Tuesday, August 11, 2020


அழுகிய கழகங்களால் அழுகும் தமிழக பா.ஜ.க‌ (1)



அண்மையில் ஒரு பா.ஜ.க ஆதரவாளரின் கீழ்வரும் டுவிட்டர் பதிவானது எனது கவனத்தை ஈர்த்தது

"ஸ்டாலினை தவிர கனிமொழி, உதயநிதி என யார் பாஜகவில் இணைய வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அரசியல்"

2014 தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமரானது, தமிழக பா.ஜ.கவின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டதா? என்ற அபாய எச்சரிக்கையை 2014-இல் வெளியிட்டேன்.

'தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் திராவிடச் சிக்கல்கள் 
(https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html)

மேற்குறிப்பிட்ட பதிவில், தமிழக பா.ஜ.கவில்,  திராவிடக் கட்சித் தலைவர்கள் பாணியில் உணர்ச்சி பூர்வ பேச்சுக்கள் வெளிப்படுவதையும், ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள் அறிமுகப்படுத்திய பொது அசிங்கங்கள் தமிழக பா.ஜ.கவில் வெளிப்பட்டுள்ளதையும்  குறிப்பிட்டிருந்தேன்.

கூடுதலாக, கீழ்வருவதையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

'தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். இன்னொரு முன்னாள் அமைச்சர் மீது நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால், அவர் விரும்பி முயற்சித்தும், சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆக திராவிடக் கட்சிகளில் இருந்தவர்கள்,  பா.ஜ.கவில் சேரும் படலம் தொடங்கி விட்டது.

அவர்களெல்லாம் ஊழலற்ற ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும் என்று சேர்கிறார்களா? அல்லது தமது ஊழல் வாய்ப்புகளுக்கு 'அக்கரைப் பச்சை' என்று தாவுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அநேகமாக‌ வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.க வானது, தமிழ்நாட்டில் 'திராவிட பா.ஜ.க'வாக தேர்தலைச் சந்தித்தாலும் வியப்பில்லை.'

அண்மையில் தமிழக பா.ஜ.கவின் நிர்வாகிகள் பட்டியல் வெளிவந்தது. அதில் திராவிடக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தாங்கள் எதிர்பார்த்த 'பலன்' கிடைக்காத அதிருப்தியில், தமிழக பா.ஜ.கவிலிருந்து விலகி யார்? யார்? மீண்டும் திராவிடக்கட்சிகளில் சேர்ந்துள்ளார்கள்? அவ்வாறு சேராமல், யார்? யார்? தமது அதிருப்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தி அச்சுறுத்தி வருகிறார்கள் என்ற தகவல்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.



2014இல் மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில வாரங்களில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சாலையில் கீழ்வரும் காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பா.ஜ.க கொடியுடன் திறந்த ஜீப்பில் நிறைந்திருந்த இளைஞர்கள் எழுப்பிய ஆராவாரக் கூச்சலானது, எனக்கு ஜீப்பில் பறந்தது தி.மு.க கொடியா? அல்லது பா.ஜ.க கொடியா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. தி.மு.க பாணியில் கூச்சல் போட் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாந்து இருந்தவர்கள், வாய்ப்பு கிடைத்ததும், சாலையில் செல்பவர்கள் எல்லாம் முகம் சுழிக்கும் அளவுக்கு ஆட்டம் போட்டது போல இருந்தது.

இதில் வியப்பு என்னவென்றால், மக்கள் முகம் சுழிக்கத் தொடங்கியதை உணர்ந்து, அவ்வாறு ஆட்டம் போடும் போக்கினை தி.மு.க இளைஞர்கள் நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி, திராவிட பாணியில் தமிழக பா.ஜ.கவில் பலர் பயணிக்கிறார்களா? என்ற கேள்விக்கு இடம் வந்து விட்டது.

கருணாநிதியின் 'அறிவியல் ஊழலில்' தப்பித்திருந்த ஏரிகள், ஆறுகள், மலைகள், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் 1991க்குப் பின் தான், ஊழல் பேராசைக்கு இலக்காகியது, என்பது மாரிதாசுக்குத் தெரியாதா? கங்கை அமரன், அமிர்தாஞ்சன், பாலு ஜிவல்லரி, ஏ.ஆர்.ரகுமான், தொடங்கி சத்யம் தியேட்டர்ஸ்  வரை எண்ணற்றோரின் தனியார் சொத்துக்களை கொலை செய்தும், அச்சுறுத்தியும் அபகரிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் 1991 முதல் தான் அரங்கேறியது என்பதும் மாரிதாசுக்குத் தெரியாதா? 

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, சசிகலா தலைமையிலான அ.இ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சியானது 'தாய்க்கழகம்தி.கவுக்கு நேசமான ஆட்சியாக இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலாவை ஆதரித்து தி.க தலைவர் கி.வீரமணி கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியது மாரிதாஸுக்கு தெரியாதா? (‘பா.ஜ.கவின் அனுகூல சத்ருவாக‌ தி.மு.கவிற்கு உதவும் மாரிதாஸ்?; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_22.html )

2016இல் கீழ்வரும் பதிவினை வெளியிட்டேன்.

 'அழுகியது' கழகங்கள் மட்டுமா?

'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்  இனம்தானே;                          எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்'

அழுகிய கழகங்களால் அழுகும் திசையில் தமிழக பா.ஜ.க பயணிக்கத் தொடங்கி விட்டது.

அழுகிய கழகங்களில் இருந்து பா.ஜ.கவிற்கும், பா.ஜ.கவிலிருந்து அழுகிய கழகங்களுக்கும் இடையே 'போக்குவரத்து' தொடங்கி விட்டதால், பா.ஜ.கவும் அழுகல் இனக் கட்சிகளில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

மேற்குறிப்பிட்ட பதிவில், கீழ்வருவதை வெளிப்படுத்தியிருந்தேன்.

''அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி சாத்தியமா?

'அழுகல் மனிதர்கள்' எல்லாம், 'பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம், இந்துத்வா, தலித், முஸ்லீம்' உள்ளிட்ட இன்னும் பல முகமூடிகளுடன் ஏமாற்றி வாழ, நாம் துணையாக இருக்கிறோமா?  

நாம் 'அழுகல் இனத்தில்' இருக்கிறோமா? நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் அழுகல் மனிதர்கள்இருந்து, அந்த 'அழுகல் மனிதர்களோடு', நாம் நேசமாக இருப்பது தொடர்ந்தால், நாமும் அந்த 'அழுகல் மனிதர்' இனத்தில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா? குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளும், சமூக ஒழுக்க நெறிகளும், பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான சடங்குகளும், 'அழுகல் இனத்தின்  ஆதிக்கத்திற்கு' அடிமையாக, நாம் துணை போகிறோமா?’

ஊழல் ஒழிப்பானது, ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்களெல்லாம், ஊழல் ஒழிப்பு கட்சிகளின் மாநில பொறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள். கட்சி வேறுபாடின்றி, ஊழல் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டால், 'மதுவிலக்கு' உள்ளிட்டு, அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும், அந்த பணத்தில் செயல்படுத்த முடியும் என்பதை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் விந்தையும், தமிழ்நாட்டில் உள்ளது. 'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?

'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’

என்று குழம்ப வேண்டியதில்லை. சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ள சமூக செயல்நெறி மதகுகள் புத்துயிர் பெறும்.

நமது சமூக வட்டத்தில் இருக்கும் 'அழுகல் இனத்தை', அடையாளம் கண்டு அகற்றுவதானது, ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' எனும் சமூக நோயிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க துணை புரியும். 

No comments:

Post a Comment