Thursday, September 17, 2020

ஈ.வெ.ரா மற்றும் மோடி பிறந்த நாள் செம்டம்பர்17;


தமிழ் வேரழிந்து, ஊழல் குடும்ப அரசியலில் நிரந்தரமாக சிக்கி சீரழியும் வாய்ப்பு ?

 

இன்று பிரதமர் மோடிக்கும், ஈ.வெ.ரா அவர்களுக்கும் பிறந்த நாள். அது தொடர்பாக, முகநூலில் வெளிவந்த கீழ்வரும் பதிவு எனது கவனத்தினை ஈர்த்தது.

“ #இன்று #செப்17

பொதுநலனுக்காக இல்லறத்தை துறந்த ஒருவருக்கும்

பொதுநலப் போர்வையில் தன்  72 வயதில் 27 வயது பெண்ணை  திருமணம் செய்த ஒருவருக்கும் பிறந்தநாள்

#இன்று

தான் வளர்த்த இயக்கத்தவரால் அரசியலில் தோற்கடிக்கப்பட்ட ஒருவருக்கும் தான் சார்ந்த இயக்கத்தால் பிரதமராக உருவாக்கப்பட்ட ஒருவருக்கும் பிறந்த நாள்

#இன்று

தனது ஆன்மிக தவத்தால் உலகை வென்று வரும் ஆளுமைக்கும் தனது போலி நாத்திக எண்ணத்தால் தமிழகத்தைக் கூட தாண்ட முடியாத ஒருவருக்கும் பிறந்த நாள்

#போற்றும்_வழியறியா_தமிழகம்

#மீட்டுவா_என்_தமிழன்னையே!

மேற்கண்ட பதிவை வெளியிட்ட நம்பி நாராயணனை ஆசிரியராகக் கொண்ட 'சுதேசி செய்தி' பற்றி, எனது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், 'தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்' என்ற கட்டுரையை உருவாக்கி தமிழ், தமிழுணர்வு, பெரியார் கொள்கை ஆதரவாளர்கள், இந்துத்வா ஆதரவாளர்கள் உள்ளிட்ட எனது சமூக வட்டத்தில் சுற்றுக்கு விட்டேன்.இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் (abridged version)  'சுதேசி செய்தி' (நவம்பர் 2013) இதழில் வெளிவந்துள்ளது.

நன்கு படித்து, பாரம்பரியப் பண்பாடு மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களை, குறிப்பாக நன்கு படித்து பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும்  பிராமணர்களை, வாசகர்களாகக் கொண்டுள்ள இதழ் அதுவாகும். (‘'துக்ளக்' யோக்கியதை என்ன? 'விடுதலை' யோக்கியதை என்ன?’ (https://tamilsdirection.blogspot.com/2019/07/blog-post_9.html )

மேற்குறிப்பிட்ட பதிவில், 'பொதுநலப் போர்வையில் தன்  72 வயதில் 27 வயது பெண்ணை  திருமணம் செய்த' ஈ.வெ.ரா, என்று தான் உள்ளது.

அதை விட மோசமாக, 'தமது வளர்ப்பு மகளையே திருமணம் செய்து கொண்டார் ஈ.வெ.ரா' என்று ஒரு மூத்த பேராசிரியர் ராஜிவ் மல்கோத்ராவிடம் தெரிவித்து, அந்த நேர்க்காணல் உலகமெங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஈ.வெ.ரா பற்றிய இவை போன்ற தவறான தகவல்கள் எல்லாம், எவ்வாறு தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics -EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?’; https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html ) 

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய‌ இரண்டு எதிரெதிர் முகாம்களிலும், அறிவுபூர்வ அணுகுமுறையின்றி, உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதில் குவியமாக இருப்பதாக தெரிகிறது. அது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கெடுதலாகும். கருணாநிதியின் குடும்ப ஊழல் அரசியலுக்கு உதவிய, சமூக கீரி பாம்பு சண்டைக்கே புத்துயிர் கொடுக்கும். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html)

கருணாநிதி மறைந்து விட்டாலும், கருணாநிதி பாணியில் அந்த சண்டையை முன்னெடுப்பவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளையே, இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் முன்னெடுக்கப்படும் உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலானது ஊக்குவிக்கும்.

ஈ.வெ.ரா அவர்கள் தமது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி மேற்கொண்ட நிலைப்பாடுகள் எவ்வாறு தவறானவை? என்பதை எனது ஆய்வுகள் மூலமாக, நான் கண்டு பிடித்து விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html)

அது போலவே, நானறிந்த வரையில் உலக அளவில், ஈ.வெ.ரா அளவுக்கு, தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட தலைவர் வேறு யாரும் இல்லை. (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

தமது மனசாட்சிக்குட்பட்டு, பொய்களையும் திரிபுகளையும் ஆதரிக்காமல், உண்மைகளையேப் பற்றி வாழ்பவர்களுக்கு மட்டுமே, அந்த துணிச்சல் வரும்.

எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால். பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்;அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன். (https://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

நம்பி நாராயணன் தமது அறிவு அனுபவங்களின் அடிப்படைகளில்,  சுயலாப நோக்கின்றி பயணிப்பவர் என்பது அவரைப் பற்றிய எனது புரிதலாகும். எனவே நம்பி நாராயணன், துக்ளக் எழுத்தாளர் சுப்பு போன்றவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்.

நான் தீவிர 'பெரியார்' கொள்கையாளராகப் பயணித்த காலத்தில், தஞ்சை சரபோஜி கல்லூரி இயற்பியல் பேராசிரியர் அறைக்கு தினமும் 'விடுதலை' நாளிதழை எடுத்து வருவேன். சக பிராமண பேராசிரியர் நண்பர்கள் அதைப் படிப்பார்கள். அந்த காலக்கட்டத்தில், கல்லூரியில் நான் முன்னெடுத்த போராட்டங்களை அவர்கள் மிகுந்த துணிச்சலுடன் ஆதரித்தார்கள். அப்போது சக பேராசிரியராக இருந்த அ.மார்க்சும், தினமணியில் பல அறிவியல் கட்டுரைகளை எழுதிய பிராமண பேரா.கே.என்.ராமச்சந்திரனும் அதை அறிவார்கள். அவர்கள் இருவருமே அந்த காலக்கட்டத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

நான் எனது இசை ஆய்வுகள் மூலமாக தெளிவடையாமல், அதே போக்கில் பயணித்திருந்தால், மேற்குறிப்பிட்ட முகநூல் பதிவுக்கு எதிராக, கீழே குறிப்பில் உள்ள பதிவை முகநூலில் வெளியிட்டு, எனது பிராமண நண்பர்களின் பார்வைக்கும் முன்வைத்திருப்பேன்.

அவ்வாறு நான் 'மார்க்சிய லெனினிய பெரியாரியல்' புலமையாளராக பயணித்த காலத்தில், எனது பிராமண நண்பர்களால் பெரிதும் மதிக்கப்பட்டேன். கல்லூரியில் நான் முன்னெடுத்த போராட்டங்களுக்கு அவர்கள் எல்லாம் பக்க பலமாக இருந்தார்கள்.

அது போலவே, அறிவுபூர்வ விவாதத்தில், நான் எதிர்த்த மார்க்சிய லெனினிய குழுத் தலைவர்களும் என்னை மிகவும் மதித்தார்கள். சமூகம் மற்றும் தமிழ் தொடர்பாக, உடன்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுபட்டு செயல்பட்டோம். தஞ்சையில் ம.க.இ.க 'தமிழ் மக்கள் இசை விழா' நடத்த உதவிய ஆலோசகர்களில் நானும் ஒருவன்.

இன்று ஈ.வெ.ரா தொடர்பான எனது ஆய்வுகளுக்கு, 'பெரியார்' முகாம்களில் எதிர்ப்பு வருவதை வரவேற்பேன். உடன்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுபட்டு செயல்படவும் ஆர்வமாக உள்ளேன். அது போலவே, இந்துத்வா ஆதரவு முகாம்களில் எதிர்ப்பு வருவதை வரவேற்பேன். உடன்பட்ட பிரச்சினைகளில் ஒன்றுபட்டு செயல்படவும் ஆர்வமாக உள்ளேன்.

ஆனால் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய‌ இரண்டு எதிரெதிர் முகாம்களிலும், அறிவுபூர்வ அணுகுமுறையின்றி, உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதில் குவியமாக இருக்கும் வரையில், தமிழ்நாட்டு சமூக வெளியில் (Social Space) என்னைப் போன்று செயல்படுபவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்படும் போக்கே தொடரும்.

அது தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியைத் தாமதமாக்கும். அதுவும் எல்லை மீறி போகுமானால், தமிழ்நாடானது தமிழ் வேரழிந்து, ஊழல் குடும்ப அரசியலில் சிக்கி நிரந்தரமாக சீரழிவதும் நிச்சயமாகி விடும்.

குறிப்பு:

' #இன்று #செப்17

பொதுநலன் என்ற பெயரில் கட்டிய மனைவியை கை விட்ட ஒருவருக்கும்,

அண்ணாவின் சூழ்ச்சியால் தமது அண்ணன் மகனை தத்து எடுக்க முடியாமல், வேறு வழியின்றி,  ராஜாஜி தெளிவுபடுத்தியவாறு அன்றிருந்த இந்து சட்டப்படி தனது காப்பாளரை (care taker) திருமணம் செய்து, அன்று தி.மு.கவாலும், இன்று அதே தி.மு.க பாணியில் இந்துத்வா ஆதரவாளர்களாலும் இழிவுபடுத்தப்பட்ட, தன்னலம் பாராத தலைவர் ஒருவருக்கும், பிறந்தநாள்

#இன்று

பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டும் சங்கி அரசியலால், காங்கிரசை தோற்கடித்த ஒருவருக்கும்,

தமது சமூக நீதிப்போராட்டத்தை இந்தி பேசும் மாநிலங்களிலும் வெற்றிகரமாக விதைத்த தலைவர் ஒருவருக்கும், பிறந்தநாள்

#இன்று

சங்கி அரசியலை உலகம் முழுவதும் பரப்பி கெடுத்து வரும் ஒருவருக்கும்,

அதற்கு நிவாரணமாக, சமூக நீதி தமிழ்நாட்டில் இருந்து, உலகம் முழுவதும் பரப்ப காரணமான தலைவர் ஒருவருக்கும், பிறந்தநாள்

#இன்று

அந்த தலைவரைப் போற்றும் வழியறிந்த தமிழகம்

சனாதன சூழ்ச்சியில் இருந்து மீண்டு வா தமிழ் மொழியே '

மேற்குறிப்பிட்டதானது, நான் 'பெரியார்' ஆதரவாளராக இன்று இருந்தால், எப்படி எழுதுவேன்? என்று கற்பனை செய்து, நான் எழுதியது.

இந்துத்வா ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் மோடியை தேர்தலில் தோற்கடிக்க முயற்சித்தது, எனது கவனத்தினை 2005 முதல் ஈர்த்தது. அன்று முதல்  சாதி, மத பாரபட்சமற்ற, ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய திசையில், ஈ.வெ.ரா கமாராஜரை ஆதரித்த அணுகுமுறையில், மோடி பயணிப்பதை ஆதரித்தும், அதில் வெளிப்படும் சறுக்கல்களை சுட்டிக்காட்டியும் நான் பயணித்து வருகிறேன். (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html)

2 comments:

  1. ஈ வெ ரா பாஜா க ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் இது எனது நிலைப்பாடு

    ReplyDelete
    Replies
    1. எப்படி எந்தக் கோணத்தில் என விளக்கிச் சொன்னால் நன்று.
      தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.

      Delete