Wednesday, September 23, 2020

 முதல்வர் ஈபிஎஸ்ஸுக்கு மட்டும் அவமானமல்ல


பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டுக்குமே முதல் அவமானம்




இந்த படம் முதல்வர் ஈபிஎஸ்ஸுக்கு மட்டும் அவமானமல்ல.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வெளிப்பட்ட கரும்புள்ளியாகி,

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியிலும், சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) விரும்புபவர்களின் மத்தியிலும், மோடியின் செல்வாக்கினை வீழ்த்திய அவமானமாகும். அதற்கான காரணம் வருமாறு:.  

முதல்வர் ஜெயலலிதாவால் ஊடக வெளிச்சத்துடன் கொலைக்குற்றத்திற்கு உள்ளானவர்களின் மேற்பார்வையில், பல மாதங்கள்  அப்பொல்லோவில் நடந்த  மர்ம சிகிச்சைக்கும் மர்ம மரணத்திற்கும் மெளனசாட்சியாக பிரதமர் மோடி வெளிப்பட்டுள்ளார்.

2005 முதல் இன்று வரை நான் மோடி ஆதரவாளன். மன்மோகன்சிங், தேவ கவுடா உள்ளிட்ட எந்த ஆட்சியிலும் நடந்திருக்க வாய்ப்பில்லாத கூத்து இது. இந்தியாவின், தமிழ்நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் நான் வெட்கி தலைகுனிந்த கூத்து அது.

அந்த கூத்து முடிந்து, அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.

சொந்த பந்தங்களை ஒதுக்கி, அந்த குற்றவாளிகள் சூழ இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும், நடராஜனையும் மோடி வணங்கிய வரலாற்று அவமானத்திற்குப் பின், எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

சுப்பிரமணிய சுவாமி ஆளுநரைச் சந்தித்து, சசிகலாவை முதல்வராக்க வற்புறுத்திய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம். ராஜாத்தி அப்பொல்லோவில் சசிகலாவைச் சந்தித்த பின், எடுக்கப்பட்ட படம். எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், அப்போல்லோ வாசலில் ஊடக வெளிச்சத்துடன், மர்ம மருத்துவ சிகிச்சைக்கு ஒத்து ஊதிய பின் எடுக்கப்பட்ட படம். 

எனவே நான் உள்ளிட்டு பிரதமர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் உள்ளிட்டு, தமிழ்நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய புகைப்படம் அது.

நானறிந்த வரையில் முதன் முதலாக மேடையில் காலில் விழும் பண்பாட்டைத் துவக்கியவர் முரசொலி மாறன் ஆவார். 1967இல் அண்ணா முதல்வராகி, தமது தென்சென்னை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில், கட்சியில் மூத்தவர்களை எல்லாம் பின் தள்ளி முரசொலி மாறனை வேட்பாளாராக்கினார். எம்.பியான முரசொலி மாறன் பொதுக்கூட்ட மேடையில் அண்ணா காலில் விழுந்து வணங்கினார். தமது காலில் விழ முயன்றவர்களைக் கண்டித்து தடுத்த ஈ.வெ.ரா மற்றும் துக்ளக் சோ போல, அண்ணா தமது காலில் விழுந்த முரசொலி மாறனை கண்டித்ததாக நான் கேள்விப்படவில்லை. ‌

தன்மானம் இழந்து காலில் விழுந்து, தத்தம் தகுதிக்கும் மீறிய பணம், பதவி, பட்டங்கள் பெறும் 'நோஞ்சான்' நோயானது 1967இல் முளை விட்டது.

அதன்பின் தி.மு.க கருணாநிதியின் குடும்பக் கட்சியானது. தி.மு.கவில் வளர, கருணாநிதியின் காலில் விழுவது முன் நிபந்தனையானது.

கருணாநிதியை விஞ்சும் அளவுக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியில், அது இன்னும் மோசமானது.

1995இல் தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாடு நடந்தது. அம்மாநாட்டின் போது, மிகவும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டதால், பலர் வீடுகளில் சமைக்காமல், அந்த உணவையே வாங்கி சாப்பிட்டார்கள்; உலகின் கவனத்தை ஈர்த்த 'அம்மா உணவகத்திற்கு' முன்னோடியாக. அது போல, நான் கேள்விப்பட்ட கீழ்வரும் தகவலும் எனக்கு மறக்க முடியாததானது.

அம்மாநாட்டிற்காக ஜெயலலிதா தஞ்சைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். தஞ்சை அரசு மக‌ளிர் கல்லூரி அருகே இறங்கு தளம் அமைக்கப்பட்டிருந்தது. மக‌ளிர் கல்லூரியின் மொட்டை மாடியில் மாணவிகள் ஜெயலலிதாவைப் பார்க்க குவிந்திருந்தனர்.

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வி.ஐ.பிக்கள் எல்லாம் ஜெயலலிதா காலில், அந்த மண் தரையில் விழுந்தனர். ஜெயலலிதா அவர்கள் காலில் விழுந்ததைக் கவனிக்காமல், நடக்க, ஜெயலலிதாவின் பின்னே, தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறினர்.

உடனே கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்த மாணவிகள் அனைவரும் பலமாக சிரித்த ஒலி அந்த பகுதியை அதிர வைத்தது.

மறுநாள் சென்னையில் இருந்து கல்லூரி முதல்வரை தொலைபேசியில் அழைத்து கண்டித்துள்ளார்கள். சில காலம் கழித்து, அங்கு பணியாற்றிய பேராசிரியையுடன் உரையாடுகையில், அவர் அந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அது போலவே, ஜெயலலிதா மறைந்த பின்னர், முதல்வர் ஆக முயற்சித்த சசிகலாவின் காலில் கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் காலில் விழுந்தார்கள். அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவிகளைப் போலவே, தமிழ்நாடெங்கும் அக்காட்சியைக் கண்டவர்கள் எல்லாம் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.

நான் கல்லூரி முதல்வராக இருந்த போது, அருகில் உள்ள மாவட்ட தலைநகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். அப்போது துணைவேந்தராக இருந்தவர் மேடையில் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கியதை அறிந்த மாணவர்களும் பேராசிரியர்களும் எவ்வாறு சிரித்தார்கள்? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மத்தியில் கல்லூரி முதல்வர் பதவிக்கு மரியாதை கிடையாது என்பதையும், அந்த பதவியில் எந்த அளவுக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் பங்களித்தேன்? என்ற அடிப்படையில் தான், எனக்கு மரியாதை கிடைக்கும் என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா ஆகிய அம்மூவரில் இருந்தும் வேறுபட்டு எம்.ஜி.ஆர் பயணித்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியால் அவமதிக்கப்பட்ட புலமையாளர்களை மிகவும் மதித்து ஆலோசனைகள் பெற்று, எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்தினார். கி.ஆ.பெ விஸ்வநாதன் போன்றவர்களை வழி அனுப்பும் போது, அவர்களை காரில் உட்கார வைத்து, கதவை எம்.ஜி.ஆரே மூடி வழி அனுப்பி வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் ஆணையில், டார்பிடோ ஜனார்த்தனத்தை தேடி, குடிசை மாற்று வாரிய வீட்டில் குடி இருப்பதை, பச்சையப்பன் கல்லூரி பேரா.தாண்டவன் (பின்னாள் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்) கண்டுபிடித்தார். அவர் சென்ற மோட்டர்சைக்கிளின் பின்புறத்தில் தாமாகவே டார்பிடோ ஜனார்த்தனம் உட்கார்ந்து பயணித்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறை முன் உள்ள பெஞ்சில் அவரை உட்கார வைத்து, உள்ளே சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தாண்டவன் அதைச் சொன்னார். எம்.ஜி.ஆர் அதிர்ந்து, 'அவ்வளவு பெரிய மனிதரையா வெளியில் உட்கார வைத்தாய்' என்று தாண்டவனைக் கடிந்து, எம்.ஜி.ஆரே வெளியில் வந்து, அவரை வணங்கி உள்ளே அழைத்துச் சென்றார். பின் அவரை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற நிபுணர்களை  துணை வேந்தர்களாக்கினார்.

ஜெயலலிதா (சசிகலா) மற்றும் கருணாநிதி ஆட்சிகளில் துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் போன குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

அது வளர்ந்து முற்றி, துவக்கத்தில் குறிப்பிட்ட தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறி, அதன் தொடர்ச்சியாகவே, சசிகலாவின் காலில், கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் விழுந்தார்கள்.  (‘கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா சங்கமம்; தன்மானம் இழந்த தமிழர்கள் வளர்ந்த தமிழ்நாடு? https://tamilsdirection.blogspot.com/2020/09/1995.html )

மோடி பிரதமராக இருந்த காலத்தில், ஆளுநர் மற்றும் பிரதமர் மோடியின் கண்களில் மண்ணைத் தூவி, எந்த அளவுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக (Extra Constitutional Authority) செயல்பட்டார்? என்பதும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. உதாரணமாக,

The last 75 days of political management, attributed to Sasikala and possibly her supposedly estranged husband M Natarajan, has won her considerable respect among AIADMK party managers. She moved along with Jayalalithaa to Apollo and, with the help of Jayalalithaa’s close advisors, took charge of the hospital surroundings and ensured that only messages she crafted went out to the public. It is now almost certain that none of Jayalalithaa’s cabinet colleagues had any knowledge of what was going on inside the hospital. Even constitutional functionaries like the Governor could not ascertain the exact health condition of Jayalalithaa. (https://swarajyamag.com/politics/tamil-nadu-politics-at-the-crossroads-where-does-it-go-from-here )

ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.” (http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-men-upset-over-sasikala-s-relatives-rajaji-hall-269130.html  )

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளி வந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? https://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html

ஊழல் திமிங்கிலங்களை சிறையில் அடைத்து, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப் பயப்படும் அளவுக்கு, இந்தியாவிலேயே எளிதாக ஊழலற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும்;

என்பதானது இந்திராகாந்தியின் நெருக்கடி கால ஆட்சியில் வெளிப்பட்டது.

பிரதமர் மற்றும் ஆளுநரின் கண்களில் மண்ணைத் தூவிஊழல் திமிங்கிலங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக அனுமதித்து, பல மாதங்கள் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் மாநில முதல்வரையே பலியாக்கிய அவலமானது;

பிரதமர் மோடியின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 1969க்கு முன்னும் பின்னும் என்று ஒரு கட்டமாகவும், 1991க்கு முன்னும் பின்னும் என்று இரண்டாவது கட்டமாகவும், பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கைப்பற்றியுள்ள சொத்து மற்றும் தொழில் வியாபாரங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் எல்லாம் அரசு வசம் உள்ள புள்ளி விபரங்களில் வெளிப்பட்ட வாய்ப்பில்லை.

அந்த அளவுக்கு பினாமி மற்றும் அந்நிய செலாவணி மோசடி மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டுகளிலும் சொத்துகள் வாங்கும் சமூக செயல்நுட்பம் அதிகரித்து விட்டது.‌ அது மட்டுமல்ல, இந்தியாவையே 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது, என்பது மோடி ஆட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

தமிழக மக்களின் நாடித்துடிப்புகளிடமிருந்து அந்நியமாகி, திராவிட ஊழல் தலைவர்களுக்கு நெருக்கமாகிப் பயணித்த, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், தமிழக மக்களின் அவநம்பிக்கைக்கு பிரதமர் மோடி உள்ளாகியுள்ளார். அதன் விளைவாக, அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியலில் பயணித்து வரும் தமிழ்நாடானது 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html )

சுய பலமின்றி, கருணாநிதி அல்லது சசிகலா குடும்பங்களுடன் ஒட்டிப் பயணித்த கட்சிகள் எல்லாம், அந்த நோய்க்கு 'சமூக வினையூக்கியாக(Social Catalyst) பங்களித்து வருகிறார்கள். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html) ‌

குடும்பமாக இருந்தாலும், பணியாற்றும் இடமாக இருந்தாலும்கட்சியாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் அங்குள்ள சூழலானது நோஞ்சான்களை வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் இருக்கலாம்; அல்லது ஒட்டுண்ணிகள் போலவும் வாழத் தூண்டும் வகையிலும் இருக்கலாம்.

இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்.

தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த பின்னரும், 'அதே' செல்வாக்குடன் தத்தம் சாதிகளில் உலா வந்து, அந்தந்த சாதி அமைப்புகளில் 'நோஞ்சான்' நோயைப் பரப்பி வருகின்றனர். 

கூட்டுக்குடும்பத்தின் வலிமையானது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வலிமையைப் பொறுத்ததாகும்.  உறுப்பினர் எவரும் நோஞ்சானாக இருக்கும் பட்சத்தில், அவர் விரும்பினாலும் மற்ற வலிமையான உறுப்பினர்களுக்கு உள்ள மரியாதை கிடைக்காது. அதே நேரத்தில், கூட்டுக்குடும்பத்தில் அதீத வலிமையுள்ள உறுப்பினருக்கு சிறப்பு மரியாதையே கிடைக்கும்.

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2.html )

இந்தியாவில் தமிழ்நாடானது, எந்த அளவுக்கு நோஞ்சான் நாடாகப் பயணித்தது? என்பதற்கு, மேற்குறிப்பிட்ட புகைப்படமே வரலாற்றில் சாட்சியான ஆவணமாக இடம் பெறத் தக்கதாகும்.

குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள முரண்பாடுகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html)

2 comments:

  1. திராவிடக்கூத்து

    ReplyDelete
    Replies
    1. தில்லி ஆட்சி அதற்கு ஆதரவு என்பதே கட்டுரையின் சாரம்.

      Delete