Sunday, September 20, 2020

பிராமண துவேசம், பிரிவினை வளர்ச்சிக்கு பங்களித்த‌ 


'proactive - நேர்வினை' ராஜாஜியும்

'reactive - எதிர்வினை' ஈ.வெ.ராவும்

 

'மிக நல்ல பதிவு‍ ராமசாமி நாயக்கர் அயோக்கிய பயல் என்பதை தெளிவாக உள்ளது.',

'இந்த முட்டாள் பிரிட்டிஷ் அடிவருடி ஒழுக்கம் கெட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கனைப் போயி பெரியார் என்று கும்பிடும் ஈனக் கூட்டம் திராவிடக் கட்சிகள். த்தூ...' ,

'ஒரு நாள் வரும்., அந்த திருநாளில் இந்த அயோக்கியன் பெரியாரின் சிலைகளும் உருவ படங்களும் தூக்கி எறியப்படும்.... இதற்கு ஒரே வழி பிஜேபி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்...',

'மகளை மணமுடித்த காமாந்தகன் சொறியார்',

'முருகன் இதற்கு நீங்கள் பா ஜ க வில் இருக்க தேவையில்லை.  இப்போவே போய் திருட்டு திராவிட கழகத்தில் சேர்ந்து விடுங்கள். உங்களை டாஸ்மாக் மாநில பா ஜ க தலைவர் ஆக்கினார்களே மோடியும் அமித்ஷாவும் அவர்களை சொல்லவேண்டும்.'

மேலுள்ளவை எல்லாம் கீழ்வரும் காணொளியின் கீழுள்ள பதிவுகள் ஆகும்.

https://www.youtube.com/watch?v=dhdk5MvH_cE&feature=youtu.be

முகநூலிலும் மேற்குறிப்பிட்டது போன்ற கருத்துப் பதிவுகள் வெளிவந்துள்ளன.

பிராமண துவேசம், பிரிவினை வளர்ச்சிக்கு 'proactive - நேர்வினை'யாக‌ ராஜாஜி எந்த அளவுக்கு பங்களித்துள்ளார்? என்பது புரிந்த பின், மேற்குறிப்பிட்ட அதே பாணியில், ராஜாஜியையும் கண்டிப்பார்களா?

இல்லையென்றால், அது என்ன பாணி துவேசம்? என்பதானது, மேற்குறிப்பிட்ட பாணியில் ஈ.வெ.ராவைக் கண்டித்தவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

ஈ.வெ.ரா, காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் இழிவு செய்து கண்டிப்பதானது, கருணாநிதி அறிமுகப்படுத்‌திய சமூக நோயாகும். கருணாநிதி அறிமுகப்படுத்திய‌ ஆளுயரமாலை, மலர்க்கிரீடம் போல, அந்த தி.மு.க பாணி நோயில் தமிழக பா.ஜ.க சிக்கியிருப்பது ஆபத்தான அறிகுறியாகும்.

இதில் இன்னொரு வினோதமும் உண்டு. ஈ.வெ.ராவைக் கண்டித்த இந்துத்வா பிரபலங்கள் எல்லாம், கருணாநிதி, மு.க.அழகிரி, சசிகலா நடராஜன் ஆகிய ஊழல் குடும்பங்களிடம் சரணடைந்தவர்கள் ஆவர். அவ்வாறு சரணடைந்தவர்களின் ஆதரவாளர்களுக்கும், அந்த ஊழல் குடும்பங்களின் ஆதரவாளர்களுக்கும் தரத்தில் வேறுபாடு இருக்க முடியுமா?

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி வெளிவந்தவைகளைப் படித்தால், தி.மு.கவை விட தரம் தாழ்ந்து, இன்று பா.ஜ.க ஆதரவாளர்கள் பயணிப்பது தெளிவாகும்.

சேலம் நகராட்சித் தலைவராக ராஜாஜி இருந்த போது, ராஜாஜியின் ஆருயிர் நண்பர் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித் தலைவர் உள்ளிட்டு சுமார் 29 பதவிகளில் (29 such as - Honorary Magistrate , District Board, Taluk Board, Urban Bank, Religious Davasthanam (Trust), Public Library, War Recruitment Committee, Association of Agriculturists, Association of Merchants, Mahajana School Committee... etc.) இருந்தார்.

ராஜாஜியின் தூண்டுதலின் பேரில், 1919இல் காங்கிரசில் சேர்ந்த போது, மேற்குறிப்பிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார்.

1919 முதல் 1925 இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரை, ஈ.வெ.ராவின் பேச்சுக்களில் பிராமண துவேசம் வெளிப்படவில்லை. 

சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வெ.ரா, 1924இல் வைக்கப் போராட்டத்தை தோல்வியில் இருந்து காப்பாற்ற, காந்தியின் அறிவுறுத்தலில் ஈடுபட்டார். அப்போது ராஜாஜி உள்ளிட்ட பல தமிழ்நாட்டு பிராமணர்களும் அப்போராட்டத்திற்கு பல வழிகளில் பங்களித்துள்ளனர். அப்போராட்டத்தில் ஈ.வெ.ராவின் மனைவி நாகம்மையாரும், அவரின் சகோதரியும் பிரமிக்கும் வகையில் பங்களித்துள்ளார்கள். காந்தி ஈ.வெ.ரா குடும்பத்தின் பங்களிப்பைப் பாராட்டி, தமது 'ஹரிஜன்' பத்திரிக்கையில் எழுதி, அது தொகுப்பு நூல்களிலும் வெளிவந்துள்ளது. சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகளை எதிர்க்கும் இன்றைய ஆர்.எஸ்.எஸ் பாணி தேசியவாதியாகவே, ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். 

உதாரணமாக,

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'-  ஈ.வெ.ரா (பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கான சான்றுகள் 'வைக்கம் போராட்டம்' (பழ.அதியமான்) நூலில் உள்ளன.

காங்கிரசில் ஈ.வெ.ரா முன்னெடுத்த வகுப்புரிமை தீர்மானமானது, பிராமணர்கள் உள்ளிட்டு சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் அவரவர் விகிதாச்சாரத்திற்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகள் கோரும் வகையில் இருந்தது. சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகளை எதிர்க்கும் நோக்கத்தில் தான், அத்தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் முன்னெடுத்தார். அத்தீர்மானம் நிறைவேறி இருந்தால், காங்கிரசை விட்டு ஈ.வெ.ரா வெளியேறி இருக்க மாட்டார். தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் வந்திருக்காது. 

இன்று பிராமண துவேசம், பிரிவினை  போன்ற திசையில், ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்துக்கக்ளுக்கும் இடம் இருந்திருக்காது.

ராஜாஜி, சத்தியமூர்த்தி, திரு.வி.க உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் சமூக நேர்மையில் இருந்து தடம் புரண்டு, எவ்வாறு ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் (பெரும்பான்மை மூலம் நிறைவேற வாய்ப்பிருந்தும்) அத்தீர்மானத்தை தோற்கடித்தார்கள்?

வ.உ.சி ஈ.வெ.ராவை தமது தலைவராக ஏன் அறிவித்தார்? அவ்வாறு அறிவித்த போதும், பெரியார் படத்தை திறந்து வைத்து வ.உ.சி ஈ.வெ.ராவைப் பாராட்டி பேசியபோதும், அந்த புகழ்ச்சியை எவ்வாறு ஈ.வெ.ரா கண்டித்தார்? என்பதை, உண்மையை அறியும் ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். எனக்கு நேரம் கிடைக்கும் போது, அதற்கான சான்றுகளை எல்லாம் தொகுத்து வெளியிடும் எண்ணமும் உள்ளது.

அகில இந்திய மாநாடுகளில் ராஜாஜி வகுப்புரிமை தீர்மானத்தை ஆதரித்த தகவல்களை எல்லாம் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு ராஜாஜி எதிர்ப்பு தெரிவித்த இரட்டை வேடப் போக்குகளையும் ஈ.வெ.ரா அம்பலப்படுத்தி இருக்கிறார்.

உதாரணமாக,

காக்கிநாடா காங்கிரசிலும் சீமான் தாஸும், கல்கத்தா முகமதியர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே முக்கியமாகக் குறித்து சீமான் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேரிக்கப்பட்டு இருக்கிறது.' குடிஅரசு 17 01 1926

எனவே சமூக நேர்மையில் இருந்து தடம் புரண்டு, சமூக நீதி கோரிய தீர்மானத்தை காங்கிரசில் தோற்கடிப்பதில் ராஜாஜி 'proactive - நேர்வினை'   பங்களித்திருக்கிறார். அதற்கு , 'reactive - எதிர்வினை'யாகவே,  ஈ.வெ.ரா 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அதன்பின் 1925இல் குடிஅரசு இதழைத் துவக்கி, தமது பக்கமுள்ள நியாயங்களை வெளிப்படுத்தினார். அதன் பின்னும்  காங்கிரஸ் திருந்தி பயணிக்கவில்லை. 

ஒருவரின் குறைகளை குறிப்பிட்டு அதையும் மீறி அவரைப் பாராட்டுவதற்கான நிறைகளையும் குறிப்பிட்டு ஈவெரா பாராட்டியது; ஒருவரின் நிறைகளைக் குறிப்பிட்டு அதையும் மீறி அவரின் குறைகளை வெளிப்படுத்தி ஈவெரா கண்டித்தது, 1944க்கு முன் வெளிவந்த குடிஅரசு இதழ்களில் படித்து வியந்திருக்கிறேன். அது போல, தமது நிலைப்பாட்டினை எதிர்த்தவர்களின் கருத்துகளையும் குடிஅரசு வெளியிட்ட பெருமை தமிழ்நாட்டில் ஈ.வெ.ராவிற்கு மட்டுமே இருந்தது. ஈ.வெ.ராவிற்குப் பின் துக்ளக் சோ அவ்வாறு பயணித்ததையும் எனது பதிவுகளில் வெளியிட்டிருக்கிறேன். உதாரணமாக, விடுதலைப் புலிகளை எதிர்த்த சோ, தமது துக்ளக் இதழில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பழ.கருப்பையா எழுதிய கட்டுரையை வெளியிட்டார்.

அவ்வாறு பிரமிக்கும் வகையில் பயணித்த ஈ.வெ.ரா, அண்ணாவின் தொடர்புக்குப் பின், பாதகமான மடை மாற்றத்திற்கு உள்ளானார். உணர்ச்சிபூர்வமான துவேச பாணியில் தமது கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார். (‘ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்’; https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

காஷ்மீரில் பிரிவினைக்காக‌ வெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட வலிமையாக‌, தமிழ்நாட்டில் பிரிவினைக்காக வளர்ந்ததே, இன்று 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான' மென்சக்தியாகும் (Soft Power) என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

ஒரு மாநில முதல்வரைக் கொல்ல சதி செய்ததாக ஊடக வெளிச்சத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேற்பார்வையில், மத்திய அரசை மெளன சாட்சியாக்கி, பல மாதங்கள் மர்மமான முறையில் சிகிச்சை பெற்று மர்மமாக தமிழ்நாட்டில் மரணித்த அவலமானது, காஷ்மீரில் நடந்திருக்க முடியாது.

ஈ.வெ.ரா 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோரிக்கையுடன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை முன்னெடுத்ததன் விளைவாகவே, மேற்குறிப்பிட்ட மென்சக்தி அபாயமாக வளர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், ராஜாஜி 'proactive - நேர்வினை'   பங்களித்திருக்கிறார். அதற்கு , 'reactive - எதிர்வினை'யாகவே,  ஈ.வெ.ராவும் பங்களித்துள்ளார். அதனை அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment