Monday, April 15, 2019

நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்' (3)



'கொலைவெறி', 'பேட்ட' பின்னணி இசையானபாடல்கள், 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'



தமிழ்நாட்டில் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பெற தகுதியுள்ள 'பரியேறும் பெருமாள்' திரைப்படமானது, 'Green Book' என்ற ஹாலிவுட் திரைப்படத்தினை நினைவூட்டியது.

கறுப்பரான இசைக்கலைஞர் டான் செர்லியின் வாழ்க்கையில் சந்தித்த நிறவெறி தொடர்பான உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்;

அமெரிக்காவில் கறுப்பர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டு அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 'பச்சைப் புத்தகம்' (Green Book; https://en.wikipedia.org/wiki/Green_Book_(film) ) ஆகும்

ஹாலிவுட் அளவுக்கு தொழில்நுட்பங்களுடன் ஆங்கிலத்தில் 'பரியேறும் பெருமாள்' வெளிவருமானால், அந்த Green Book படத்தைப் போன்றே, உலக அளவில் பெரும் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக நான் கணிக்கிறேன். (https://en.wikipedia.org/wiki/Pariyerum_Perumal)

பிராணிகளைத் துன்புறுத்துதல், தமிழ்வழிக்கல்வி மாணவர்கள் கல்லூரிகளில் சந்திக்கும் அவமானங்கள், இறுக்கமான கல்வி முறை போன்றவற்றினை பின்புலமாகக் கொண்டு, தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள 'தீண்டாமை' பிரச்சினையை மிகவும் நேர்த்தியாகக் கையாண்டு அனைத்து சாதி பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் 'பரியேறும் பெருமாள்' வெளிவந்துள்ளது. ' Green Book ' படத்தில் வெள்ளையர்களையும் ஈர்க்கும் கறுப்பு கதாநாயகரின் இசை வலிமையின் பின்புலத்தில், அமெரிக்காவில் கறுப்பர்களின் 'தீண்டாமை' பிரச்சினையை, வெள்ளையராக உள்ள பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் 'Green Book' வெளிவந்தது

அமெரிக்காவில் மைக்கில் ஜாக்சன் உள்ளிட்டு கறுப்பர்களாக இருந்து இசையில் சாதித்தவர்கள் எல்லாம், மேற்கத்திய செவ்விசையை முறையாகப் பயின்றவர்கள் ஆவார்கள். அத்தகையோரில் டான் செர்லி போன்றவர்களின் செவ்விசைத் திறமையானது, வெள்ளைக்கார செவ்விசை நிபுணர்களும் பாராட்டும் அளவுக்கு இருந்தது. அத்தகைய பாராட்டுடன், கறுப்பர்களால் வளர்க்கப்பட்ட ஜாஸ் இசையில், புதுமையான திசையில் சாதனைப் படைத்தவர்களில் முக்கிய இடம் பெற்றவர் டான் செர்லி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Don_Shirley )

உண்மைக்கதையான (பயோபிக் - biopic) 'Green Book' திரைப்படத்தில், அந்த உண்மை கதாநாயகர் வெளியிட்ட ஆல்பங்களில் இருந்த இசைகள் பயன்பட்டு, அந்த திரைப்படத்தின் வெற்றியைக் கூட்டின. 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில்  பயன்படுத்தப்பட்ட பறையிசைப் பாடல்களும், ஆடல்களும் கதையின் ஓட்டத்திற்கு வலிவு சேர்த்துள்ளதும், 'Green Book ' படத்தில் வெள்ளையர்களையும் ஈர்க்கும் டான் செர்லியின் இசையானது, கதையின் ஓட்டத்திற்கு வலிவு சேர்த்துள்ளதும், ஒப்பிடத்தக்கதாகும்

'Green Book' படத்தில் கறுப்பர்களிடம் தனியாக மாட்டிக் கொண்ட வெள்ளையரைத் தாக்கும் நிகழ்ச்சிகளும், கறுப்பரான கதாநாயகர், அந்த வெள்ளையரைக் காப்பாற்றும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அது போல, கீழ்வரும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சில காட்சிகளை 'பரியேறும் பெருமாள்' படத்தில் சேர்த்திருந்தால், அதன் வீச்சு 'Green Book' படம் அளவுக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு.

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில், வாங்கிய கடனைத் திருப்பித்தருமாறு கேட்ட பிற்படுத்தப்பட்ட சாதி மனிதர் மீது தீண்டாமை வழக்கு தொடுத்து, காவல்துறையின் சித்திரவதைக்கு அவர் ஆளானதை நான் அறிவேன். அது போல, இன்னொரு கிராமத்தில், பிற்படுத்தப்பட்ட சாதியினர் இரு குழுவாக பிரிந்து மோதல் போக்கில் பயணித்த போது, ஒரு குழு தமக்கு வேண்டிய தலித் பிரிவினரைத் தூண்டி, எதிர்க்குழுவினர் மீது தீண்டாமைப் புகார் கொடுத்த சிக்கலையும் நான் அறிவேன். மேற்குறிப்பிட்டவை எல்லாம், 1967க்குப் பின் அரங்கேறிய 'புதிய' போக்குகளா? என்பது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தின”; http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html)

இன்று உலகில் இழிவானதைக் குறிக்க 'பறையா' என்ற சொல் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, இதுவரை தமிழ்நாட்டில் எந்த தலித் அமைப்பினராவ‌து போராடினார்களா? (குறிப்பு கீழே) 'சமஸ்கிருதத்தின் துணையுடன் தான் தமிழில் இலக்கியங்கள் வெளிவந்தன' என்று வெளிவந்தாலும், உலக எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும், கணிதத்திலும் இடம் பெற்ற‌ 'பறையா'வாக இருந்தாலும், வெள்ளைக்காரர்கள் என்றால் கண்டுகொள்ளமாட்டோம். அவர்கள் பிராமணர்களாக இருந்தால் மட்டுமே எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்வோம்; என்ற நிலையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_26.html)

1960களில் நிறவெறி மிகவும் மோசமாக இருந்த அமெரிக்காவின் தென் மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் கறுப்பர்கள் தம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது? என்பது தொடர்பான வழிகாட்டும் நூலே Green Book ஆகும்.

அடுத்து 'தமிழ்த் திரையிசை ரசனைப் போக்கில் திருப்பு முனையாக, பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாக உச்சரிக்கும் போக்கானது, வெற்றி பெற்ற சிறிய பட்ஜெட் படங்களில் செல்வாக்கு பெற்றது. கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் அந்த போக்கானது நுழைந்து வருகிறது.' என்பதையும் முந்தயப் பதிவில் விளக்கியிருந்தேன்.

‘'வழிபாட்டுப் போதையில்' வளர்ந்த ரசனையில், திரைப்படப்பாடல்களில் ஆங்காங்கே எழுத்தொலிகள் சிதைந்த போக்கானது முடிவுக்கு வந்து விட்டது. 'அந்த' சீரழிந்த போக்கிலிருந்து விடுதலையான பாடல் எழுத்துக்கள் எல்லாம் நிகழ்கால சமூக சூழலுக்கேற்ற புதிய இசை உருவாகும் நெருக்கடியைத் தூண்டி வருகின்றன. இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுவதும், அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருவதும், அதன் முன்னறிவிப்பாகும்.  அந்த' புதிய இசை மலரும் காலமும், ஆதாய அரசியல் மரணித்து, புதிய அரசியல் போக்கு மலரும் காலமும், பின்னிப்பிணைந்து நெருங்கி வருகின்றன.’ 

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் கதைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு முக்கியத்துவம் பெற்றன. அந்த பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடியதானது எனது கவனத்தினை ஈர்த்தது. அதில் ஒரு முக்கிய சிக்னல் வெளிப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.

குழாயில் அடைத்து அழுத்திவைக்கப்பட்ட நீரானது, தடை உடைந்து வெளிப்படும்போது, பீறிட்டு அடித்து, அதன்பின் தான், 'அந்த' குழாய்க்கானசீரான ஓட்டத்தில் வெளிப்படும். எனவே அவ்வாறு பீறிட்டு அடிப்பதானது நல்ல அறிகுறியே ஆகும்.

தமிழில் அந்த' புதிய இசை மலரும் காலமும், ஆதாய அரசியல் மரணித்து, புதிய அரசியல் போக்கு மலரும் காலமும், பின்னிப்பிணைந்து நெருங்கி வருவதன் அறிகுறியாகவே, 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக 'பீறிட்டு' வெளிப்பட்ட பாடல்கள் எல்லாம் நல்ல அறிகுறியாகவே எனக்கு பட்டது; பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உச்சரிக்கும் போக்கில்.

அதாவது 'அந்த' கதைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு பொருத்தமான சுர அமைப்புகளுடன் கூடிய இசை வடிவத்தை உருவாக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம். பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கானது, எவ்வாறு திரை இசையை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்க வைத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/11/4-1-2-3-4-1970-5-15-6-benchmark-7.html)

பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கினை விட, திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய போக்கானது, ரவேற்கத்தக்க திருப்புமுனையான நல்ல அறிகுறியாகும்.

கதைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இசைக்காக பாடல்களின் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைக்காமல், தெளிவாக உணர்ச்சிபூர்வமாக பாடல்களை பாடி வெளிவந்திருப்பதானது, மிகவும் பாராட்டத்தக்க துணிச்சலாகும். அந்த துணிச்சலான பாதையில் திரை இசையானது பயணிக்கத் தொடங்கியுள்ளதையும், கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

கண்ணதாசனுக்குப் பின், திரை இசைப்பாடல்களில் சுருதி சுத்தமான எழுத்துக்கள் அடங்கிய திசையில் சொற்கள் தடம் புரண்டு, புதுக்கவிதை திறமைகளுடன்(?) வைரமுத்து பயணித்த திசையில், மேற்கத்திய மோகத்தில் சிக்கிய ரசனையும், எந்த அளவுக்கு வினையூக்கி (catalyst) ஆனது? என்பதும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய நேரமும் வந்து விட்டது

அந்த போக்கில், பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாக உச்சரிக்கும் போக்கானது, வெற்றி பெற்ற சிறிய பட்ஜெட் படங்களில் செல்வாக்கு பெற்றது. கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களிலும் அந்த போக்கானது நுழைந்து வருகிறது

இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுகின்றன. அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருகின்றன, என்பதையும்;

'பேட்ட' திரைப்படத்தில் பின்னணி இசையாக 'பல' பழைய - சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட‌- திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்தி, ரசனையின் உச்சிக்குப் பார்வையாளர்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியானது வெற்றி பெற்றுள்ளதயும்;
ஏற்கனவே பார்த்தோம்

'மாலையிட்ட மங்கை'  திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் வரிகளை, இன்றும் கல்லூரி மாணவர்கள் பாட கேட்டிருக்கிறேன்.

அந்த பாடலின் முதல் வரியை,

'செந்தமிழ் செந்தமிழ் செந்தமிழ் தேன்மொழியாள்

என்று அதே சுர அமைப்பில் சற்று மாற்றி பாடி,

'வை திஸ் வை திஸ் வை திஸ் கொலைவெறிடி' என்பதுடன் ஒப்பிடலாம், என்ற கருத்தும் வெளிவந்துள்ளதும், ஆராய்ச்சிக்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

இந்தியாவில் இருந்து வெளிவந்து உலக அளவில் 'கொலைவெறி' பாடல் பிரபலமான அளவுக்கும்,  அந்தந்த மொழி பேசும் மக்களின் மனதில்  இருந்த 'இறுக்கங்களை' எல்லாம்,  அதே 'கொலைவெறி' பாடல் 'பாணியில்' கேலி,கிண்டலுக்கு உட்படுத்தி பலமொழிகளில் வெளிவந்த அளவுக்கும், இதுவரை உலகில் எந்த மொழியிலும் வெளிவந்ததில்லை.

பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கினை விட, திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய ரவேற்கத்தக்க போக்கானது;

முதன்முதலாக 'பரியேறும் பெருமாள்' படத்தில் தான் வெளிப்பட்டுள்ளது.

அது போலவே, திரைப்படத்தில் முக்கியகாட்சிகளில் வெளிப்படும் கருத்து மற்றும் உணர்ச்சிகளின் தொகுப்புடன் பின்னணி இசையானது (இசையில் 'அமைதியும்'-rest- இசையாகும்)  ஒன்றி ('சிவணி' – resonance in merging) வெளிப்படும் வீச்சின் வலிமையானது, ரசனையின் உச்சிக்குப் பார்வையாளர்களைக் கொண்டு சேர்க்கும் போக்கில்;

'பேட்ட' திரைப்படத்தில் பின்னணி இசையாக 'பல' பழைய - சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட‌- திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்திய அளவுக்கு, வேறு எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தியதாக தெரியவில்லை. 

'பேட்ட' திரைப்படத்தில் பின்னணி இசையாக 'பல' பழைய - சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட‌- திரைப்படப் பாடல்களில் இருந்த உயர்ந்த 'இசை அழகியல்' சுர அமைப்புகளைப் (Music Notes Structures) போன்றதே 'கொலைவெறி' பாடலில் இசைப்பதர்களின் ஊடே இசைமணிகளாகவே,  நான் அடையாளம் கண்டவற்றிலும் இருக்கின்றன.

இசை அமைத்தல் என்பதானது கட்டிடம் கட்டுவதைப் போன்றதே, என்பதையும்;

இசை அழகியலில் உயர்ந்த சுர அமைப்புகளை எல்லாம் உலகில் உள்ள வெளிவந்த இசைகளில் இருந்தும், வெளிவாராமல் மேற்கத்திய குறியீடு, கர்நாடக இசைக் குறியீடு போன்று இசைக்குறியீட்டில் உலகில் பல மொழிகளில் அச்சிட்டு வெளிவந்துள்ள பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இருந்தும்;

பறவைகள், தேரைகள் மீன்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள், காற்று, இடி, மழை, அருவி, உள்ளிட்ட இயற்கை ஆகியவற்றில் இருந்து, பிரமிக்கும் வகையில் எண்ணற்ற சுர அமைப்புகளை எவ்வாறு அடையாளம் கண்டு பிரித்தெடுப்பது? என்பது தொடர்பாக சங்க இலக்கியங்களில் இருந்து நான் கண்டுபிடித்ததில் இருந்தும்,

எவ்வாறு இசை அமைப்பது? என்பதனை 1990-க‌ள் முதல் நான் நிரூபித்து வருகிறேன்.

கவிஞர் மு.மேத்தா, டிராட்ஸ்கி மருது, .ராசேந்திரன் உள்ளிட்ட பலர் எனது இல்லத்திற்கு வந்து, அதனைக் கேட்டு பாராட்டி சென்றிருக்கிறார்கள்.

மேற்கத்திய செவ்விசை சுர அமைப்புகளைப் பிரித்தெடுத்து, அதன் அடிப்படையில் நாட்டுப்புற இசை அமைத்து, பறை, நாயன இசைக்கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, 'அந்த' மேற்கத்திய இசையை கீபோர்ட் மூலமும், அதன் பின் மேற்குறிப்பிட்ட இசைக்கலைஞர்கள் மூலம் நான் இசை அமைத்த நாட்டுப்புற இசையையும், தஞ்சையில் ம.க.இ.க முன்பு நடத்திய 'தமிழ் மக்கள் இசை விழா' நிகழ்ச்சியில் இசைத்ததானது, எனக்கு மறக்க முடியாத அனுபவமானது.

2000 சனவரி 3 அன்று, சென்னை 'அருங்காட்சியக அரங்கில்' (Museum Theater) கலாசேத்ரா தொடர்புள்ள இசைக்கலைஞர்களின் துணையுடன் 'Music of This Millennium- MOZART & MUSIC TRINITIES- FUSION 2000' என்ற தலைப்பில், நான் மேற்குறிப்பிட்ட முறையில் உருவாக்கிய இசைகள் இசைக்கப்பட்டன. அன்றைய‌ 'V.S.N.L' தலைமை அதிகாரி (பெயர் மறந்து விட்டது) தலைமை தாங்கினார். மறுநாள் தொலைபேசியில் கீழ்வரும் தகவலைத் தெரிவித்து என்னைப் பாராட்டினார்.

அந்த நிகழ்ச்சி எவ்வளவு நன்றாக இருந்தது? என்று அவர் விளக்கியவுடன், தன்னை ஏன் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச்செல்லவில்லை? என்று அவரது மனைவி கோபப்பட்டாராம். 

நடனக்கலைஞர் அனிதா ரத்னம் முன்னிலை வகித்து, கலாசேத்ராவில் பணி ஓய்வு பெற்ற நட்டுவாங்க (எனக்கு துணை புரிந்த) ஆசிரியைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஞானி, விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட ஊடகத் துறையினர் சிலரும் கலந்து கொண்டனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சி எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கு 'கவரில்' பணம் கொடுக்க வேண்டும், என்பதும் அப்போது எனக்கு தெரியாது

பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் 'Mozart Meets India' (https://www.hindustantimes.com/india/mozart-meets-india-in-unique-musical-synthesis/story-wTHQgv4LhV8oRdbU2IYTAM.html) இசையில் மொசர்ட் பெயருக்கான 'இசை நியாயம்’ (Music Justice) இருந்ததா? அது உண்மையிலேயே சிம்பொனி இசையா? (claimed that it would be India’s first symphony:Indo-Asian News Service - Chennai, March 20, 2006, New Indian Express, 19-3-2006) 'அந்த' ஆல்பத்திற்கு, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு அதீதியான ஊடகக்குவியம் வெளிப்பட்டது? மொசார்ட் பயன்படுத்திய சுர அமைப்புகளில் இருந்தும், கர்நாடக இசை மும்மூர்த்திகளில் இருந்தும் பிரித்தெடுத்து, பொருத்தமான முறையில் இசைக்கட்டிடம் (Musical Building) போல, நான் இசை அமைத்து வெளிவந்த 'Let’s GO Green' இசை ஆல்பமும், அதனை இசைத்த மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியும், ஏன் தமிழ்நாட்டில் ஊடக இருளில் சிக்கியது? பல வருடம் கழித்து, அதே தலைப்பில், மேற்கத்திய உலகில் இசை ஆல்பம் வெளிவர, 'அந்த' தமிழ்நாட்டு 'ஊடக இருளே' காரணமா? என்ற கேள்விகளை, மனசாட்சியுடன் நேர்மையாக பணியாற்றும் ஊடகத் துறையினர் சந்திக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாகக் கருதுகிறேன். 

திரைப்படப்பாடல்களில் ஆங்காங்கே எழுத்தொலிகள் சிதைந்த போக்கும், இசை தொடர்பான மேற்குறிப்பிட்ட 'ஊடக இருள்' வளர்ந்த போக்கும், தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரமானது வளர்ந்த போக்கில் வெளிப்பட்டவைகளாகும். ‘எனது தலைமுறையின் தோல்வியாக, 'பூதமாக' வளர்ந்துள்ள 'பொதுவாழ்வு வியாபாரமானது', அதன் மரணவாயிலை நெருங்கி விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி, இன்றைய இளைய தலைமுறையானது, சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது.’ எனவே 'அந்த' ஊடக இருளில் இருந்து தமிழ்நாட்டை மீட்ககூடியவர்கள், இளம் பத்திரிக்கையாளர்களில் இருந்து வெளிவரும் காலம் நெருங்கி விட்டது. (http://tamilsdirection.blogspot.com/2017/04/blog-post.html)

இதுவரை இன்றைய இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தாத எண்ணற்ற,  கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டு, உலகில் உள்ள பல வகை இசைகள், புத்தகங்களில் இசைக் குறியீட்டு(Music Notation)  முறைகளில் உள்ளன. இதுவரை காதால் கேட்டிராத அப்பாடல்களை, கணினி மூலம் ஒலிக்க வைக்க என்னிடம் பயிற்சி பெற்ற (SASTRA, NIT-T Music Information Technology பயின்ற‌ B.Tech) மாணவர்களால் முடியும் என்பது எனக்கே வியப்பைத் தந்தது. எனது பயிற்சியின் மூலம் திரை இசை அமைப்பாளர்கள் உருவாக வாய்ப்புள்ளதை, அடுத்து பார்ப்போம்.

இசைக் கருவிகளின்றி கணினி மூலம் (1996 சமயம்) நான் உருவாக்கிய இசைக்குப் பொருத்தமான பாடல் வரிகளுடன், 2011இல் (இசை படித்திராத) ஒரு கல்லூரி மாணவருக்கு பயிற்சி கொடுத்து, அவர் படித்த  கல்லூரி  நிகழ்ச்சியில் பாட வைத்தேன். பின்னணி இசை கணினியிலிருந்து 'பெருக்கி'  (amplifier) மூலம் ஒலிக்க, 'மைக்' முன் அந்த மாணவர் பாடினார். பாட்டு முடிந்தவுடன், அந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்-'பசங்க'  திரைப்பட இயக்குநர்-   பாண்டிராஜ் தாமாகவே மேடையில் ஏறி, மைக்கைப் பிடித்து, 'இந்த பாடல், இசைக்கருவிகளுடன் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்து கேட்டால், எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் 'ஹிட்' ஆன 'கண்கள் இரண்டால்' என்ற பாட்டு அளவுக்கு 'ஹிட்' ஆகும். எனது அடுத்த படத்திற்கு இசை அமைப்பாளரை முடிவு செய்து விட்டேன். எனவே எனது அதற்கடுத்த படத்திற்கு,  என்னை இசை அமைப்பாளர்" என்று அறிவிக்க ஒரே கைதட்டல். நிகழ்ச்சி முடிந்ததும், அவர் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து , ‘திரைத் துறை எனக்கு சரி வராது, எனது இசை ஆய்வுகளே எனக்குப் போதும்' என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.’ 
(‘தொல்காப்பியம் மூலம் புதிய வேலை வாய்ப்பு: கணினி இசை அமைப்பாளர்(Computer Music Composer)’; https://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_22.html)

ஆனால், மேற்குறிப்பிட்ட (1) கொலைவெறிப்பாடல், (2), பேட்ட திரைப்படத்தில் பின்னணி இசையாக வெற்றி பெற்ற பழையப் பாடல்கள்;

(3) திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய ரவேற்கத்தக்க வகையில் 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள்;

ஆகிய மூன்றும் வெளிப்படுத்திய 'சிக்னல்களை' உணர்ந்த பின்பு, நிகழ்கால திருப்பு முனைக்கட்டத்தில் எனக்குள்ள சமூக இசைக்கடமையை நான் தாமதமின்றி நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன்

'தீதும் நன்றும், பிறர் தர வாரா' (புறநானூறு; 192:  2) என்பதன் பொருளை அகவயப்படுத்தி, 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம் அரங்; 65) என்ற இயற்கை விதியின் படி, விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, சுயலாப நோக்கின்றி, அறிவுபூர்வமாக, நாம் எவ்வாறு பயணிக்க முடியும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/02/2.html) எனவே இசையில் 'வந்ததை' எவ்வாறு 'வளர்ப்பது'? தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கில், 'வருவதை' எவ்வாறு கணித்து 'ஒற்றுவது'? என்பதை எனது இசை ஆய்வுகள் மூலமாக கண்டுபிடித்த பின்னும், அந்த திசையில் நான் பயணிக்க வேண்டியதை, எனது சமூகக் கடமையாக உணர்ந்துள்ளேன்.  (‘பொருள் தெரியாமலே மாற்றியது யார்? தமிழ்ப் பெயர்கள் சமஸ்கிருதமயமான போக்கிலா? சமஸ்கிருதமயத்திலிருந்து தமிழ்ச் சொற்களை மீட்ட போக்கிலா?’; http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_9.html)

'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களை இனி உருவாக்கும் திரைப்படக்குழுவினருக்கு இசை ஆலோசகராக (Music Consultant) பணியாற்றும் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், என்னால் இயன்ற முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதனை தமிழோடு நிறுத்திக் கொள்ளாமல், உலக அளவில் எனது இசைக் கண்டுபிடிப்புகளை அறிந்து பயன்படுத்திக் கொள்ள விரும்பும் படக்குழுவினர் நோக்கியும், எனது முயற்சிகள் தொடரும். எனது சமூக வட்டத்தில் இசைக்கான 'கிராமி' (Grammy) விருது வென்றவர்கள், சிம்பொனி இசை அமைப்பாளர்கள் என்று இன்னும் பலர் இருப்பதால், அது விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்

குறிப்பு: தொடர்புள்ள பதிவு:

‘நீக்ரோ’வைப் போல, 'பறையா' ஒழிய தாமதம் ஏன்?:

http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html

No comments:

Post a Comment