Saturday, December 23, 2017


திராவிடக் கட்சிகளின்- 'வாழ்க்கைக்கு பணம் தேவை' என்பதை, ' பணமே வாழ்க்கை' என்ற இலட்சியமாக மாற்றிய-  சாதனை?             



'அந்த'(?)  ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (1)?


பிறப்பு முதல் இறப்பு வரை, மனித வாழ்க்கையும் ஒரு ரயில் பயணம் போன்றதே;

என்று  கல்லூரி வாழ்க்கை காலத்தில், 'டாக்டர் சிவாகோ' (Dr.Zhivago)  நாவல் திரைப்படத்தில் பார்த்த‌ ஞாபகம் இருக்கிறது. ஒரு வித்தியாசம்; பிறக்கும்போது எதையும் கொண்டு வராத நாம், வாழ்க்கைப் பயண முடிவில் இறக்கும் போதும், எதையும் எடுத்து செல்ல முடியாது.

தம்மிடம் இயல்பாக உள்ள திறமைகளை அடையாளம் கண்டு, வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்வதற்கு தேவைப்படும் பணம் சம்பாதிப்பதையும், அந்த மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிமைப்படுத்தி வாழ்பவர்கள் எல்லாம்;

அந்த வாழ்க்கைப் பயணத்தில் இன்பங்களை மட்டுமின்றி, துன்பங்களையும் 'அனுபவித்து' பயணத்தை முடித்து, மனநிறைவுடன் மரணத்தை சந்திப்பார்கள்

அவர்களில் சிலர் அவர்கள் வாழ்ந்த காலத்திலோ, அல்லது மறைவிற்குப் பின்னோ, உலகில் 'சாதனையாளர்களாக' அடையாளம் காணப்பட்டு, போற்றப்படுவார்கள். (https://tamilsdirection.blogspot.com/2016/02/style-definitions-table.html)

உலகில் அப்படி வாழ்ந்தவர்கள் எல்லாம், நானறிந்த வரையில், குறைந்தபட்சம் அடிப்படைக்கல்வி வரையிலாவது தாய்மொழி வழியில் பயின்றவர்கள் ஆவர்; மூளையின் புலன் அறி திறன்களின் (Cognitive Skills Development) முழு வளர்ச்சியும் பெற்று. (https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

வாழ்க்கை முழுவதும் பணம் சம்பாதிப்பதையும், அதற்கு உதவும் மனிதர்களை தேடி சென்று வாலாட்டி பலன் பெறுவதையும் முக்கியமாக கருதி, 'தமிழும், தமிழ்நாடும் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்ற அணுகுமுறையில்;

தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, மேல்நாட்டிற்கு வேலைக்கு அனுப்பி, திருமணம் முடித்து, அவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்க திட்டமிட்டு வாழ்ந்து வரும் போக்கில்;

தமிழ்நாட்டில் தாம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் எல்லாம், தமது காலத்திற்குப் பின், திராவிட அரசியல் கொள்ளை வலைப் பின்னலின் பார்வையில்,  சிக்காமல் தப்பித்தாலும்;

கிடைக்கிற விலைக்கு தமது பிள்ளைகள் விற்று விட்டு போகப் போகிறார்களே;

என்ற கவலையானது, அதிக படித்த பெற்றோர் சிலருக்கு வரத் தொடங்கியுள்ளது.

அத்தோடு, நமது உற்றம், சுற்றம், பிறந்த மண் எல்லாம் பிரிந்து, அந்தந்த நாடுகளில் 'புகுந்த மக்கள்' (immigrants) அடையாளத்துடன், திரிந்த அரை மேற்கத்தியர்களாக‌, 'வேரற்ற மனிதர்களாக' வாழப் போகிறர்களே

ஆக நமது சந்ததி இவ்வாறு சுவடின்றி அழியத்தான், "வாழ்க்கை முழுவதும் 'பணமே பிரதானம்' என்று வாழ்ந்தோமா?" என்ற கவலையும் முளைவிட ஆரம்பித்திருக்கிறது.
 
மன அழுத்தம் மிகுந்த வாழ்வானது,  'நோய்களின் சரணாலயம்' என்று தெரிந்தும்;

தமது உற்றமும், சுற்றமும் 'பொறாமைப்படும்' (?) அளவுக்கு, எந்த வழியிலும் (?) பணம் சம்பாதிக்கும் "ஓட்டப் பந்தயத்தில்' சிக்கி;

சமூக ஒழுக்க பொது நெறிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, கூடப்பிறந்தவர்களை கூட கூச்சமின்றி ஏமாற்றி, 'பணமே தெய்வம்'  என்று 'பிறருக்காக' (?)  வாழ்பவர்களும்; 

'குலம், கோத்திரம்' பின்னுக்கு போக, 'பணமே கடவுள்' என்ற அடிப்படையில் திருமணம் முடிக்கும் பெற்றோர்களும், 'அந்த' பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளைகளும்;

மனித இழிவுக்கு இலக்கணமானவர்களை கூட, 'அதிவேக பணக்காரர்' என்று மதித்து பாராட்டி அவர்களுக்கு நெருக்கமாக வாழ்பவர்களும்;

'அரசியல் கொள்ளையர்கள்'என்று தெரிந்தும், அவர்களை நாடி, தம்மிடம் உள்ள ('பகுத்தறிவு(?), பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு/ஆதரவு, இன்னும் பல முகமூடிகள் ஆளுக்கேற்றவாறும்) 'திறமைகள்'(?) மூலம் ' பலன்'(?) பெறும்  'புதியபாணி விபச்சாரிகளும்';

தம்மிடம் ஏமாறும் வாய்ப்புள்ள நபர்களை அடையாளம் கண்டு, 'உதவி' என்ற தூண்டில் போடும் சமூக மீன் பிடிப்பாளர்களும்; (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html)

கணவன் மதிக்க வேண்டுமென்றால், தானும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று வாழும் மனைவியும்;



மனைவியும் உறவினர்களும் மதிக்க வேண்டுமானால், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற 'லட்சியத்திற்காகவே' குடும்பமின்றி வெளிநாடுகளில் வேலை பார்க்கும்  கணவனும்;

அதிகம் சம்பாதிக்கும் பிள்ளையிடமே 'அதிக அன்பு'(?) செலுத்தும் பெற்றோரும்;

அதிகரித்து வரும் குடும்பங்களில் 'இயல்பான அன்பானது' வற்றி வரும் போக்கில்;

யாருடைய துயரத்தையும் யாரிடமும் பகிர்வதிலும் கூட 'லாப நட்ட கணக்கு' செயல்படுமே என்று அஞ்சி;


குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் இருந்த 'சமூக சுமைதாங்கிகளும்',  தமிழ்நாட்டில் வற்றத் தொடங்கி விட்டன.

எனவே பள்ளி மாணவர்கள் முதல், முதியவர்கள் வரை தற்கொலைகள் அதிகரிக்க;

அதில் தப்பித்தவர்கள் எல்லாம் மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெறும் நோயாளிகளாக வாழ;

'அனாதை ஆஸ்ரமங்களில்' சேர போட்டி போடும் குழந்தைகளின் எண்ணிக்கையும், முதியோர் இல்லங்களில் சேர போட்டி போடுபவர்களின் எண்ணிக்கையும், அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

அதற்கிடையில் சொந்த வீடு கட்டி, பக்கத்து வீட்டுக்கரர்கள் கொடுத்த தொந்திரவினை சமாளிப்பதே முக்கியம் என்று கருதி, சாகும் வரை அந்த சவாலிலேயே காலத்தைக் கழிப்பவர்களும் இருக்கிறார்கள்;  தாக்குப் பிடிக்க முடியாமல், அந்த சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, தானும் வாடகை வீட்டில் வாழ்பவர்களும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறார்கள்; வருடக்கணக்கில் வாடகையும் வராமல், பணம் கொடுத்து சொந்த வீட்டை மீட்டு வருபவர்களும் இருக்கிறார்கள்; அது போன்ற சிக்கலின்றி வாழ்வதற்காகவே, 'அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு' வாலாட்டி' வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ( ‘Fools build houses and wise men live in them’)

மேலே குறிப்பிட்ட மனிதர்களின் 'அசுர வளர்ச்சியும்', தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் வெளிப்பட்ட 'சாதனை'( ?)  என்பதானது;

1967க்கு முன் கல்லூரியில் படித்த என்னைப் போன்றவர்களுக்கு தெரியும்.

'வாழ்க்கைக்கு பணம் தேவை' என்பதை, 'பணமே வாழ்க்கை' என்ற வாழ்க்கை இலட்சியமாக மாற்றிய ஓட்டப்பந்தயத்தினை, தமிழ்நாட்டில் அரங்கேற்றி, அதன் மூலம் தமிழ்நாட்டில் கணிசமானோரை 'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும் வாலாட்டும்' அவமரியாதை தமிழர்களாக மாற்றிய சாதனையானது;

1967க்குப்பின் ஆட்சிக்கு வந்த‌ திராவிடக் கட்சிகளையேச் சாரும். (‘தமக்கென வாழா மனநோயாளிகள்’; https://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html)

தி. தலைவர் கி.வீரமணி, ஆண்டன் பாலசிங்கம், வெளிநாட்டு நிதி உதவியில் இயங்கும் என்.ஜி.ஓக்கள், இளையராஜா, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம், போன்றவர்களுடன்;

 'மனசாட்சியை அடகு வைத்து' ஒட்டி, 'செல்வம், செல்வாக்கு' அதீதமாக ஈட்ட கிடைத்த‌ வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாமல்;

'நம்மை வாழத்தெரியாத முட்டாள்' என்று எவர் நினைத்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல்;

'அந்த' ஓட்டப்பந்தயத்தில் சிக்காமல், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் கூடிய ஆய்வுகளுடன் வாழ்ந்து வரும் நான்;

தமிழ்நாட்டில் சாதாரணமாக எவருடனும் உரையாடுவதில், கீழ்வரும் சிக்கல்களையும் அனுபவித்து வருகிறேன்.

'பணம், சொத்து, புதிதாக வாங்கிய வாகனம், பொருள், பதவி அதற்கான வாய்ப்பு' சம்பந்தமின்றி;

பிறரிடம் ஏமாற்றியது அல்லது ஏமாந்தது தொடர்பின்றி;

பொதுவாழ்வு வியாபாரிகளாக வாழ்ந்து கொண்டு, அந்த வியாபார வளர்ச்சி நோக்கில், தமிழ்நாட்டு பிரச்சினைகள் தொடர்பான உரையாடல்களைத் தவிர்த்து;

தமிழ்நாட்டில் வெளிப்படும் உரையாடல்கள் அரிதாகும்.

மேலே குறிப்பிட்ட நபர்களிடமிருந்து ஒதுங்கி வாழும் என்னை தப்பித்தவறி சந்திப்பவர்கள் எல்லாம்;

'எனது ஆய்வுகள் (http://drvee.in/) பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல்;

அந்த ஆய்வுகள் மூலம் நான் எவ்வளவு சம்பாதித்துள்ளேன்? இன்னும் சம்பாதிப்பேன்

என்று தெரிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த உரையாடல்களின் மூலமும்;

நான் வாழும்/பணியாற்றும் இடத்தில் என்னை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்புள்ளவர்களும்;

நான் அனுபவித்து வரும் (கீழ்வரும் குறிப்பு)  இன்பங்களில், தங்கள் பார்வைக்கு படுவதை அடிப்படையாகக் கொண்டு;

மேலே குறிப்பிட்டஓட்டப்பந்தய வாழ்க்கையானது, முட்டாள்த்தனமான வாழ்க்கைப் பயணமோ? என்று குழம்பத் தொடங்கி உள்ளார்கள்.

எனது ஆய்வு சாதனைகளால் ஈர்க்கப்பட்டு,  என்னுடன் பழகும் மாணவர்களும், இளைஞர்களும்;

ஆரம்பப்பள்ளி வரையிலாவது தாய்மொழிவழிக் கல்வி, அதன் மூலம் புலன் அறி திறன் வளர்ச்சி (Cognitive Skills Development),

பிறர் பொறமைப்பட வாழும் நோயில் சிக்காமல், தமக்கான வாழ்க்கையை இரட்டைவேடப் போக்கற்ற சமூக ஒழுக்கநெறிகளுடனும், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும் வாழ்வதன் மூலம் சாதனைகள் படைக்கும் வாய்ப்பு;

சாதனையான ஆய்வுகள் மூலம் பணம் ஈட்ட கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் 'அடிமையாகாமல்', தேர்ந்தெடுத்து பயணிப்பது;

சமூக ஒப்பீடு நோயில் சிக்காத வாழ்க்கைக்கு அதிக பணம் தேவைப்படாதது;

போன்றவை நோக்கி ஈர்க்கப்படுவதானது;

திருமணமாகி குழந்தை உள்ள இளைஞர்கள் துணிச்சலாக ஆங்கிலவழி 'விளையாட்டுப் பள்ளியில் ' சேர்க்காமல், 5 வயது முடிந்தவுடன், தமிழ்வழிப் பள்ளியில் சேர்க்கும் முடிவினை அமுல்படுத்தி வருவதானது

ஒரு சமூக பொறியியல்  நிகழ்வாக (Social Engineering Phenomenon),  என்னைப் போன்ற இன்னும் சிலர் மூலம் அரங்கேறுவதானது, எனக்கே நம்பமுடியாத அதிசயமாக;

எனது வாழ்க்கைப்பயணமானது முன்னேறுகிறது. 'பணமே வாழ்க்கை' என்ற ஓட்டப்பந்தயத்திலிருந்து 'விடுதலை' பெற்று, தமக்கான வாழ்க்கைப் பயணத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையானது, தமிழ்நாட்டில் விரைவில் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும், என்னுள் வளர்ந்து வருகிறது.


குறிப்பு :

சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில் சிக்கி, செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்ற‌வற்றிற்கு ஏங்கி வாழ்வதைத் தவிர்த்து, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இன்பங்கள், தனித்துவம் (Unique)  வாய்ந்தவையாகும்.

மரங்கள் சூழ்ந்த பகுதியில் காலை நடைப்பயிற்சி செய்யும்போது, காதில் விழும் பறவைகளின் ஒலிகளைக் கூர்ந்து கவனிக்கும் போது, அந்த ஒலிகளில் இயற்கையாக வெளிப்படும் சந்தத்தைக் கண்டுபிடிப்பது ஒரு இன்பமாகும். இசைத் தொழில் நுட்பத்தில் அந்த ஒலிகளைப் பதிவு செய்து, சந்தத்தைப் பிரித்து, இசையாக‌ மாற்றினால் எப்படி இருக்கும் என்று மூளையைப் பயன்படுத்தி யூகிப்பதும் இன்பம். அதை செயல்படுத்தும்போது கிடைப்பதும் இன்பம்.

காற்றில் தாள இடைவெளியில் (Rhythmic)  அசைகின்ற கொடிகள், மரக்கிளைகள், இலைகள் அகியவற்றை கூர்ந்து கவனிக்கும் போது,  வெளிப்படும் நடனவகை அசைவுகளை (choreography related)  உணரும்போதும் கிடைக்கும் இன்பம் சொற்களில் அடங்காது. இவ்வாறு இயற்கையில் எழும் ஒலிகளிலும், அசைவுகளிலும் இருந்து, இசை, நடன கூறுகளை, அடையாளம் காட்டும் சங்க இலக்கிய வரிகளில் மூழ்குவதும், அரிய இன்பமாகும்.

நமது சமூக வட்டத்தில் எவராவது துயரப்பட்டால், அவர்கள் நம்மிடம் உதவி கேட்க வேண்டும் என்ற எதிர்பார்க்காமல் , அவருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வாழ்வதும் ஒரு வகை இன்பமே.

தாமாகவே 'பாராட்டு, புகழ்' போன்ற வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது, சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்தாமல், அவற்றைத் தவிர்த்து வாழ்வதும் ஒரு இன்பமே ‍ - தமிழ்நாட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்திவரும் 'புகழ், பாராட்டு' நோயில் சிக்காமல், புத்திசாலித்தனமாக தப்பித்த காரணத்தால்.
தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலை ( Social Status என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட வசதியில் மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட வசதியில் கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் செல்லும் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range), ‘சுதந்திர  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்..............
தமிழ்நாட்டில் லாபநட்ட கணக்கில்லாமல், யாரும் யாரையும் மதிப்பது கிடையாது, என்ற சமூக வட்டத்தை விட்டு விலகி வாழும்போது மட்டுமே, இயல்பான மதிப்பையும், அன்பையும் அனுபவிக்க முடியும். மேலே குறிப்பிட்ட‌  இயற்கையான வாழ்வு வாழ்வது அபூர்வமான இன்பமாகும். (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

No comments:

Post a Comment