துக்ளக் ‘ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்’ - கட்டுரை தொடர்பான விமர்சனம்(3)
இரண்டு பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளதா?
துக்ளக் இதழில் ‘ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்’ என்ற தலைப்பில் எனது கட்டுரை வெளிவந்தது. அது தொடர்பாக எனக்கு வந்த பின்னூட்டம் அடிப்படையில், கீழ்வரும் இரண்டு பதிவுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன்.
துக்ளக் ‘ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்’; கட்டுரை தொடர்பான விமர்சனம் (1); https://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post_23.html
துக்ளக் ‘ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்‘ கட்டுரை தொடர்பான விமர்சனம் (2);
'இந்தி எதிர்ப்பு, பிரிவினை, ஈ.வெ.ரா, அண்ணா'; 'அரை இருட்டில்' உள்ள தகவல்கள் வெளிச்சத்திற்கு வருமா?’; https://tamilsdirection.blogspot.com/2019/06/2.html
துக்ளக்' இதழைக் கண்டித்து 'விடுதலை' இதழில் ‘வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்‘ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை தொடர்பாக, கீழ்வரும் பதிவினையும் வெளியிட்டுள்ளேன்.
'துக்ளக்' யோக்கியதை என்ன? 'விடுதலை' யோக்கியதை என்ன? - http://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_9.html?m=1
மேற்குறிப்பிட்ட பதிவுகளை எல்லாம் படித்திருந்தால், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் கீழ்வரும் பதிவினை வெளியிட்டிருப்பாரா? என்ற கேள்விக்கும் இடம் உண்டு.
“தந்தை பெரியாரும் இந்தி எதிர்ப்பும், துண்டுதுண்டாய் செய்திகளை வெளியிட்டு துக்ளக் ஏட்டின் பித்தலாட்டப் பிரச்சாரம்
எத்தனை முறை மொத்துப்பட்டாலும் மூக்குடைபட்டாலும் சூடு சொரணை இல்லாமல் தொடர்ந்து பித்தலாட்டப் பிரச்சாரத்தை செய்து வருகிறது துக்ளக் ஏடு! அதுவும் கோயங்கோ கணக்குப் பிள்ளை குருமூர்த்திக்கு பித்தலாட்டம் தான் மொத்தக் குத்தகை!
26.6.2019 துக்ளக் ஏட்டில், ஹிந்தி எதிர்ப்பு மேலும் சில உண்மைகள் என்ற தலைப்பில் பெரியாரின் பெருமையை, பித்தலாட்டப் பிரச்சாரம் மூலம் குலைக்க துக்ளக் ஏடு முயன்றுள்ளது.
(அ) இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.
(ஆ) வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு பெரிய பங்கு ஒன்றும் இல்லை.
என்று இரண்டு பித்தலாட்டப் பிரச்சாரங்களை துக்ளக் செய்துள்ளது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இந்தி எதிர்ப்புப் போரில் இறுதியில் இணைந்தவரா பெரியார்?
1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும் அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்துகொண்டனர். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார்தான் துவக்கினார் என்பது தவறு.” -
(https://m.facebook.com/story.php?story_fbid=2351036088551482&id=100009353419136)
என்று தெரிவித்து மஞ்சை வசந்தன் எழுதியுள்ள கட்டுரையை, திருக்குறள் (423)
வழியில் படிக்குமாறு பரிந்துரைக்கின்றேன்.
‘ஹிந்தி எதிர்ப்பு - மேலும் சில உண்மைகள்’ (துக்ளக்;
19-06-2019) என்ற கட்டுரையில் கீழ்வரும் கருத்தினை நான் வெளிப்படுத்தி இருந்தேன்.
"ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில் தான் கலந்து கொண்டு தலைமையேற்றார். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டப் பெருமை முழுவதும் அவருக்கே தரப்படுகிறது. இதுபோல் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சைவப் பெரியோர்களான பெரும் தமிழ்ப் பண்டிதர்களே. இதில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கடைசிக் கட்டத்தில்தான் கலந்து கொண்டார்கள். ஈ.வெ.ரா.தான் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார் என்பது தவறு."
கூடுதலாக, அக்கட்டுரையில் கீழ்வரும் கருத்தினையும் வெளியிட்டிருந்தேன்.
"1965-ல் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, ஈ.வெ.ரா. பெரியார்
3.3.1965 ‘விடுதலை’ இதழின் தலையங்கத்தில் எழுதியது இது.
‘இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவுக் கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள். நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு, தமிழில் எதுவும் இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள்’ என்று எழுதினார். அதேபோல், ‘காமராஜர் ஆட்சி அவசியமா, இந்தி ஒழிய வேண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்’ என்று
8.3.1965-ல் விடுதலை தலையங்கத்திலும் எழுதியுள்ளார்.
எனவே ஈ.வெ.ரா.வின் ஹிந்தி எதிர்ப்பு நிலைப்பாடு என்பது இதுதான். ஸ்டாலின் வெளிப்படுத்திய கருத்து தொடர்பாக, அந்த மேடையிலேயே கி.வீரமணியோ அல்லது தி.க. சார்பில் வேறு எவருமோ ஈ.வெ.ரா.வின் கருத்து என்னவென்று தெளிவுபடுத்தினார்களா என்று தெரியவில்லை."
வைக்கம் போராட்டத்திலும், 1938
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈ.வெ.ரா அவர்கள் தலைமை ஏற்றதை, எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நிலையில்:
அதனை கீழ்வருமாறு மஞ்சை வசந்தன் புரிந்து கொள்வது சரியா?
"(அ) இந்தி எதிர்ப்பில் பெரியாரின் பங்கு பெரிதாய் ஒன்றும் இல்லை.
(ஆ) வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு பெரிய பங்கு ஒன்றும் இல்லை."
‘History of Anti-Hindi
Agitations in Tamil Nadu (including 1965)- (A Chronology of Anti-Hindi
Agitations) Thanjai Nalankilli’ (http://www.tamiltribune.com/03/0101-anti-hindi-agitation-history.html)
என்ற கட்டுரையில் கீழ்வரும் சான்றுகள் இடம் பெற்றுள்ளன.
1938 பிப்ரவரி 27 அன்று காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்கள் கலந்து கொண்டதாக தெரியவில்லை..
(1938: February 27: The first Anti-Hindi Imposition Conference was held in
Kancheepuram (Kanchi, Kanchipuram). Somasundara Bharathiyar, Paventhar Bharathi
Dasan and C. N. Annadurai (Arinjar Anna) were among those who addressed the
conference.)
1938 மே 28 அன்று இந்தி எதிர்ப்பு கமிட்டி உருவானது. தலைவர் சோமசுந்தர பாரதியார்; செயலர் கி.ஆ.பே விஸ்வநாதம்; இதிலும் ஈ.வெ.ரா அவர்கள் இடம் பெறவில்லை.
(1938: May 28; Tamil patriots from all over the Madras Presidency formed the
Anti-Hindi Command. Somasundara Bharathiyar was elected President and K.A.P.
Viswanatham was elected Secretary.)
1938 ஜூன் 3 அன்று நடந்த நிகழ்ச்சியிலும் ஈ.வெ.ரா அவர்களின் பெயர் இடம் பெறவில்லை. (1938:
June 3; The great Saivaite scholar Maraimalai Adikalar (Marai Malai Adigalar)
chaired the Anti-Hindi Conference at Kodampakkam, Chennai (Madras).)
1938 செப்டம்பர் 10 அன்று நடந்த நிகழ்ச்சியில் தான் ஈ.வெ.ரா அவர்கள் முக்கிய இடம் பெற்றுள்ள தகவல் வெளிவந்துள்ளது. (1938: September 10; At the Anti-Hindi Meeting
held at Thiruvallikeni Beach in Chennai (Madras), Periyar E. V. Ramaswami
Naicker (EVR) declared that Tamil Nadu should be an independent country.
"Tamil Nadu for Tamils", he said, amongst thunderous applause from
the huge crowd)
மஞ்சை வசந்தனின் மேற்குறிப்பிட்ட கட்டுரையிலும், 1937
ஆகஸ்ட் 27 முதல் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில், இடம் பெறாத ஈ.வெ.ரா அவர்களின் பெயரானது, 1938
ஏப்ரல் திருச்சி மாநாட்டில் தான் ஈ.வெ.ரா அவர்கள் உரையாற்றியது இடம் பெற்றுள்ளது. எனவே மஞ்சை வசந்தன் முன்வைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில்,
"ஈ.வெ.ரா.தான் 1938-ல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார் என்பது தவறு."
என்பது சரி தானே.
ஒரு போராட்டத்தினை துவக்கம் முதல் ஆதரிப்பதற்கும், அந்த போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில், அதில் பங்கேற்பதற்கும் வேறுபாடு உண்டு.
எனது பதிவில் இரண்டு தவறுகள் உள்ளன. வைக்கம் போராட்டத்திற்கு தலைமை ஏற்றது போல, 1938
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈ.வெ.ரா தலைமை ஏற்றதாக, நான் குறிப்பிட்டது தவறு, என்பதை மஞ்சை வசந்தன் முன் வைத்த சான்றுகளும், பிற சான்றுகளும் உணர்த்துகின்றன. ஈ.வெ.ரா அவர்கள் துவக்கத்தில் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் வளர்ச்சிப் போக்கில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார். ஆனால் அதனை 'தலைமை ஏற்றார்' என்று நான் குறிப்பிட்டது தவறாகும். அது போலவே 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துவக்கம் முதலே பங்கேற்ற அண்ணாதுரையை, ஈ.வெ.ராவுடன் சேர்த்து, 'துவக்கத்தில் பங்கேற்கவில்லை' என்று நான் குறிப்பிட்டதும் தவறாகும்.
1938இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக;
(1) ‘History of Anti-Hindi
Agitations in Tamil Nadu (including 1965)- (A Chronology of Anti-Hindi
Agitations) Thanjai Nalankilli’ (http://www.tamiltribune.com/03/0101-anti-hindi-agitation-history.html);
(2) மஞ்சை வசந்தனின் பதிவு (https://m.facebook.com/story.php?story_fbid=2351036088551482&id=100009353419136);
(3) பொ.முருகானந்தம் வெளியிட்டுள்ள தகவல்கள் (https://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post_23.html
)
ஆகிய மூன்றும் வெளிப்படுத்திய தகவல்களில் என்னென்ன வேறுபாடுகள் உள்ளன? என்பது ஆய்விற்குரியதாகும்.
தற்போது இசைத்தகவல் தொழில்நுட்பம்
(Music Information Technology) தொடர்புடைய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நான், 'பெரியார்' சிறையிலிருந்து ஈ.வெ.ரா அவர்களை மீட்கும் நோக்கில்;
இசை ஆய்வுக்கு முன், சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் படித்தவைகளை நினைவு கூர்ந்து இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறேன். மறு ஆய்வு நோக்கில், மேற்குறிப்பிட்ட விமர்சனத்தில் இடம் பெற்ற சான்றுகளை மீண்டும் படிக்கும் ஆர்வத்தினை, பொ.முருகானந்தம் முன் வைத்த விமர்சனம் தூண்டியுள்ளது. 1965
இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் துவங்கி வளர்ந்த தீக்குளிப்புகள் மற்றும் தற்கொலைகள் எல்லாம், தாய்மொழி அடையாளச் சிதைவுக்கு உள்ளானதன் விளைவான, 'அலெக்சிதிமிக்'
(alexithymic) மனநோய் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிகிறது.
நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில், பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா.அ.மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார். எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை.
விவாதத்தின் வரை எல்லையைத் தாண்டி, விவாதத்தில் எதிர் நிலைப்பாட்டில் உள்ளவர் மீது 'வக்கிரப்புத்தி, சூடு சொரணை இல்லாமல் தொடர்ந்து பித்தலாட்டப் பிரச்சாரம்' என்பது போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்தியதில்லை.
இன்றும் அதே போக்கில் பயணித்து வருவதை, என்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் அறிவார்கள்.
அது மட்டுமல்ல, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சி நோக்கில், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு திசையில் பயணிப்பவர்களிடையே அறிவுபூர்வ விவாதம் நடைபெறுவதை ஊக்குவித்து வருகிறேன்.
‘இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?’;
‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்; 'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா
(1)?’;
போன்ற எனது பதிவுகள் தொடர்பாக, 'விடுதலை' உள்ளிட்ட 'பெரியார்' ஆதரவு இதழ்களும், மஞ்சை வசந்தன் உள்ளிட்ட 'பெரியார்' ஆதரவாளர்களும் விவாதித்து, அதில் உள்ள நிறை குறைகளை வெளிப்படுத்த வேண்டும்.
இது டிஜிட்டல் யுகம். எதிரெதிர் வாதங்களை அறியாமல், ஒருதலைப்பட்சமாக நிலைப்பாடு எடுத்தவர்கள் எல்லாம் கேலிப்பொருளாகி வருகிறார்கள்; இன்றைய கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள் பார்வையில்.
எனவே விவாதத்தினை முதிர்ச்சியான நாகரீகத்துடன் அறிவுபூர்வமாக முன்னெடுப்பதை விரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. எனவே தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான ஆதரவு சமூக ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து சாதிக்கும் வாய்ப்புகள் சாத்தியமாகி வருகிறது.
குறிப்பு:
மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி,
4.4.1965 ‘ஆனந்த விகடன்’
இதழில் வெளி வந்துள்ளது.
“அந்தக் காலத்துலே இந்தியை எதிர்த்துப் போராட்டமெல்லாம் நடத்தினீங்களே, இப்ப ஏன் சும்மா இருக்கீங்க?”
காதை வலது கையால் அணைத்து நான் சொல்வதை உற்றுக் கொண்ட பெரியார் கோபத்தை வெளியே காட்டாமல், “அப்படியா? மன்னிக்கணும்; இப்ப இந்தி எங்கு இருக்குது? தெரியாமத்தான் கேக்கறேன். சொல்லுங்கோ?”
“இந்திதான் ஆட்சி மொழியா வந்துட்டுதே...”
“எங்கே வந்துட்டுது? உனக்குத்தான் இங்கிலிஷ் இருக்குதே. இந்தியா ஒண்ணா இருக்கணும்னா, பொதுவா ஒரு ஆட்சி மொழி வேணும்தானே? இந்திக்காரன் உங்களை மாதிரி இங்கிலீஷை நினைக்கலையே. இங்கிலீஷை அவமானம்னு நினைக்கிறானே. தமிழ்நாட்டுக்காரன் சொல்றபடி, இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா?”
“ஒரு நாளைக்கு இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இந்தி வரத்தானே போகுது?”
“நல்லாருக்குதே! ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாளைக்குச் சாவு வரத்தானே போகுதுன்னு எவனாவது இப்பவே போய் கிணத்துலே விழுவானா? அப்படியே ஒரு வேளை இந்தி வந்ததுன்னா, உயிரோடு இருந்தா... அதை எதிர்க்கப் போறவன் நான் தானே?”
“மத்திய சர்க்கார்ல உத்தியோகம் கிடைக்கிறதுக்கு இந்தி அவசியம் இல்லேன்னாலும், உத்தியோகத் துலே சேர்ந்தப்புறம் படிக்கச் சொல்றாங்களே...
“படிச்சிட்டுப் போயேன். தாசில்தார் உத்தியோகம் படிக்கப் போறவங்க, ‘சர்வே’
படிப்பு படிக்கிற தில்லையா? அந்த மாதிரி இந்தியைப் படிச்சுக்கிறது. உனக்கு இதிலே என்ன கஷ்டம்? இல்லே நஷ்டம்? அவன் நேரத்துல அவன் கொடுக்கிற சம்பளத்துல, நீ இன்னொரு மொழியைப் படிச்சுத் தெரிஞ்சுக்கப் போறே... இது லாபம் தானே?”
No comments:
Post a Comment