தமிழில் பேசும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் சந்தித்த (தத்தம் தாய்மொழியில் எல்லா நாடுகளிலும் உரையாடியது) 'சமூகத் தூண்டலையும் (Social Induction)';

தமிழ்நாட்டில் அதற்கு எதிரான 'ஆங்கில மோக சமூகத் தூண்டலையும்',

ஒப்பிட்டு விவாதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டின் சமூகப்புலம் (Social Field) என்பதானது தமிழ்நாட்டில் வாழும் மனிதர்களிடமிருந்தே உருவாவதாகும். அந்த சமூகப்புலத்தில் வெளிப்படும் சமூகஆற்றல்  (Social Energy)  என்பவை எவ்வாறு உருவாகின்றன? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

சமூகப் புலத்தில் (Social Field) இருந்தே சமூகத் தூண்டல்  (Social Induction) உண்டாகும்.

அந்த சமூகத் தூண்டலின் விளைவாக, தமிழ்நாடானது, தமிழ்க் கூட்ட அழிவு நோயில்(Tamil colony collapse disorder- TCCD) (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) சிக்கியதன் காரணமாக, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் மற்றும் பண்பாடும் எவ்வளவு வேகமாக அழிந்து வருகின்றன‌, என்பதை வெளிப்படுத்தும் நோயின் அறிகுறிகள் யாவை? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ்நாட்டில் ஏரிகளும், ஆறுகளும், கிரானைட், தாது மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், ஊழல் பெரும்பசிக்கு இரையான காலக்கட்டத்தில் தான்;

மேலே குறிப்பிட்ட 'ஆங்கில வழிக்கல்வி வியாபாரம்' மூலமாக, 'ஆங்கில மோக சமூகத் தூண்டலுக்கு தமிழ்நாடு இரையாகியது.

தமிழ்நாட்டைச் சீரழித்து வரும் சமூகத் தூண்டலில், நாம் சிக்காமல் நம்மை எவ்வாறு பாதுகாத்து, ஆக்கபூர்வ திசையில் பயணிப்பது?

என்ற கேள்விக்கான விடையை, ஒவ்வொருவரும் தமது அறிவு, அனுபவ அடிப்படைகளிலேயே பெற முடியும். அதற்கு முதல்படியாக, தமது மனசாட்சிக்குட்ப்பட்டு, தம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி, தமது நிறை குறைகளைச் சரியாக அடையாளம் கண்டு, திருத்தி பயணிக்க வேண்டும். அறிவுபூர்வமாக அதற்கான தேடலில் ஈடுபடுவதும், தொடர்ந்து திருத்தி பயணிப்பதும், நமது வாழ்வின் உயிரோட்ட இயக்கமாக (Dynamic Life) இருக்க வேண்டும்.

தமது நிலைப்பாடுகள் தொடர்பாக உலகில் வெளிவரும் புதிய ஆய்வு முடிவுகளுடன் தொடர்பு கொள்ளும் உயிரோட்டம் இன்றி (Static Life), அதன் காரணமாகவே 'இறுகிப்போன' நிலைப்பாடுகளுடன், வாழும் போதே செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறு 'பிணமாக' வாழ்பவர்களே தமிழ்நாட்டை  சீரழித்து வரும் சமூகத் தூண்டலின் அடித்தளமாக பயன்பட்டு வருகிறார்கள்

விவாதப் பொருளுக்கான வரம்பை மீறி, விவாதத்தில் எதிர்நிலையில் உள்ளவரின் நேர்மையையும் அறிவையும் விவாதத்திற்குள் தன்னிச்சையாக நுழைத்து களங்கப்படுத்துவதும்;

தமக்கு ஆதாயமானவர்களைப் புகழும், பின் ஆதாயமில்லையெனில், அவர்களை இகழும் பண்பினை வெளிப்படுத்துவதும்;

'அவ்வாறு வாழும்' பிணங்களை அடையாளம் காண உதவும் அறிகுறிகளாகும்.

அத்தகையோரில் பலர் தம்மை 'வாழ்வியல் புத்திசாலிகளாகக்' கருதிக் கொண்டு, அரசியல் கொள்ளையர்களுக்கு நெருக்கமாகி 'பலன்கள்'(?) பெற்றும் வாழ்கிறார்கள்.

தமது குடும்பப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கிலவழிக்கல்வி, அரசு பள்ளிகளில் குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் பயிலும் அதே ஆங்கிலவழிக்கல்விக்கு எதிர்ப்பு, என்ற திசையில் பயணிக்கும் தமிழ்த் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், தமிழுக்குக் கேடான 'சமூக காங்கிரின் நோய்க்கிருமிகள்' ஆவார்கள்.

சர்க்கரை நோயாளிகளின் காலில் 'காங்கிரின்' (Gangrene) நோய் தொடங்கிய பின், அதில் ஊட்டம் பெற்று வளரும் கிருமிகள் போல, 'சமூக காங்கிரின் (Social Gangrene) நோய்க்கிருமிகளாக' அத்தகையோர் வாழ்கிறார்கள்
(Wet, or infected, gangrene is characterized by thriving bacteria; 
https://en.wikipedia.org/wiki/Gangrene )

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அத்தகைய மனிதர்கள் எல்லாம், 'சமூக ஒட்டுண்ணிகளாக' (social parasite) அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, வசதியுள்ளவர்களை 'ஒட்டி' வளரும் அவர்கள், மேலும் 'உறிஞ்ச' முடியாத நிலையில், அல்லது அடையாளம் கண்டு ஒதுக்கப்பட்ட நிலையில்,

அடுத்த 'விருந்தளிப்பவரோடு' (Host) 'ஒட்டி', சாகும் வரை தாம் 'ஏங்கிய சமூக நிலையை' அடைய முடியாமலேயே ' ஒட்டுண்ணிகளாகவே' ஓடிக் கொண்டிருப்பார்கள்
(’ One who attaches oneself to another person or group of people solely for the purpose of raising one's own social status. Unfortunately, diagnosis of having a social parasite can be made only after discovering that you have already been used, abused, and drained of all your resources. Once a social parasite has been discovered it quickly moves on and attaches itself to another victim. The cycle continues indefinitely as the parasite never achieves the social status it so badly desires.’;
https://www.urbandictionary.com/define.php?term=Social%20Parasite )

அகநேர்மையின்றி சுயலாப நோக்கில் வாழ்பவர்களை எல்லாம் 'சிற்றினம்' என்று சங்க இலக்கியங்கள் அடையாளம் காட்டியுள்ளன. சமூகப்புலமானது 'திரிந்த' திசையில் பயணிக்கும் சூழலானது, 'சிற்றின' மனிதர்கள் சமூக ஒட்டுண்ணிகளான சமூகக் காங்கிரின் கிருமிகளாகவலிமை பெறும் வாய்ப்புகளைக் கூட்டும்;

என்ற ஆய்விற்கு உகந்த களமாக தமிழ்நாடு உள்ளது.
( http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

மைக்ரோஉலகில் 'சமூக காங்கிரின்' (Social Gangrene) நோய்க்கிருமிகளின் வேரழிந்து வருவதால், தமிழ்நாட்டை சீரழித்த அரசியலானது அரசியல் நீக்கத்திற்கு உள்ளானது. அதன் தொடர்விளைவாக ஆதாய அரசியலே கட்சிகளின் அடித்தளமாகி, மேக்ரோ உலகில் 'சமூக காங்கிரின்' (Social Gangrene) நோய்க்கிருமிகளின் வாழ்வினை 'செயற்கை சுவாசத்தில்' நீட்டித்து வருகிறது. அதுவும் முடியும் போக்கிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் 'சிக்னல்' ஆனது. நம்மைச் சுற்றியுள்ள‌ 'சமூக காங்கிரின்' (Social Gangrene) நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அகற்றுவதே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நமது பங்களிப்பின் முதல்படியாகும்.

மேலே குறிப்பிட்டவாறு (Unfortunately, diagnosis of having a social parasite can be made only after discovering that you have already been used, abused, and drained of all your resources) நான் என்னைச் சுற்றியிருந்த சமூகக் கிருமிகளை எவ்வாறு கண்டுபிடித்து, அகற்றி, நானே பிரமிக்கும் வகையில் வளர்ந்த இரகசியத்தையும், ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின் தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது ஆய்வு முயற்சிகளில், நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றங்களும் ஏற்பட்டன.

வணங்கத்தகும் மனிதர்கள் எனது சமூக வட்டத்தில் இடம் பெறும் போக்குகளும் அதிகரித்தன. ‘உயிருடன் வாழும் பிணங்களின்நாற்றத்திலிருந்து விடுபட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியதே அதற்கு காரணமாகும்

சமூக சுவாசத்திற்கான (social breathing) ‘திறந்த காற்றோட்டம்' இருக்கும் பொழுது தான், நமது மனதுக்கு சரி என்று பட்டதையும், தவறு என்று பட்டதையும் தடையின்றி வெளிப்படுத்த முடியும். நம்மிடம் உள்ள தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்ட முன் வருவார்கள். நாமும் அதை பரிசிலித்து, சரியெனில் நம்மை திருத்திக் கொள்ள முடியும். ஒருவர் துயரப்படும் போது, லாப நட்ட நோக்கமின்றி அடுத்தவர் உதவ முடியும்.  மது இயல்போடு ஒட்டியஉள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) நாம் வாழவும், உண்மையான அன்புடன் நம்மை சுற்றியுள்ளவர்களையும், இயற்கையையும் நேசித்து வாழவும் முடியும்

தமிழ்நாட்டில் சமூக சுவாசத்திற்கான (social breathing) ‘திறந்த காற்றோட்டம்' ஒப்பீட்டளவில் மைக்ரோ உலகில் அதிகரித்தும், மேக்ரோ உலகில் குறைந்தும் வருகிறது. அந்த போக்கில் 'ஒத்திசைவாகும்' முயற்சியாக, எனது சமூக வட்டத்தில் இடம் பெறுபவர்களும், மைக்ரோ உலகில் அதிகரித்தும், மேக்ரோ உலகில் குறைந்தும் வருகிறார்கள்.

நமக்கும், நமக்குப் பிடித்தவர்களுக்கும் ஒரு அளவுகோல், நமக்கு பிடிக்காதவர்களுக்கு வேறு அளவுகோல், என்ற போக்கில் நாம் பயணிக்கவில்லை;

என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, ஒரு தனி மனித இராணுவம் போல வாழ்வது இன்றும் சாத்தியமே. அந்த போக்கில் நமக்கான தர அடையாளமானது (benchmark) பிரமிக்கும் வகையில் வலுவாகி, தரம் தாழ்ந்த திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் நம்மிடம் ஒட்ட முடியாத சமூக பிரிவாகவும், தரமுள்ளவர்களே நமது சமூக வட்டத்தில் இடம்பெறும் அளவுக்கும், ஒரு சமூகத் தளவிளைவும் வெளிப்படும்  ஒரு சமூகப் பொறியியல் வினைஊக்கியாக (Social Engineering Catalyst) நாம் வாழ்வதும் அதன் மூலமாக வெளிப்படும்.

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு அதுவே வழிகாட்டும்.

No comments:

Post a Comment