Monday, October 5, 2020

 

சசிகலா குடும்ப அரசியலுக்கும், கருணாநிதி குடும்ப அரசியலுக்கும் என்ன வேறுபாடு?


2021 சட்டசபை தேர்தல் முடிவுகள், 1952 தேர்தலைப் போலவா?

 

2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்காவிட்டால், என்ன ஆகும்? ஸ்டாலின் தலைமைக்கு பெரும் பின்னடைவாகும். 2021 சட்டசபை தேர்தலில், சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டி, அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்குமானால், சசிகலா குடும்ப அரசியல் செல்லாக்காசாகி விடும்.

எனவே சசிகலா குடும்ப அரசியலுக்கும், கருணாநிதி குடும்ப அரசியலுக்கும் வாழ்வா, சாவா, என்ற உச்சக்கட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் நடுவில், தமிழக பா.ஜ.க தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தம்மை வளர்த்தெடுக்க முயன்று வருகிறது.

மேற்குறிப்பிட்ட மூன்று விசைகளின் (Forces) தொகுவிசை திசையிலேயே (Resultant Direction) தமிழ்நாடு பயணிக்கப் போகிறது.

அதைக் கணிக்க, முதலில் சசிகலா குடும்ப அரசியலுக்கும், கருணாநிதி குடும்ப அரசியலுக்கும் என்ன வேறுபாடு? என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டாக வேண்டும்.

கருணாநிதி குடும்ப அரசியலானது, கருணாநிதியின் விசுவாசிகள் என்ற அடித்தளத்தின் மேல், ஆதாய அரசியல் வலைப்பின்னலில் செயல்பட்டது.

ஆனால், சசிகலா குடும்ப அரசியலானது, ஜெயலலிதா விசுவாசிகளுடன் தொடர்பின்றி, ஜெயலலிதா முதல் முறையாக சிறை சென்றதிலிருந்து அந்த விசுவாசிகளின் கோபத்திற்குள்ளாகி, ஜெயலலிதா மீது சசிகலாவிற்கு இருந்த செல்வாக்கின் அடிப்படையில் உருவான ஆதாய அரசியல் வலைப்பின்னலில் செயல்பட்டது. ‌

அடுத்து, கருணாநிதி குடும்ப அரசியலானது, மாவட்டங்களில் உள்ள தி.மு.க அதிகார பீடங்கள் என்ற தூண்களின் வலுவில், மையப்படுத்தப்பட்ட அதிகார பீடமாக செயல்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியில், அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் நிரந்தரமின்றி, அவ்வப்போது மாற்றங்களுக்கு உள்ளாக நேரிட்டது. எனவே, சசிகலா குடும்ப அரசியலானது, தி.மு.கவிற்கு இருக்கும் மாவட்ட அளவிலான அதிகார பீடங்கள் என்ற தூண்கள் இன்றி, ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பின்னிருந்து இயக்கிய ஆதாய அரசியல் வலைப்பின்னலில் செயல்பட்டது.

எனவே தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கும், விவரமானவர்களுக்கும் தங்களுக்கான காரியத்தை சாதித்துக் கொள்ள அ.இ.அ.தி.மு.க ஆட்சியை விட, தி.மு.க ஆட்சியே என்றும் விரும்பத்தக்கதானது.

ஜெயலலிதாவின் மரணம் மூலமாக, மேற்குறிப்பிட்ட ஆதாய அரசியல் வலைப்பின்னலை சசிகலா எளிதில் கைப்பற்ற முடிந்தது. ஆனால் ஜெயலலிதாவின் மர்ம மரணம் மூலமாக, ஏற்கனவே ஜெயலலிதா விசுவாசிகளின் கோபத்திற்குள்ளாகியிருந்த சசிகலா மீது, அந்த கோபமானது அதிகரித்ததுடன், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை விரும்புபவர்கள் மத்தியிலும் சசிகலா மீதும் ஜெயலலிதாவின் மீதும் இருந்த கோபங்களும் ஒன்றாகி அதிகரித்தது.

தமிழக முதல்வரின் மர்ம மரணத்திற்கு மெளன சாட்சியாகி, முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்த பந்தங்களை ஒதுக்கி, ஜெயலலிதாவைக் கொல்ல சதி செய்ததாக ஜெயலலிதாவால் குற்றம் சாட்டப்பட்ட‌ குற்றவாளிகள் சூழ இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும், நடராஜனையும் மோடி வணங்கி, மேற்குறிப்பிட்ட சசிகலா கோபத்தின் குவியமானது, எந்த அளவுக்கு தமிழக பா.ஜ.கவிற்கு அரசியல் தற்கொலையானது? என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவும், 2019 பாராளுமன்ற தமிழக தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்தின. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html )

அதன்பின், சசிகலாவை ஒதுக்கி, பா.ஜ.கவை ஓரங்கட்டி, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில், ஜெயலலிதா பாணியில் சாமான்ய வேட்பாளர்களை நிறுத்தி, அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றதானது, ஒரு முக்கிய சமூக சிக்னல் ஆகும்.

அது போலவே, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.கவிற்கு சமமாக, அல்லது சிறிது அதிகமாக, அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றதும் ஒரு முக்கிய சமூக சிக்னல் ஆகும்.

கருணாநிதி குடும்ப அரசியலில், மாவட்டங்களில் உள்ள தி.மு.க அதிகார பீடங்கள் என்ற தூண்களின் வலிமையானது, ஸ்டாலின் உருவாக்கிய அந்த தூண்களுக்கு எதிரான மாவட்ட எதிர் அதிகார பீடங்கள் மூலமாகவும், அதன்பின் ஸ்டாலின் பாணியில், அவர் மகன் உதயநிதி உருவாக்கி வரும் எதிர் அதிகார இளைஞர் பீடங்கள் மூலமாகவும், கருணாநிதி குடும்ப அரசியலின் வலைப்பின்னலானது, வேகமாக பலகீனமாகி வருகிறது. பிர்சாந்த் கிசோர் மூலமாக, அது இன்னும் மோசமாகி வருகிறது. பிர்சாந்த் கிசோரை நம்பிய உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ்தேர்தலில் முதல்வர் பதவியை இழந்து, மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லாத அளவுக்கு பலகீனமாகி விட்டார். அதே திசையில் ஸ்டாலினும் பயணிக்கத் தொடங்கி விட்டதாக தெரிகிறது.

ஆனால் பா.ஜ.கவானது, சசிகலா ஆதரவு போக்கில், தி.மு.க குடும்ப அரசியலை மட்டும் எதிர்ப்பதன் மூலமாக, ஸ்டாலின் உதயநிதி அரசியல் மீது வெறுப்புடன் இருந்த தி.மு.க ஆதரவாளர்களும், இந்துத்வா எதிர்ப்பாளர்களும் மட்டுமின்றி, சசிகலா மீது மேற்குறிப்பிட்ட கோபத்தில் இருந்தவர்களும், ஸ்டாலினுக்கு ஆதரவாக குவியும் போக்கும் தொடங்கி விட்டது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியின் மூலமாகவும்,

உள்ளாட்சி தேர்தலில், தி.மு.கவிற்கு சமமாக, அல்லது சிறிது அதிகமாக, அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றதன் மூலமாகவும்,

சசிகலா குடும்ப அரசியலிலும், கருணாநிதி குடும்ப அரசியலிலும், சிக்காத ஆட்சியை தமிழ்நாடு பெறுவதற்கு உள்ள ஒரே வாய்ப்பாக‌ ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வெளிப்பட்டது. இருவரும் பிரியும் போது, அந்த வாய்ப்புக்கும் இடம் இருக்காது.

நானறிந்த ஜெயலலிதா விசுவாசிகளிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.

'சசிகலா ஆதரவுடன் ஒரு அணி இரட்டை இலை சின்னத்துடனும், சசிகலாவுக்கு எதிராக இன்னொரு அணி வேறு சின்னத்திலும் போட்டியிட்டால், யாருக்கு வாக்களிப்பீர்கள்?'

எனக்கு கிடைத்த பதில்களில் இருந்து, கீழ்வருவது வெளிப்பட்டது.

சசிகலா ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஒரு அணி வேட்பாளரை ஜெயலலிதா விசுவாசிகள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்களின் வாக்குகள் எல்லாம், அ.இ.அ.தி.மு.கவின் சசிகலா எதிர்ப்பு அணிக்கு, அல்லது சசிகலா அணியைத் தவிர்த்து, மற்ற வேட்பாளர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ, அவர்களுக்கு போகும்.

சசிகலா எதிர்ப்புடன், பா.ஜ.க தொடர்பின்றி போட்டியிடும் அ,,,தி.மு.கவானது, தி.மு.கவின் வெற்றி வாய்ப்புகளைக் குறைக்கும்.

அந்த நிலையில், 1952 தேர்தலைப் போல, எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை இல்லாத குழப்ப நிலை வரும்.

சசிகலா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் டெபாசீட்டிடம் தோற்கும் கட்சியாகவும், சில இடங்களில் நோட்டாக் கட்சியாகவும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

வாக்குக்குப் பணம் விநியோகித்து பேரைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத குழப்பத்தில், பா.ஜ.க அதிர்ச்சியான தோல்வியைச் சந்திக்கும்.

கருணாநிதி அல்லது சசிகலா குடும்ப அரசியலில்,  யார் ஆட்சிக்கு வந்தாலும், மடியில் உள்ள ஊழல் கனத்தைப் பொறுத்து, அந்த அளவுக்கு மத்தியில் உள்ள ஆட்சிக்கு சேவகம் செய்யும் ஆட்சியாகவே இருக்கும். (மடியில் கனமிருந்தால், டிஜிட்டல் யுகத்தில்; அந்தரங்கம் எல்லாம் தொந்திர(வு)ங்கமே; https://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_12.html)

ஆனால், தேர்தலுக்கும் முன், கருணாநிதி, மாறன், சசிகலா குடும்பங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் சிலவற்றிலாவது குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வேகமெடுத்தால், வாக்குக்கான பண விநியோகத்திற்கு வாய்ப்பின்றி தேர்தல் நடைபெறும். அவ்வாறு தேர்தல் நடந்தால், நெருக்கடி காலம் முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றது போலவே, தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆதரவு அணியே ஆட்சியைப் பிடிக்கும்.

அதற்கு தமிழக பா.ஜ.கவானது எல்.முருகன் தலைமையில் அண்ணாமலையை முன் நிறுத்தி முன்னெடுக்கும் தமிழ் அடையாள அரசியல் உதவும். (எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்'?; https://tamilsdirection.blogspot.com/2020/09/1967-3.html)

No comments:

Post a Comment