Friday, September 11, 2020


மோடியின் கருணையால் (?),


மாயக் கட்டுமரங்களாகத் தடுமாறிப் பயணிக்கும் ஸ்டாலினும், சசிகலாவும்


ஈ.வெ.ரா, மோடி போன்றவர்கள் தமிழ்நாடு தொடர்பாக, முக்கியமான கட்டங்களில் தேர்ந்தெடுக்கும் வழிகளைப் பொறுத்தே, தமிழ்நாட்டிற்கு நன்மையோ அல்லது தீமையோ விளையும்.

1939இல் ஈ.வெ.ரா நீதிக்கட்சி தலைவரானது முதல், அவர் முக்கியமான கட்டங்களில் எந்தெந்த வழிகளைத் தேர்ந்தெடுத்தார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none.html )

முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் அப்பொல்லோவில் சேர்ந்தது முதல், பிரதமர் மோடி தேர்ந்தெடுத்த வழியின் விளைவாக, தமிழ்நாட்டில் வாக்குக்குப் பணம் அதிகரித்தது. சிறைத்தண்டனைக்கும் ஊழல் சொத்துக்கள் பறிமுதலுக்கும் உள்ளாக வேண்டிய அரசியல்வாதிகளுக்கு துளிர் விட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடித்து கொள்ளை அடிக்கும் சூதாட்டமும் வேகம் பெற்றது. தமிழ்நாடானது மீண்டும் குடும்ப ஆட்சியில் சிக்கும் ஆபத்துக்கும் வழி ஏற்பட்டுள்ளது.

'பார்ப்பன ஆதிக்கம்', 'இந்தி மற்றும் வடவர் ஆதிக்கம்' என்று அச்சக்கடலில் கணிசமான தமிழர்களை மூழ்க வைத்து, அவர்களைக் காப்பாற்றும் கட்டுமரமாக தம்மை நம்பச் செய்ததில் பெற்ற வெற்றியே கருணாநிதியின் குடும்ப அரசியலின் அடித்தளமானது.


கருணாநிதி இல்லாத நிலையில், கருணாநிதி கற்பித்த கட்டு மரமாகப் பயணிக்கும் நெருக்கடியில் ஸ்டாலின் சிக்கி விட்டார்.

கருணாநிதியிடம் இருந்த திறமைகள் பற்றி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் கருத்து, இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

'இணையற்ற அரசியல் ஞானம், மக்களை மயக்கும் மகுடி போன்ற வாக்கு சாதுரியம், எதிரிகளையும் வளைக்கும் ராஜதந்திரம், தம்மவர்களையும், மற்றவர்களையும் கவரும் நட்பு, அனைத்தையும் தாண்டிய இணையற்ற உழைப்பு - இப்படி கருணாநிதியிடம் என்னைக் கவர்ந்த குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.' (துக்ளக் 02-09-2020)

மேற்குறிப்பிட்டவை ஸ்டாலினிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது அவரின் மனசாட்சிக்கு, மற்றவர்களை விட, நன்கு தெரியும்.

கருணாநிதி மறைந்துள்ள நிலையில், கருணாநிதியின் கட்டுமரம் அரசியலை முன்னெடுப்பதில் ஸ்டாலின் வெற்றி பெறுவாரா?

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிப்பதும்,'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிப்பதும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுத்து வரும் அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் ஆகும்.

அது தெரியாமல், மத்தியில் ஆளும் எந்த தேசியக்கட்சியும் தமிழ்நாட்டில் வேரூன்ற எவ்வளவு முயற்சித்தாலும்,

கிடைக்கும் கட்டுமரத்தைப் பிடித்து தப்பிக்கும் கடலில் மூழ்கிய நபரைப் போலவே,

கருணாநிதி அல்லது அவரைப் போன்ற வேறு கட்டுமரத்தைத் தான் ஆதரிப்பார்கள். 

கருணாநிதி மறைந்துள்ள நிலையில், கருணாநிதியின் கட்டுமரம் அரசியலை முன்னெடுப்பதில் ஸ்டாலின் சந்தித்து வரும் சிக்கலை விட, இன்னும் மோசமான சிக்கலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில்,  தாமாகவே சசிகலா மாட்டிக் கொண்டார்.

எம்.ஜி.ஆருக்கு இருந்த புலமையாளர்களின் பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்தார். அதன் காரணமாக, கருணாநிதிக்குப் பிடிக்காத புலமையாளர்களும், படித்த பிராமணரல்லாதோருக்கும் நடராஜன் இன்னொரு 'கட்டுமரமாக' வெளிப்பட்டார்.

அதாவது ஜெயலலிதா மற்றும் நடராஜன் ஆகிய இருவரின் இடங்களையும் சசிகலா நிரப்பியாக வேண்டும்.

பெரும்பாலும் அரைகுறைப் படிப்பறிவுள்ள ஜெயலலிதா விசுவாசிகளிடம் நம்பிக்கையைப் பெற, இன்னொரு ஜெயலலிதாவாக தம்மை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் சசிகலா சிக்கி விட்டார்.

நடராஜனின் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த்தேசிய இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளுடன் இந்துத்வா ஆதரவு கட்சிகளும் சங்கமாகினர். அந்த சங்கமத்தில் ஒதுக்கப்பட்ட திராவிடர் கழகமானது, 'பெரியார்' தந்த புத்தியில் சசிகலா நடராஜன் குடும்ப அரசியலில் சங்கமமானது. அவர்களின் நம்பிக்கையைப் பெற, இன்னொரு நடராஜனாக‌ தம்மை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் சசிகலா சிக்கி விட்டார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், சசிகலா கட்சியில் ஜெயலலிதாவின் இடத்தைப் பிடித்தவுடன், ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில் வெளிப்பட்ட கொந்தளிப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைத் தவிர்த்து வெற்றி பெற்ற தினகரன் சுதாரிக்காமல், மிழ்நாடெங்கும் தமது கட்சியின் பேனர்களில் சசிகலாவின் படத்தினை முன்னிலைப் படுத்தினார். அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் டெபாசீட் இழந்த கட்சியாக அவரின் கட்சி வீழ்ந்தது.

ஜெயலலிதா முதல் முறையாக சிறை சென்ற போதே, கிராமங்களில் ஜெயலலிதா விசுவாசிகள், 'சசிகலாவால் தான் அம்மா சிறைக்குப் போனார்' என்று பேசிக்கொண்டதை, கிராமப்புறத்தில் இருந்து கல்லூரியில் படித்த மாணவிகள் மூலமாக அறிந்தேன்.

கங்கை அமரன் தொடங்கி கொடநாடு உள்ளிட்டு சத்யம் தியேட்டர்ஸ் வரை அச்சுறுத்தி அபகரித்த சொத்துக்கள் எல்லாம் ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியலில் இல்லை என்பதும், சசிகலா குடும்பச் சொத்தாக இருப்பதை வருமானவரித்துறையிடம் ஒப்புக்கொண்ட தகவல்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட பின்னணியில்,

பெரும்பாலும் அரைகுறைப் படிப்பறிவுள்ள ஜெயலலிதா விசுவாசிகளிடம் நம்பிக்கையைப் பெறுவதிலும்,

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த்தேசிய இந்துத்வா எதிர்ப்பு மற்றும் இந்துத்வா ஆதரவு கட்சிளின், அந்த சங்கமத்தில் ஒதுக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் நம்பிக்கையைப் பெறுவதிலும்,

கருணாநிதியின் கட்டுமரம் அரசியலை முன்னெடுப்பதில் ஸ்டாலின் சந்தித்து வரும் சிக்கலை விட, இன்னும் மோசமான சிக்கலைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில்,  தாமாகவே சசிகலா மாட்டிக் கொண்டார்.

திராவிட பாணியில் தமிழக பா.ஜ.க நோஞ்சான் கட்சியாகப் பயணித்ததால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின், சரியான தேசக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் எவ்வாறு கெட்டது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிப்பதும்,'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிப்பதும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுத்து வரும் அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் ஆகும். 

அது தெரியாமல், மத்தியில் ஆளும் எந்த தேசியக்கட்சியும் தமிழ்நாட்டில் வேரூன்ற எவ்வளவு முயற்சித்தாலும்,

கருணாநிதியின் கட்டு மரம் அரசியலில் சிக்கி. வெறுப்பு அரசியலில் தீர்வின்றி எதிர்மறை சிந்தனைகளில் மூழ்கி, நிரந்தரமாக கட்டுமரத்தின் துணையுடன் பயணிக்கும் 'நோஞ்சான்' தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அத்தகைய நோஞ்சான் தமிழர்கள் ஆதரிக்கும் நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதித்தது. அந்த‌ நிலையில், யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுத்து, கருணாநிதி மற்றும் நடராஜனின் 'கட்டுமரம்' அரசியலை ஆதரித்து, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற மத்தியில் ஆண்ட கட்சிகள் தமிழ்நாட்டை எளிதாக கையாண்டு வந்தனர். ஆனால் கருணாநிதியும், ஜெயலலிதாவும், நடராஜனும் மறைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடையாது.

இன்னொரு ஓடும் காரின் துணையுடன், (கொள்கை) என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, திராவிட குடும்ப அரசியல் தொடர்கிறது; மோடி அரசின் (தமிழ்நாட்டு ஊழல் ஒழிப்பு பலகீனம் காரணமான) ஒத்துழைப்புடன், தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் தாமதமாகிறது.

கருணாநிதி, நடராஜன், மு.க.அழகிரி ஆகியோரிடம் சரணடைந்து, ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் இழிவுபடுத்தி கண்டித்த 'நோஞ்சான்' இந்துத்வா தலைவர்கள் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள். அதற்காக கருணாநிதியையும், நடராஜனையும், மு.க.அழகிரியையும் கண்டிக்கும் துணிச்சலின்றி, அவர்கள் துதி பாடி, மோடியை இழிவுபடுத்தி கண்டித்த 'நோஞ்சான்' இந்துத்வா எதிர்ப்புப் பிரபலங்கள் தமிழ்நாட்டில் வலம் வந்தார்கள்.

அவர்கள் தமிழ்நாட்டு பொது அரங்கின் சமூக வெளியில் (Social Space) இருந்து 'சமூகக் குப்பைகளாக' ஒதுங்குவது, மேற்குறிப்பிட்ட மோடியின் 'கருணையால் தாமதமாகிறது.‌

நோஞ்சான் நோயின் முக்கிய அம்சமே 'ஊழலுடன் சமரசம்' என்பதை, அந்நோயில் இருந்து விடுபட்ட‌ சிங்கப்பூர் உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகள் தொடர்வதும், அந்த கட்சிகள் மூலமாக சிரமமின்றி எளிதில் தமிழ்நாட்டை கையாளலாம் என்ற திசையில் மத்தியில் ஆளும் கட்சிகள் பயணிப்பதும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல; இந்தியாவிற்கும் நல்லதல்ல. 

No comments:

Post a Comment