Saturday, August 29, 2020


'கல்லூரி மாணவ-மாணவிகளின் அரியர் பாடங்கள் அனைத்தும் பாஸ்'


வரவேற்க வேண்டிய அறிவிப்பும், எதிர்க்கட்சித் தலைவரின் அபத்தமான கோரிக்கையும்



'23 அரியரில் பாஸ்: முதல்வருக்கும், கொரோனாவுக்கும் திருச்சி மாணவர் நன்றி

என்ற தலைப்பில் வெளிவந்த கீழ்வரும் செய்தியானது எனது கவனத்தினை ஈர்த்தது.

மாணவர் சஞ்சய்நேரு கூறியது:முதலாம் ஆண்டில் முதல் செமஸ்டரில் ஒரு அரியர் பேப்பரும், 2-வது செமஸ்டரில் 5 அரியர் பேப்பரும் இருந்தது. 2-ம் ஆண்டில் 3-வது செமஸ்டரில்-5, 4-வது செமஸ்டரில்-6, 3-ம் ஆண்டில் 5-வது செமஸ்டரில்-6 என மொத்தம் 23 அரியர் இருந்தது. மேலும் அத்தனை அரியர் பாடங்களை மீண்டும் எழுதும் நோக்கில் கட்டணமும் செலுத்தினேன்.

இந்த நிலையில்தான் முதல்வர் பழனிசாமி, கல்லூரி மாணவ-மாணவிகளின் அரியர் பாடங்கள் அனைத்தும் பாஸ் என அறிவித்தார். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்கு காரணமான கொரோனாவுக்கும் நன்றி. இனி இறுதியாண்டில் எப்படியாவது எஞ்சிய செமஸ்டர் பாடங்களை நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 23 அரியரில் பாஸ்: முதல்வருக்கும், கொரோனாவுக்கும் திருச்சி மாணவர் நன்றி

'இனி இறுதியாண்டில் எப்படியாவது எஞ்சிய செமஸ்டர் பாடங்களை நன்றாக படித்து தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன்.' என்பதை மேற்குறிப்பிட்ட மாணவர் நிரூபித்தால் வியப்பில்லை.

பொதுவாக நிறைய அரியர்கள் வைத்துள்ள மாணவர்களில் பெரும்பாலானவர்கள் புத்திசாலிகள் என்பது எனது அனுபவமாகும். 

நான் 1960களின் பிற்பகுதியில் திருச்சி St.Joseph’s College- இல் நான் M.Sc (Physics) படித்த போது,  அதே கல்லூரியில்  M.Sc (Maths) படித்த மாணவரின் பின்னணியை நான் அறிவேன்.  PUC-இல் முதல் முறை பெயில் ஆகி, மீண்டும் தேர்வு எழுதி பாஸானவர். B.Sc-இல் முதல் முறை பெயில் ஆகி, மீண்டும் தேர்வு எழுதி பாஸானவர். அவரது அண்ணன் வங்கியில் சீனியர் மேனேஜர். 'எனக்கு   M.Sc  St.Joseph college-இல்  சேர்த்து விடு. நான் பாஸ் பண்ணி காண்பிக்கிறேன்' என்று சவால் விட, அன்று வழக்கில் இருந்த துணைவேந்தர் கோட்டா மூலம் M.Sc- இல் சேர்ந்தவர் அவர். 

M.Sc (Physics) முதலாண்டு பாடங்களுக்கு முதலாண்டில் தேர்வு, இரண்டாவது ஆண்டு பாடங்களுக்கு 2ஆம் ஆண்டில் தேர்வு இருந்தது. ஆனால் M.Sc (Maths)-இல் எல்லா பாடங்களுக்கும் இரண்டாவது ஆண்டில் தான் தேர்வு. எனவே பாஸாவதே கடினமாகும். ஆனால் அந்த மாணவர் M.Sc (Maths) First Class-இல் தேர்வானார். அந்த அளவுக்கு இரண்டு வருடமும் கடினமாக உழைத்துப் படித்தார். அவரின் P.U.C & B.Sc performance அடிப்படையில் அவரை முட்டாள் என்பதா?  M.Sc அடிப்படையில் புத்திசாலி என்பதா? 

சில ஆண்டுகளுக்கு முன், என்னுடன் தங்கி இருந்த மேல்நிலைப்பள்ளி C.B.S.E முதலாம் ஆண்டு மாணவன், அவன் பாடப்புத்தகத்தில் 3 பக்கங்களில் இருந்த C++ programme தேவையில்லாமல் நீண்டது என்று சொல்லி, தானாகவே ஒரு பக்கத்தில் அடங்கும் C++ programmeஐ கணினியில் enter செய்து,  Result காண்பித்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தான். ஆனால் பள்ளியில் முதலாண்டு பெயில். மீண்டும் வேறொரு பள்ளியில் படித்தான். குறைந்த மதிப்பெண்களுடன் பாஸ். ஆனால்  நுழைவுத் தேர்வில் தேர்ச்சிக்கான அளவுக்கு மேல் மதிப்பெண் எடுத்தும், தேர்வில் மாணவர் சேர்க்கைக்காக விதித்திருந்த C.B.S.E மதிப்பெண் இல்லாததால் IIT, NIT போன்ற இடங்களில் சேர முடியவில்லை.

தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில்  15 அரியருடன் இருந்தவர் இப்போது அரசு அறிவிப்பால் பாஸ்.

மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்கள் நிறைய அரியருடன் இருப்பதை நானறிவேன். எனவே அரசின் அறிவிப்பால், கல்வியின் தரம் கெடும் என்ற வாதம் தவறு ஆகும்.

பொறியலில் 'civil, mechanical, electrical, ECE, etc'  படித்து, பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி துறையில் பணியாற்றுகிறார்கள். ஐ.டி வேலைக்குப் போன மாணவர்களுக்கு அவர்கள் படித்த படிப்பாலும் தேர்வு மதிப்பெண்களாலும் அந்த வேலைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஐ.டி நிறுவனங்கள் நடத்திய தேர்வுகளிலும் நேர்க்காணலிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலை கிடைக்கிறது.

இப்போதுள்ள பொறியியல் கல்வி முறையில் தேர்வுகளே தேவையில்லை. இன்றுள்ள வேலைவாய்ப்புகளுக்கும் அடுத்து வர உள்ள வேலைவாய்ப்புகளுக்கும் பயிற்றுவிக்குமாறு மாற்றினால், வருகைப்பதிவும் தேவையில்லை. வேலைக்குப் போகும் ஆர்வமுள்ளவர்கள் விருப்பம் இருந்தால் பயில்வார்கள். நிறுவனங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்காகவே பயிற்சி பெறுவார்கள். வருகைப்பதிவும் தேவையில்லை. தேர்வுகளும் தேவையில்லை. சரக்குள்ளவர்களே ஆசிரியர்களாக இருக்க முடியும். இன்றுள்ள வருகைப்பதிவு, தேர்வுகள் முறை எல்லாம், சரக்கிலாதவர்கள் அம்பலமாகாமல் ஆசிரியர்களாகப் பணியாற்ற உதவுகிறது.

தாம் சேரும் வேலைக்கு தேவையற்ற, தமக்கும் ஆர்வமற்ற படிப்புகளை படிக்க வைக்கும் கல்வி முறையால் எவ்வளவு பணம், மனித நேரங்கள், மனித ஆற்றல் விரயமாகிறது? அவற்றை வேறு ஆக்கபூர்வமான வழிகளில் செலவழிக்க வழி செய்வது தானே புத்திசாலித்தனம். அந்த திசையில் நமது கல்வி முறையை மாற்ற, எந்த அளவுக்கு புதிய கல்விக் கொள்கையானது ஒரு பாலமாகும் அமையும்? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

அடுத்து கீழ்வரும் செய்தியானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நானறிந்தது வரையில், கீழ்வரும் மாணவர்களே செமஸ்டர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தாதவர்களாக இருப்பார்கள்.

வருகைப்பதிவு இல்லாதவர்கள் அல்லது மரணித்தவர்கள்;

வருகைப்பதிவு இல்லாதவர்களில், அந்த செமஸ்டரில் படிப்பை கை விட்டு வேலைக்கு சென்றவர்களும் இருக்கக்கூடும். அல்லது குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறையிலும் இருக்கக்கூடும்.

ஸ்டாலினின் கோரிக்கை ஏற்கப்பட்டால், மேற்குறிப்பிட்டவர்களும் 'தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்க வேண்டும்'.

அது மட்டுமல்ல, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும், முதல்வரும் உச்சநீதி மன்ற ஆணைப்படியும், உயர்க்கல்விக்கான அமைப்புகளின் வழிகாட்டுதலின்படியும், மேற்குறிப்பிட்ட முடிவை எடுத்துள்ளார்கள். கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் அந்த சலுகையை நீட்டிக்கும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது. மேற்குறிப்பிட்ட காரணங்களால், அவ்வாறு நீட்டிப்பதானது சட்டச்சிக்கலை ஏற்படுத்தும் அபத்தமான விளைவில் முடியும்.

'முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கு பயனளிப்பதாக இல்லை என்பது மிகவும் கவலை அளிக்கிறது.' என்று ஒரு எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்திருப்பதானது, சமூக வலைதளங்களில் அவரை கேலிக்குள்ளாக்காதா?

நான் கடந்த கால அனுபவத்திற்கு ஒரு உதாரணமும், நிகழ்கால அனுபவத்திற்கு ஒரு உதாரணமும் மேலே குறிப்பிட்டுள்ளேன். இது போல பல உதாரணங்கள் எனது சுமார் 40 வருட கல்லூரி ஆசிரியர் அனுபவத்தில் உண்டு.

மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வர, இப்போதுள்ள கல்வி முறையும் தேர்வு முறைகளும் தோற்று விட்டன, என்பது எனது அனுபவமாகும்.

உலகில் தர வரிசையில் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி முறையுடனும், வருகைப்பதிவு மற்றும் தேர்வு முறையுடனும் ஒப்பிட்டால்,  மிகுந்த படைப்பாற்றலுடன் (creative) அதிக செய்முறை திறமையுள்ள (practical skills) பல மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வர நமது கல்வி முறை எவ்வாறு தோற்று வருகிறது? என்பது தெளிவாகும். 

அதுமட்டுமல்ல, இன்றுள்ள கல்வி முறையில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாண‌வர்கள் படிக்கும் போதோ, படித்த பின் பணியாற்றுகையிலோ, எந்த அநீதியையும் எதிர்க்காமல், மிகுந்த பாதுகாப்பு மண்டிலத்தில் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இன்றைய கல்விமுறையில் உள்ள சமூக உளவியல் பாதிப்பும் ஆய்விற்குரியதாகும்.

No comments:

Post a Comment