Sunday, October 6, 2019

தி.மு. தலைவர் கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' (2)


 'சமுக கீரி - பாம்பு சண்டையானது' எவ்வாறு முடிவை நெருங்கியது?



குடும்ப அரசியல் ஊழலுக்கு பாதுகாப்பு கவசமாக, மக்களின் கவனத்தினை திசைத் திருப்ப பயன்படுவதே 'சமூக கீரி பாம்பு' விளையாட்டு ஆகும். பரிமாற்ற பகைமை உணர்வினைத் தூண்டினால் மட்டுமே, அந்த விளையாட்டு சாத்தியமாகும். தமிழர் - இந்தியர் என்ற அடையாளங்களை எல்லாம், பரிமாற்ற பகைமை உணர்வில் சிக்க வைப்பதும், அந்த விளையாட்டுக்கு உதவக் கூடியதாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html)

இந்தியாவில் தமிழ்நாட்டில் இது போன்ற பரிமாற்ற பகையை உருவாக்குவதானது, ஏன் எளிதானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்
(‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்கஉணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம் ?’; 

இந்திய விடுதலைக்கு முன், பிரிவினை நோக்கில் தமிழ்நாட்டில் வலிமையாக வளர்ந்த மென் சக்தியிடம் (Soft Power), 1952 பொதுத்தேர்தலில் தோற்ற காங்கிரஸ் கட்சியானது, அந்த தோல்வியைச் சரியான தேசக்கட்டுமான திசையில் எதிர்கொள்ளாமல், சுயநல சந்தர்ப்பவாதம் வழியில் முதலில் எதிர்கொண்டு, பின் 1967க்குப் பின், 'திராவிட' ஊழலை அந்த சந்தர்ப்பவாத அரசியல் பேரத்திற்குப் பயன்படுத்தி, இன்று இந்தியாவையே தமிழ்நாட்டின் 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் விளைவில் முடிந்துள்ளது
(‘இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (3); உலக அளவிலான 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கு வெளிச்சம் காட்டும்சிக்னல்கள்தமிழ்நாட்டில்?’; http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

பிராமணர் - ‍பிராமணரல்லாதோர், தமிழர் - தமிழர் அல்லாதோர், தமிழர் - இந்தியர், போன்ற பரிமாற்ற பகைமைகள் எல்லாம், 'திராவிட அரசியல் ஊழல் குடும்பங்களின் பாதுகாப்பு கவசங்களாக நீடிப்பதற்கு தேசியக்கட்சிகளின் மறைமுக ஒத்துழைப்பும் ஒரு முக்கிய காரணமாகும்

பிராமணர் - பிராமணரல்லாதோர், தமிழர் - தமிழர் அல்லாதோர் போன்ற பரிமாற்ற பகைமையை முன்னெடுத்த நபர்கள் எல்லாம், குடும்ப அரசியல் ஊழலை எதிர்த்தார்களா? கூச்சமில்லாமல் ஏதாவது ஒரு திராவிட குடும்ப அரசியல் ஊழல் பிதாக்களுடன் நெருக்கமாக இருந்தார்களா? என்ற கேள்விகளே, அந்த விளையாட்டில் பிழைத்த சமூக ஒட்டுண்ணிகளை அடையாளம் காட்டும்.

பிராமணர்களிலும் பிராமணரல்லாதோரிலும் கணிசமானவர்களை பரிமாற்ற வெறுப்பு நோயில் சிக்க வைத்து, ‘சமூக கீரி - பாம்பு சண்டைகாட்டி, தமிழ்நாட்டை ஏமாற்றி, சர்க்காரிய கமிசன் குறிப்பிட்ட 'அறிவியல் ஊழலை' முதல்வராக இருந்த கருணாநிதி வெற்றிகரமாக செயல்படுத்தினாரா? சுயநல அரசியல் லாபத்திற்காக, அன்றையப் பிரதமர் இந்திராகாந்தி சர்க்காரியா கமிசன் வழக்கை வாபஸ் பெறாமல், முறையான விசாரணை மூலமாக குற்றவாளிகள் எல்லாம் உரிய தண்டனை பெற்றிருந்தால்;

தமிழ்நாட்டில் ஊழல்வழி ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தாய்மொழி தமிழைக் காவு கொடுத்தும்; ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்களை கொள்ளையடித்தும்; ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றி, கங்கை அமரன் தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ் வரை தனியார் சொத்து அபகரிப்பு, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்தும்;

உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்களை எல்லாம் கேலிக்குள்ளாக்கும் வகையில், தரகு, ஊழல் வழிகளில் வளர்ந்த‌ 'அதிவேகப் பணக்காரர்கள்' சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வருவதும் ஆகிய சமூக நோய்களில் தமிழ்நாடு சிக்கியிருக்குமா?

சென்னையில் 'இராவண லீலா' நடத்தியதை ஆதரித்தவர்களில் பலர் தனித்தமிழ்நாடு போதையில் பயணித்ததை நான் அறிவேன். நெருக்கடி காலத்தில், முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஊழல் மூலமாக, தமிழ்நாடு நாசமானது அவர்களின் கண்களை உறுத்தவில்லை. முதல்வர் கருணாநிதி மூலமாக தனித்தமிழ்நாடு சாத்தியமாகும் என்ற போதையில், அவர்கள் பயணித்தார்கள்.

சர்வதேச அரசியல் பற்றிய புரிதலின்றி, குருட்டுப் பகுத்தறிவில் (http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html) அவர்கள் அவ்வாறு பயணித்ததற்கும் காரணம் உண்டு.
 
'அடைந்தால் திராவிட நாடு, இன்றேல் சுடுகாடு' என்று அறிவித்து பயணித்தது தி.மு..

1960களில் பிரிவினையை  தி.மு. கைவிட்டபோது, அண்ணா  'பிரிவினைக்கான காரணங்கள்' தொடர்கின்றன' என்று அறிவித்து, பிரிவினைத் தீயானது, அணையாமல் இருக்க வழி செய்து கொண்டார்.

அந்த பிரிவினை சூடானது, சாகும் வரை 'பெரியார்' .வெ.ராவின் பேச்சுக்கள்/எழுத்துக்கள் மூலமாகவும், தி.கவில் இருந்த சிலராலும் பாதுகாக்கப்பட்டு வந்தது.

பின் நெருக்கடி காலத்தில், தி.. தலைவர் கி.வீரமணி ஆதரவு போக்கில் பயணித்த‌,  கும்பகோணம் ஸ்டாலின், கோவை.இராமகிருட்டிணன், இரத்தினகிரி உள்ளிட்ட பலர்இந்திரா காந்தியின்  நெருக்கடி ஆட்சி காலத்தில், தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு சில முயற்சிகள் செய்து, தி.மு. தலைவர் கருணாநிதிக்கும் அழுத்தம் கொடுத்தனர்.

முதல்வராயிருந்த கருணாநிதி, 'அமெரிக்காவின் ஆதரவுடன் தனித்தமிழ்நாடு' அறிவிப்பதை பரீசிலித்து, விவாதித்து, 'வியட்நாமில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு', அமெரிக்காவின் இராணுவ உதவியானது, இது போன்ற முயற்சிக்கு கிடைக்காது ' என்று கருத்து தெரிவித்திருப்பதை, 'வீக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ளது
(‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

தி.கவில் உள்ளவர்களின் அழுத்தத்தில், தி.மு. தலைவர் பரிசீலித்த 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு, தமிழ்நாடு மக்களிடையே எந்த அளவுக்கு ஆதரவு இருந்தது? அல்லது ஊழலின் கேடயமாக 'தனித்தமிழ்நாடு' கோரிக்கையும், தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பிற்கு உள்ளானதா? என்ற கேள்விகளை, நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியை கலைத்த பின், வெளிப்பட்ட 'சிக்னல்கள்' எழுப்புகின்றன.

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக
(‘நல்லவேளை, பிரியும் ஆபத்திலிருந்து தமிழ்நாடு தப்பித்தது’; http://tamilsdirection.blogspot.com/2017/12/2.html)

ஊழலையும், ஊழல் குடும்ப ஆட்சியையும் அரங்கேற்றிய தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதி, தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு புரவலராக இருந்து பயணித்ததைப் போலவே;

ஜெயலலிதா ஆட்சியில், பிரிவினைக்கட்சிகளின் புரவலராக (சசிகலா) நடராஜன் பயணித்தார் என்பதை கீழ்வரும் சான்றானது வெளிப்படுத்தியுள்ளது.

‘MN is known for his pro-Tamil chants and secret funding to pro-Tamil groups in the state.   During the agitations in 2008 and 2009 against the Srilankan army - LTTE war, MN was found hobnobbing with pro Eelam groups so much so that he even participated in hall meetings and public rallies organised by the Pro-Tamil groups.’; 

அதாவது தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளுக்கு காரணமான பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்;

என்பதையே மேலே குறிப்பிட்ட சான்றுகள் உணர்த்துகின்றன. இந்திய விடுதலையை துக்க தினமாக 'பெரியார்' .வெ.ரா அறிவிக்க காரணமாக இருந்த, 'வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்கள்'(குடிஅரசு 27.12.1948) போன்றோரை மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன

அறிவுபூர்வ விமர்சனப் பார்வையை இழந்து, திராவிடக்கட்சிகளின் வழிபாட்டு நோய்க்கு பிரபாகரனையும் உட்படுத்தி, ‘விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன் 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால் அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?

'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது ("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல‌) தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது, என்ற நோக்கில், சசிகலாவை முதல்வராக்கும் நோக்கில் சுப்பிரமணிய சுவாமி பயணித்தாரா? பயணிக்கிறாரா?

தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர் பயணிக்கிறோமா
(‘தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) முட்டாள்கள் ஆகி வருகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post.html)

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், சசிகலா முதல்வராகும் முயற்சியை ஆதரிக்கும் போக்கில், 'பெரியார் தந்த புத்தியில்' ஆதரித்தவர்களும், ராஜபட்சேயின் நண்பர் சுப்பிரமணிசாமியும் சங்கமமான வினோதமும் தமிழ்நாட்டில் அரங்கேறியது. 'அந்த' சங்கமத்தின் மூலமாக, குடும்ப ஊழல் பாதுகாப்பு கவசமாக, தி.மு. தலைவர் உருவாக்கிய, பின் ...தி.மு. ஆட்சியில் நடராஜன் விடுதலைப்புலி ஆதரவாளர்களையும் தமது அடிவருடிகளாக்கி வளர்த்தெடுத்த, 'சமுக கீரி பாம்பு சண்டையானது' முடிவுக்கு வந்து விட்டது.

'சமூக கீரி பாம்பு' சண்டை காட்டி எவரும் பொதுவாழ்வு வியாபாரத்தில் ஈடுபட, 1944க்கு முன் தமிழ்நாட்டில் இருந்த சமூக சூழலானது அனுமதிக்கவில்லை. நேர்மையான சுயசம்பாத்தியம் உள்ளவர்களே, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்தது. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது.

1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது.

எனவே திராவிடக்கட்சிகளில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, ஊர்வலத்தில் பங்கேற்க, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, கோவிலில் மொட்டை போட, தீ மிதிக்க, காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகும் போராட்டத்தில் பங்கேற்க, சில நாட்கள் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க, என்று ஒவ்வொன்றிற்கும் கட்டணங்கள் 'அன்றைய சந்தை நிலவரத்தைப் பொறுத்து(?) கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த‌ 'தொண்டர்களை'(?) அழைத்து வரும் உள்ளூர் 'அரசியல் தரகர்களுக்கும்', அது போல கட்டணங்களும் நிர்ணயிக்கப்படுகின்றன.

சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

(1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.)

மேலே குறிப்பிட்ட நகைச்சுவை காட்சிகளில், ஒரு சிறிய மாற்றம் கற்பனை செய்தால், அது நிகழ்கால அரசியலுக்கு பொருத்தமாக இருக்க வாய்ப்புண்டு.

சத்யராஜுக்குப் பதிலாக இன்னொரு எடுபிடியை தேர்தலில் மணிவண்ணன் நிறுத்தி, வெற்றி பெற்ற 'எடுபிடிக்கு',  சத்யராஜ் அதே 'அமாவாசையாக' எடுபிடியாகி, மணிவண்ணனுடன் 'நெருக்கமாக இருந்த பெண்ணை',  அந்த வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கு நெருக்கமாகுமாறு தூண்டி, மணிவண்ணனை அவமானப்படுத்தினால் எப்படி இருக்கும்

எனவே இன்று அரசியலில் செல்வாக்குடன் வலம் வரும் தலைவர்களின் செல்வாக்கானது வீழும் போது, அவர்கள் எல்லாம் மேற்சொன்ன 'மணிவண்ணன் கதாபாத்திரமாக' நிஜ வாழ்க்கையில் வெளிப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியுமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவானது, தினகரன் செல்வாக்கினை எந்த அளவுக்கு, அனைத்துக் கட்சிகளும் அஞ்சும் அளவுக்கு உயர்த்தியது? கடந்த பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், எந்த அளவுக்கு, அடுத்து வந்த இடைத்தேர்தல்களில் போட்டியிட அஞ்சும் அளவுக்கு சரிந்தது?

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், தி.மு.கவை டெபாசீட் இழந்த கட்சியாகவும், பா.‌.கவை நோட்டா கட்சியாகவும் வெளிப்படுத்தி, அடுத்து வந்த பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் ஆர்.கே நகர் வெற்றியை தி.மு.கவிற்கு தானம் கொடுத்து, தி.மு.கவின் டெபாசீட் இழந்த கட்சி என்ற இடத்தை அபகரித்தது தினகரன் கட்சி. அதைப் போலவே. மேற்குறிப்பிட்ட.பிரமாண்ட வெற்றியை ஈட்டிய தி.மு. வானது, அடுத்து வந்த வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில், நோட்டா வாக்குகளை விட குறைவான வேறுபாட்டில் வெற்றி பெறும் அளவுக்கு, தினகரன் திசையில் தி.மு. பயணிக்கத் தொடங்கியுள்ளது.

‘'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், இது போன்ற எதிர்பாராதபிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்

1949 இல் பெரும்பாலும் சாமான்யர்களின் சொந்த பணத்தாலும், உழைப்பாலும் வளர்ந்த தி.மு.கவானது, 1969 முதல் ஆதாய அரசியலைத் தூண்டி, குடும்ப ஊழல் அரசியலை வளர்த்த போக்கில், அரசியல் நீக்கத்தில் தமிழ்நாட்டினைச் சிக்க வைத்து விட்டது. 'அந்த' ஆதாய அரசியலின் வளர்ச்சிக்கு 'சமூக கீரி பாம்பு விளையாட்டு' மிகவும் பயன்பட்டது.

தமிழ்நாட்டு அரசியலில், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' அடுத்தடுத்து மண்ணைக் கவ்வும் போக்கும் தொடங்கி விட்டது


இதுவரை தமிழ்நாட்டில் வளர்ந்து, இன்று முடிவினை நெருங்கியுள்ள 'சமூக கீரி பாம்பு சண்டைகள்' எல்லாம், இளம் இயக்குநர்களின் வியாபார ரீதியில் வெற்றி பெறும் நகைச்சுவை திரைப்படங்களுக்கான, திரைக்கதை வசனங்களை உருவாக்கத் துணைபுரியும் கட்டம் நெருங்கி விட்டது.

No comments:

Post a Comment