Thursday, September 3, 2020


1967 முதல் வெளிப்பட்ட 'சமூக ஊமைக் காயங்கள்'(2)


கட்டுமரத்தைப் பிடித்து தப்பிக்கும் கடலில் மூழ்கிய நபரைப் போன்ற தமிழர்கள்?



தமிழர்களே தமிழர்களே... என்னை நீங்கள் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்’ -.கருணாநிதி. இதை வைத்து கருணாநிதியை கட்டுமரம் என்று கிண்டல் செய்வது கூட உண்டு.

'பார்ப்பன ஆதிக்கம்', 'இந்தி மற்றும் வடவர் ஆதிக்கம்' என்று அச்சக்கடலில் கணிசமான தமிழர்களை மூழ்க வைத்து, அவர்களைக் காப்பாற்றும் கட்டுமரமாக தம்மை நம்பச் செய்ததில் பெற்ற வெற்றியே கருணாநிதியின் குடும்ப அரசியலின் அடித்தளமானது.

அந்த குடும்ப அரசியலில் இருந்து எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டைக் காப்பாற்றினார், கருணாநிதியால் அவமானப்படுத்தப்பட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதன், டார்பிடோ ஜனார்த்தனம் போன்ற இன்னும் பல புலமையாளர்களின் ஆதரவுடன்.

மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்த புலமையாளர்களின் பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்தார். அதன் காரணமாக, கருணாநிதிக்குப் பிடிக்காத புலமையாளர்களும், படித்த பிராமணரல்லாதோருக்கும் நடராஜன் இன்னொரு 'கட்டுமரமாக' வெளிப்பட்டார்.

தமிழ்நாட்டில் திராவிட அரசியலில் வளர்க்கப்பட்ட அடையாளச் சிக்கலானது, எவ்வாறு கருணாநிதியின் 'கட்டுமரம் அரசியலின்' அடித்தளமானது? என்பதை இங்கு பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிப்பதும்,'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிப்பதும், தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுத்து வரும் அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் ஆகும்.

அது தெரியாமல், மத்தியில் ஆளும் எந்த தேசியக்கட்சியும் தமிழ்நாட்டில் வேரூன்ற எவ்வளவு முயற்சித்தாலும்,

கிடைக்கும் கட்டுமரத்தைப் பிடித்து தப்பிக்கும் கடலில் மூழ்கிய நபரைப் போலவே,

கருணாநிதி அல்லது அவரைப் போன்ற வேறு கட்டுமரத்தைத் தான் ஆதரிப்பார்கள்.

படித்த பிராமணரல்லாத தமிழர்கள் பெரும்பாலும் தேசியக்கட்சிகளை நம்பாமல், ஊழல் கட்சி என்று தெரிந்தாலும் தி.மு.கவை ஆதரித்து வருவதற்கு, அதுவே காரணமாகும்.

கருணாநிதியின் 'கட்டுமரம் அரசியல்' கீழ்வரும் சமூக செயல்நுட்பத்தில் செயல்பட்டது.

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடித்து வந்த போக்கினை, எவ்வாறு தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக, 1969இல் முதல்வரான கருணாநிதி வளர்த்தார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஈ.வெ.ரா மற்றும் ராஜாஜியின் கீழ்வரும் பங்களிப்பு கார‌ணமாகவே, மேற்குறிப்பிட்ட 'கட்டு மரம் அரசியலின்' அடித்தளமாகிய அடையாளச்சிக்கல் தமிழ்நாட்டில் வளர்ந்தது.

சமூகவியலில் உட்குழுவில் (ingroup) இருப்பவர்கள் எல்லாம், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றும் குழு மனநிலையில்பயணிப்பவர்கள் ஆவார்கள்.

வெளிக்குழுவில் உள்ளவர்கள் உட்குழுவில் இருப்பவர்களை அவமதிப்பதை எதிர்ப்பார்கள்.

தமிழ்நாட்டில் 'வெளிக்குழுவில்' பிராமணர்கள் சிக்கிய போக்கு வலிமையானதற்கு ஈ.வெ.ரா எவ்வாறு பங்களித்துள்ளார்? 'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் வலிமையானதற்கு ராஜாஜி எவ்வாறு பங்களித்துள்ளார்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

தமிழரின் அடையாளச் சிக்கலில், ஈ.வெ.ராவின் பங்களிப்பானது, 1944இல் அவர் திராவிடர் கழகம் தொடங்கியதால் ஏற்பட்ட விளைவாகும். பிராமணர்களும் தமது சொந்த பந்தங்களின் எதிர்ப்புகளை மீறி வைக்கம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு போன்ற போராட்டங்களில் பங்கேற்ற போக்கானது அதன்பின் வற்றி, 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோயானது வளரத் தொடங்கியது. அதன் விளைவாக, 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா' நோயும் வளர்ந்தது.

ராஜாஜியின் பங்களிப்புடன் இரண்டு வகை நோய்களையும் மூலதனமாக்கி, கருணாநிதி தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக வளர்த்து விட்டார்.

'கட்டுமரம் அரசியலின்' பிதாமகன் கருணாநிதியும், கருணாநிதியின் பாசறையில் பயின்று, கருணாநிதிக்குப் பிடிக்காத புலமையாளர்களும், படித்த பிராமணரல்லாதோருக்கு இன்னொரு 'கட்டுமரமாக' வளர்ந்த‌ நடராஜனும் மறைந்த பின்னர், 'கட்டுமரம் அரசியலின்' மரணம் தொடர வேண்டியது இயற்கையின் போக்கு ஆகும்.

ஏனெனில், 'கட்டுமரம் அரசியலின்' அடித்தளமாகிய அடையாளச்சிக்கலை உருவாக்கிய, ஈ.வெ.ராவின் ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவையாகும்? என்று கடந்த சுமார் 15 வருடங்களாக எனது ஆய்வு முடிவுகள் மூலமாக‌ வெளிப்படுத்தி வருகிறேன். இதுவரை 'பெரியார்' கட்சிகளிடமிருந்து அவற்றை ஏற்றோ அல்லது மறுத்தோ எதுவும் வரவில்லை. 
(‘ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே, ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே

1949இல் தி.மு.க தொடங்கிய பின், அண்ணா 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல செயல்படும்' என்றார். அந்த செயல்பாடு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் எவ்வாறு கேடானது?

'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற பேரில் ஈ.வெ.ராவின் 'காட்டுமிராண்டித் தமிழைக் கவர்ச்சித்தமிழாக' மாற்றிய திசையில், 'பராசக்தி' ரசனைப் பயணித்ததா? 'காட்டுமிராண்டித் தமிழையும்' ஏற்றுக்கொண்டு, தமிழ்ப்புலவர்களின் பெயர்களை தமது குடும்பப் பிள்ளைகளுக்கு இட்டுப் பயணிக்கும் இரட்டை வேடப் போக்கிற்கும் அது வழி வகுத்ததா? அத்தகைய 'யோக்கியத் தமிழர்களின்' ஆதரவில், ஊழல் வளர்ந்த வேகத்தில், ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தமிழின் மரணப்பயணமும், 'அதிவேகப் பணக்காரர்களும்' வளர்ந்தனவா? அதன் தொடர்விளைவாகவே தமிழர்களில் பெரும்பாலோரின் 'நேர்மை வழிகாட்டி' (Ethical Compass) தடம் புரண்டதா? அதுவே தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா

எனவே என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, 'கட்டு மரம்' அரசியல் நீடிக்கிறது. 
(https://tamilsdirection.blogspot.com/2020/08/engine.html)

வெளிப்பட்ட தீர்வினை சுயலாப நோக்கில் கெடுத்து, போராட்டத்தைத் தொடர்ந்த தொழிற்சங்கத் தலைவர்களை நான் அறிவேன். அது போல, மத்தியில் செல்வாக்குடன் ஆட்சியில் இருந்தும் அடையாளச்சிக்கல் தொடர்புள்ள பிரச்சினைகளைத் தீர்க்காமல், தமது சுயலாபத்தில் கருணாநிதியின் கட்டு மரம் அரசியல் பயணித்தது. வெறுப்பு அரசியலில் தீர்வின்றி எதிர்மறை சிந்தனைகளை ஊக்குவித்து, நிரந்தரமாக கட்டுமரத்தின் துணையுடன் பயணிக்கும் 'நோஞ்சான்' தமிழர்கள் அதன் விளைவாக வளர்ந்தார்கள்.

இன்றைய மாணவர்களும் படித்த இளைஞர்களும் எதிர்மறை சிந்தனைகளை வெறுத்து, சமூக நல்லிணக்கத்துடன் தொழில் வியாபார வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் நேர்மறை சிந்தனைகளையே ஆதரிக்கிறார்கள். 'கந்தசஷ்டி கவசம்' சர்ச்சையும் தமிழ்நாட்டில் இனி எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமில்லை, என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. 

'கட்டு மரம்' அரசியலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் வாய்ப்பினைக் கெடுப்பதற்கான‌ கீழ்வரும் சிக்னலானது, 2014-இல் மோடி பிரதமரானவுடன் தமிழ்நாட்டில் வெளிப்பட்டது.

2014இல் மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில வாரங்களில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலையில் கீழ்வரும் காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பா.ஜ.க கொடியுடன் திறந்த ஜீப்பில் நிறைந்திருந்த இளைஞர்கள் எழுப்பிய ஆராவாரக் கூச்சலானது, எனக்கு ஜீப்பில் பறந்தது தி.மு.க கொடியா? அல்லது பா.ஜ.க கொடியா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. தி.மு.க பாணியில் கூச்சல் போட் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்து இருந்தவர்கள், வாய்ப்பு கிடைத்ததும், சாலையில் செல்பவர்கள் எல்லாம் முகம் சுழிக்கும் அளவுக்கு ஆட்டம் போட்டது போல இருந்தது.

இதில் வியப்பு என்னவென்றால், மக்கள் முகம் சுழிக்கத் தொடங்கியதை உணர்ந்து, அவ்வாறு ஆட்டம் போடும் போக்கினை தி.மு.க இளைஞர்கள் நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி, திராவிட பாணியில் தமிழக பா.ஜ.கவில் பலர் பயணிக்கிறார்களா? என்ற கேள்விக்கு இடம் வந்து விட்டது. 

அதைத் தொடர்ந்து, இந்துத்வா ஆதரவு முகாமிலும் 'கறுப்பர் கூட்டம்' வளர்ந்தது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html)

திராவிட பாணியில் தமிழக பா.ஜ.க நோஞ்சான் கட்சியாகப் பயணித்ததால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின், சரியான தேசக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் எவ்வாறு கெட்டது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html)

இன்னொரு ஓடும் காரின் துணையுடன், (கொள்கை) என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே, திராவிட குடும்ப அரசியல் தொடர்கிறது; மோடி அரசின் (தமிழ்நாட்டு ஊழல் ஒழிப்பு பலகீனம் காரணமான) ஒத்துழைப்புடன், தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் தாமதமாகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலானது, கருணாநிதியின் 'சமூக கீரி - பாம்பு சண்டை' மூலமாகவும், எதிரெதிர் முகாம்களில் வளர்ந்துள்ள 'கறுப்பர் கூட்டங்கள்' மூலமாகவும் 'சமூக கொரொனா நோயாக' வெளிப்பட்டு வருகிறது.

எனவே அந்த அடையாளச் சிக்கலுக்கு ஈ.வெ.ரா பங்களித்ததையும், ராஜாஜி பங்களித்ததையும் பாரபட்சமற்ற அறிவுபூர்வ விமர்சனத்திற்கு உட்படுத்தித்  தீர்வைக் கண்டுபிடிக்க முடியும்.

தமிழ்நாடு சமூக வெளியை அத்தகைய விமர்சனங்கள் மூலமாக, ஆரோக்கியமான சமூக சுவாசத்திற்கு உதவும் வகையில்,

'சமூக நச்சு நீக்கம்' செய்ய வேண்டும். அவ்வாறு செயல்பட்டு, எதிரெதிர் முகாம்களில் உள்ள கறுப்பர் கூட்டங்களிடமிருந்து சமூக வெளியை மீட்க வேண்டும். 
(சமூக மூச்சுத்திணறலும் (Social Suffocation), நல்ல சமூக சுவாசத்திற்கான  (social breathing) சமூகவெளியும்  (Social Space)’; 

அவ்வாறு தமிழ்நாட்டின் சமூக வெளியை மீட்கும் வரையிலும்,

கருணாநிதியும், கருணாநிதியின் பாசறையில் பயின்று இன்னொரு 'கட்டுமரமாக' வளர்ந்த‌ நடராஜனும் மறைந்த பின்னரும், 'கட்டு மரம்' அரசியலைத் தொடரும் முயற்சிகள் கருணாநிதி குடும்பத்திலும், சசிகலா குடும்பத்திலும் தொடரும், இரண்டு குடும்பங்களின் மற்றும் அவர்களின் பினாமிகளின் மீதுள்ள வழக்குகள் உரிய காலத்தில் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையிலும்.

ஆனால் அத்தகைய கட்டுமரமாக செயல்படுவாரா? என்று ஐயப்படும் வகையில் ஸ்டாலினின் திறமைக்குறைவுகள் அம்பலமாகி வருகின்றன. முள்ளி வாய்க்கால் முற்றத்தில் சங்கமமான கட்சிகளின் துணையுடன், சசிகலா குடும்பமும் தங்களிடம் உள்ள பண பலம் மூலமாக, ஸ்டாலினைப் போலவே முயற்சித்து வருகிறார்கள். வேறு எந்த கட்டுமரமும் இன்னும் பொதுஅரங்கில் வெளிப்படவில்லை.

அடையாளச்சிக்கலின் அடித்தளங்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் ஊழல் மூலமாக சீரழிக்கவே எவ்வாறு உதவியது? என்று புரிய வைத்து, கட்டுமரம் அரசியலில் இருந்து, தமிழ்நாட்டை தமிழக பா.ஜ.க‌ மீட்கும் வாய்ப்பானது,

இந்துத்வா ஆதரவு முகாமில் உள்ள 'கறுப்பர் கூட்டங்களால்' கெடுக்கப்படுகிறது. அது இந்துத்வா எதிர்ப்பு முகாமில் உள்ள 'கறுப்பர் கூட்டங்களுக்கு' சாதாகமாகிறது.

மேற்குறிப்பிட்ட அடையாளச்சிக்கலுடன் தொடர்புடைய வகையில் தான், 'பார்ப்பன ஆதிக்கம்', ' இந்தி மற்றும் வடவர் ஆதிக்கம்' என்று அச்சக்கடலில் கணிசமான தமிழர்களை மூழ்க வைக்க முடிகிறது. அந்த அச்சமானது படித்த பிராமணரல்லாதோரிடம் வலிமையாக உள்ளது. எனவே கருணாநிதி நடராஜன் மறைந்த பின்னும், புதிய புதிய 'கட்டு மரம்' அரசியலுக்கு முயற்சிகள் தொடரும்.

1967 முதல் வெளிப்பட்ட சமூக ஊமைக்காயங்களை முளையிலேயே கண்டறிந்து, உரிய 'சமூக மருத்துவ சிகிச்சை' மூலமாக குணமாக்காததன் விளைவாக‌, அது இன்னும் மோசமான சமூக ஊமைக்காயங்களைத் தூண்டி, தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கிய போக்கும் தொடரும். 

தமிழத்துவாவைச் சரியாக உள்வாங்கிய இந்துத்வாவை வளர்க்கும் வரையில், அந்த போக்கு நீடிக்கும்.

அது தொடர்பான, எனது ஆய்வு முடிவுகளை 2005 முதல் வெளியிட்டு வருகிறேன்.

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும்.

'வந்தது வளர்த்து, வருவது ஒற்றி' என்ற சிலப்பதிகார (அரங்கேற்று காதை) வரிகள் உணர்த்தியபடியும்;

தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, தாய்மொழி நாடாகிய தமிழ்நாட்டை சீரழித்த அரசியல் தாதாக்களின் கருவியாக பயன்பட்டு வந்துள்ள பின்னணியில்;

அஸ்ஸாம் வழியில் தமிழ்நாடு பயணிப்பதே புத்திசாலித்தனமாகும். தமிழையும், தமிழ் உணர்வினையும் பிரிவினைக் கட்சிகளின் 'ஏகபோகமாக' கருதிக் கொண்டு, திராவிடர்/திராவிட/தமிழர் கட்சிகளில் சுயலாப நோக்கமின்றி பயணித்த தியாகிகளையும், பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணித்தவர்களையும் பிரித்து அணுகும் அறிவுபூர்வ பார்வையின்றி, ஒன்றாக கருதி கண்டிக்கும், இழிவுபடுத்தும் போக்கில், தமிழக பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களே சிக்கி, பயணிப்பது மாறாத வரையில், அதற்கும் வாய்ப்பிருக்காது, என்பதும் எனது ஆய்வு முடிவாகும். 

2005 முதல் வெளிவந்துள்ள எனது ஆய்வு முடிவுகள் மூலமாக, ஏதாவது ஒரு 'பெரியார்' கட்சி விழித்திருந்தால், அஸ்ஸாமுக்கு முன்பே, அந்த கட்சியைச் சார்ந்தவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகியிருப்பார். ஆதாய அரசியலில் இருந்தும், குடும்ப அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டை மீட்கும் முயற்சியானது, அவர்கள் மூலமாக நடந்திருக்கும்.

அல்லது தமிழக பா.ஜ.க விழித்திருந்தால், ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின், தமிழ்நாடானது  ஏற்கனவே நான் விளக்கியிருந்த வழியில், தேசிய நீரோட்டத்தில் சேர்ந்திருக்கும்.

இந்துத்வா எதிர்ப்பு முகாமில் உள்ள 'பெரியார்' கட்சிகளுக்கு புத்துயிர் வழங்கி வரும், இந்துத்வா ஆதரவு முகாமில் உள்ள கறுப்பர் கூட்டங்கள் ஒழியாமல் அது சாத்தியமாகாது.

மேற்குறிப்பிட்ட அடையாளச்சிக்கலுடன் தொடர்புடைய 'பார்ப்பன ஆதிக்கம்', 'இந்தி மற்றும் வடவர் ஆதிக்கம்' என்று அச்சக்கடலில் கணிசமான தமிழர்களை மீட்பதற்கான வழிமுறைகளை எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளேன்.

ஈ.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' பெரியாரியலை உட்படுத்தி 'பெரியார்' கட்சிகள் சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, விழித்துப் பயணிக்க அவை உதவும்.

தமிழக பா.ஜ.கவானது பாரபட்சமற்ற முறையில் எதிரெதிர் முகாம்களில் உள்ள கறுப்பர் கூட்டங்களை ஒழித்து, தமிழத்துவாவைச் சரியாக உள்வாங்கிய இந்துத்வாவை வளர்த்து, தமிழ்நாட்டை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கும் அவை உதவும்.

இரண்டில் எது நடந்தாலும் நன்றே. இரண்டுமே நடந்தால், தமிழ்நாடானது வெறுப்பு அரசியலில் இருந்து விரைவில் விடுதலையாகி, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியானது துரிதமாகும்.

மேற்குறிப்பிட்டவாறு, 'பெரியார்' கட்சிகளும், தமிழக பா.ஜ.கவும் விழிக்கும் வரையில், நாம் காத்திருக்கத் தேவையில்லை.

சுயலாப நோக்கற்று தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை விரும்பும் தமிழர்கள் எவ்வாறு தனிமனித இராணுவமாக மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்க முடியும்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

மேற்குறிப்பிட்ட தனிமனித இராணுவங்கள் எல்லாம், கட்சி கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மேற்குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவரும் 'சமூக மருத்துவர்' ஆகி, 1967 முதல் இன்று வரை அச்சுறுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ள சமூக ஊமைக்காயங்களைக் குணமாக்கி, தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க முடியும். 

அந்த போக்கில், வேறு வழியின்றி, மேற்குறிப்பிட்ட இரண்டுமே சாத்தியமாகும் வகையில், 'பெரியார்' கட்சிகளும், தமிழக பா.ஜ.கவும் விழித்துக் கொள்வதும் தவிர்க்க இயலாததாகி விடும்.

No comments:

Post a Comment