Friday, June 28, 2019


'டாஸ்மாக்' உள்ளிட்ட சீரழிவுகளும்

ஊழல் சங்கம சமூக செயல்நுட்பமும்



பாராட்டுக்கள் என்பவை எல்லாம், ஏமாந்தால் நம்மை அதற்காக ஏங்கும் மனநோயாளிகளாக மாற்றி விடும்; நமக்கான ரசிகர் வட்டம் வளர்ப்பதிலேயே, நமது ஆற்றலின் பெரும்பங்கு விரயமாகும் அபாயமும் உண்டு;

என்று நம்மை எச்சரிக்கும் வகையில், பலர் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 'டாஸ்மாக்' உள்ளிட்ட சீரழிவுகளுக்குக் காரணமான‌ ஊழல் சங்கம சமூக செயல்நுட்பப் பிதாக்களான திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் தலைவர்களை புரவலர்களாகக் கொண்டு, வெளியில் தெரிந்தும் தெரியாமலும் பலன்கள் அனுபவித்துக் கொண்டு;

'ஈழ விடுதலை, தனித்தமிழ்நாடு, பார்ப்பன எதிர்ப்பு, மனித உரிமை, சுற்றுச்சூழல்' உள்ளிட்ட இன்னும் பல லேபிள்களில் ஊடக வெளிச்சத்துடன், தமிழ்நாட்டில் பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே புரவலர்கள் '90% பிராமணர்கள்' தமக்கு நெருக்கம் என்று அறிவித்து, கோவில் கும்பாபிசேகம் உள்ளிட்ட காரியங்களுக்கும் புரவலர்களாக வலம் வந்து;

தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள முக்கிய நபர்களிடம் 'நல்லுறவு' கொண்டு, தமிழ்நாட்டை அடிமைப்படுத்தியதன் விளைவாகவே;

'டாஸ்மாக்' உள்ளிட்ட சீரழிவுகளுக்கு எதிராக ஆங்காங்கே வெளிப்படும் போராட்டங்களை எல்லாம், 'புத்திசாலித்தனமாக' கையாண்டு மலடாக்கி வருகிறார்கள்; 'அலெக்சிதிமிக்' (alexithymic) மனநோய் வளர்ச்சியால் விளைந்த தற்கொலைகளையும் ஊக்குவித்துக் கொண்டு.
( http://tamilsdirection.blogspot.com/2019/06/alexithymic.html )

தமிழ்நாட்டை சீரழித்தவர்கள் ஆயிற்றே? என்று கவலைப்படாமல், தமக்குள்ள திறமைகளை எல்லாம் 'அறிவு விபச்சார மூலதனமாக்கி', அவ்வாறு சீரழித்தவர்களுடன் நெருக்கமாகி, 'அந்த' மனநோயாளிகள் எல்லாம் பலன்கள் அனுபவித்து, அத்தோடு அடங்காமல், 'முற்போக்கு யோக்கியர்களாகவும்' தம்மிடம் ஏமாந்தவர்களிடம் பாராட்டுகளும் 'அனுபவித்து'(?), 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்ந்து, நம்மை எச்சரிப்பவர்களும் அவர்களே ஆவர்.’ 

அவ்வாறு 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்ந்து, தம்மிடம் ஏமாந்தவர்களிடம் பாராட்டும் பெறுபவர்களின் 'அசாத்திய திறமையானது', மக்களை ஈர்த்துள்ள பொதுப் பிரச்சினைகளில் அவர்கள் காட்டும் எதிர்ப்புகளிலும், போராட்டங்களிலும் வெளிப்படும்.

உதாரணத்திற்கு, 'டாஸ்மாக்' தொடர்பாக ஆங்காங்கே வெளிப்படும் எதிர்ப்புகளில், அதிக ஊடக வெளிச்சத்திற்கானவைகளை அடையாளம் கண்டு, அவற்றில் கலந்து கொண்டு வெளிச்சம் போடுபவர்களின் வாழ்க்கையானது:

.வெ.ரா சுட்டிக்காட்டிய அளவுகோலில் எந்த 'யோக்கியதையில்' உள்ளது

சாமான்ய வாழ்வு நிலையில் இல்லாமல், ஏசி கார், விமானப்பயணம் என்று சொகுசாக வாழும் அந்த 'புரட்சியாளர்களின்' வருமான மூலங்களில் வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) உள்ளதா? என்று கவலைப்படாத ஏமாளிகள் இருக்கும் வரை, அத்தகையோரின் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு எந்த குந்தகமும் வர வாய்ப்பில்லை.

உதாரணமாக, இன்று 'டாஸ்மாக்' எதிர்ப்புப் போராட்டத்தினை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசியலில் 'கீரி, பாம்பு' மோதல் நாடகங்களை வெளிப்படுத்திக் கொண்டே, 'கீரிக்கும் பாம்புக்கும்' வேண்டியவர்களின் மதுபான ஆலைகளில் இருந்து, 'டாஸ்மாக்' 'சப்ளை'யானது, 'எந்த' வெளியில் தெரியாத 'புரிந்துணர்வு ஓப்பந்த' அடிப்படையில் செயல்பட்டு வருகிறது?

மேற்குறிப்பிட்ட 'கீரிக்கும் பாம்புக்கும்' வேண்டியவர்களின் இதழ்களும் தொலைக்காட்சிகளும், டாஸ்மாக் எதிர்ப்பில் குளிர் காய்வதானது, அதற்காக 'அந்த' ஊடகங்களைப் பாராட்டும் ஏமாளிகள் இருக்கும் வரை தொடர்வதையும் தடுக்க முடியுமா?

இன்று கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வர் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி நீர் வழங்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரிய அமைக்க எதிர்ப்பதை கண்டித்து, டெல்லியில் சோனியா வீட்டு முன்பும், சென்னையில் சத்தியமூர்த்தி பவன் முன்பும் போராட்டம் நடத்துவதை தவிர்த்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயி சங்க தலைவர்கள் எல்லாம், மோடி எதிர்ப்புக்காக விவசாயிகள் பேரில் போராட்டமும், பிரச்சாரமும் செய்வது போல;

முள்ளிவாய்க்கால் போரின் போது, .நாவில் ராஜபட்சேயின் பாதுகாவலர்களாக செயல்பட்ட ரஷ்யாவையும், சீனாவையும் கண்டிக்காமல், தமிழ்நாட்டில் ராஜபட்சேக்கு எதிராக நடந்த பிரச்சாரங்களில், போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கட்சிகள் எல்லாம் பங்கேற்றது போல;

மேற்குறிப்பிட்ட , 'கீரிக்கும் பாம்புக்கும்' வேண்டியவர்களின் மதுபான ஆலைகளை மூட போராட்டம் நடத்த வேண்டிய அளவுக்கு பொது அரங்கில் வலிமையுடையவர்கள் எல்லாம், அதைத் தவிர்த்து;

வெளியில் தெரிந்தும், தெரியாமலும், 'கீரியிடமும்' அல்லது 'பாம்பிடமும்' பலன்களும் அனுபவித்துக் கொண்டு;

'டாஸ்மாக்' தொடர்பாக ஆங்காங்கே வெளிப்படும் எதிர்ப்புகளில், அதிக ஊடக வெளிச்சத்திற்கானவைகளை அடையாளம் கண்டு, அவற்றில் கலந்து கொண்டு வெளிச்சம் போடுவதானது, இரட்டை வேட நாடகமாகாதா?

நேர்மையான முறையில் சம்பாதிக்க மனமும், திறமையும் இல்லாதவர்களுக்கு, குறுக்கு வழிகளில் 'அதிவேக பணக்காரர்' ஆக உதவும் பொதுவாழ்வு வியாபார மூலதனமாக, 'பார்ப்பன எதிர்ப்பு என்பதானது பயன்பட்டு வருவதை, ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகள்'?’; 

அது போலவே, .வெ.ரா மற்றும் அவர் வழியில் என் போன்றஎண்ணற்றோர் பங்களித்ததை எல்லாம், 'முதலில்லாத மூலதனமாக்கி', எவ்வாறு தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, பொதுவாழ்வு வியாபாரமானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

அந்த வகையில், ‘மண்ணோடு பற்றற்ற ஐரோப்பிய கனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் இலங்கை தமிழர்களிடையே உருவான போக்கிற்கு;

தமிழ்நாட்டில் இயற்கை கனி வளங்களை சூறையாடிய 'ஊழல்' கொள்ளையர்களை எதிர்க்காமல், 'மண்ணோடு பற்றற்ற தனித்தமிழ்நாடுகனவுகளில் வாழுகின்ற உதிரிகளின் சமூகம் உருவான போக்கானது;

எந்த அளவுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது? என்ற ஆய்விற்கு;

மேலே குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.’ 

1980கள் முதலாக‌, தமிழ்நாட்டில் ஊழல் சுனாமியில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணம் தொடங்கியதும்;

அதே ஊழல் சுனாமியில், ஏரிகளும் ஆறுகளும் (இன்றைய தண்ணீர் பிரச்சினைக்குக் காரணமாகும் வகையில்) கிரானைட் மலைகளும், தாது மணலும், காடுகளும், கோவில் சிலைகளும் இரையாகத் தொடங்கியதும்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் முதல் நிகழ்காலத்தில் சத்யம் தியேட்டர்ஸ் வரை, இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரிக்கத் தொடங்கியதும்;

அங்கிங்கெனாதபடி எங்கும் 'டாஸ்மாக்' திறந்து, பள்ளி மாணவ மாணவிகள் குடிக்கத் தொடங்கியதும்;

எந்த அளவுக்கு மேற்குறிப்பிட்ட சங்கமமான சமூக செயல்நுட்பத்துடன் தொடர்புடையது? என்று ஆராய்வதும் அவசியமாகி விட்டது'அந்த' ஆராய்ச்சியில், இந்தியாவையே தமிழ்நாட்டு ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது, தமிழ்நாட்டிற்கு இருக்கிறதா? என்ற கேள்வியும் இடம் பெற வேண்டும். (http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html  )

எதைப்பற்றி பேசினாலும், எழுதினாலும், அதில் தமக்கு (பணம், புகழ்) என்ன லாபம்? என்ற சுயலாபக் கணக்கில் வாழும் 'அறிவு ஜீவிகள்' எல்லாம் ஊடக வெளிச்சத்தில் செல்வாக்குடன் வலம் வருவதானது நீடிக்கும் வரையில், மேக்ரோ உலகத்தில் அந்த ஆராய்ச்சிக்கும், சமூக நேர்மையுடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்திற்கும், தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை.

நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் வாழ்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் இழப்புகளை எளிதில் சந்திக்க முடியும் என்பதால்;

தமிழ்நாட்டில் 'உண்மையான தன்மானத்துடன்' வாழ்பவர்கள் எல்லாம் ஒப்பீட்டளவில் நடுமட்டத்திலும், கீழ்மட்டத்திலும் அதிகமாகவும், மேல் மட்டத்தில் குறைவாகவும் இருப்பதன் காரணமாக; 

கல்லூரி மாணவர்கள் மற்றும் சாமான்யர்கள் நிறைந்த மைக்ரோஉலகில், அது எளிதில் சாத்தியமாகி வருகிறதுதன்மானமிழந்து தரகு, ஊழல் வழிகளில், 'அதிவேகப் பணக்காரர்' ஆனவர்கள் எல்லாம், தன்மானமுள்ளவர்களின் சமூக வட்டங்களில் கேலிப்பொருளாகி வருகிறார்கள். அதன் தொடர்விளைவாக, 'டாஸ்மாக்' உள்ளிட்ட சீரழிவுகளை எதிர்த்து ஆங்காங்கே வெளிப்பட்டு வரும் போராட்டங்களில், பொதுவாழ்வு வியாபாரிகளை ஓரங்கட்டுவது சாத்தியமாகி வருகிறது. அந்தபோக்கின் மூலமாகவே, ஊழல் சங்கம சமூக செயல்நுட்பத்தினை அம்பலப்படுத்தி வீழ்த்த முடியும்.

மைக்ரோ உலக தொடர்பு முறிவில், மேக்ரோ உலகில் வெளிப்படும் கட்சிகளும், தலைவர்களும், அவர்களின் 'பணத்துவா' இயக்கும் அமாவாசைகளும், மத்திய அரசின் ஊழல் ஒழிப்பு மந்தமாக இருக்கும் வரை தான் வெளிச்சம் போட முடியும். சீர் குலைந்துள்ள அரசு நிர்வாகத்திற்கும், ஊழலுக்கும் எதிராக, மைக்ரோ உலகில் ஒருங்கிணைக்கப்படாமல் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருக்கும்  போராட்டங்களின் வீச்சு அதிகரிக்கும் போது, சென்னை வெள்ள நிவாரணத்தின் போது வெளிப்பட்டது போன்ற மாணவர்கள், படித்த இளைஞர்களின் ஒருங்கிணைப்பானது, அந்த போராட்டங்களின் சமூக வெள்ளத்தில் வெளிப்படும் காலமும் அதிக தொலைவில் இல்லை. மைக்ரோ உலகத்துடன் உயிரோட்டமுள்ள தொடர்புள்ள மேக்ரோ உலகம் தமிழ்நாட்டில் மலரும் காலம் நெருங்கி வருகிறது.         

எனவே சுயலாப நோக்கின்றி நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் சமூக அக்கறையுடன் வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும் மைக்ரோஉலகில் பிரமிக்கும் வகையில் வளர்ந்து வருகிறது; தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுத்து.

No comments:

Post a Comment