Friday, August 14, 2020


தமிழ்நாட்டில் மெலடி இசையின் வீழ்ச்சிக்குக் காரணமான சமூகவியல் செயல்நுட்பம்?


தன்மானம் மீட்சி எவ்வாறு மெலடி மீட்சிக்கு வழி வகுக்கும்?



பல 'ஹிட்டான' மெலடி பாடல்களின் இசை அமைப்பாளர் பரத்வாஜின் கீழ்வரும் பேட்டியானது எனது கவனத்தினை ஈர்த்தது.

இதெல்லாம் ஒரு பாட்டா? ‘| Bharadwaj Interview;

மேற்குறிப்பிட்ட பேட்டியில், தற்போது வெளிவரும் படங்களில் எல்லாம் வடசென்னை பாணி குத்துப்பாடல்களின் ஆதிக்கத்தில் மெலடி பாடல்களுக்கு இடம் இல்லாமல் போய் விட்டது, என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எனது சமூகவியல் இசை ஆராய்ச்சி நோக்கில், உலக அளவிலும், தமிழ்நாட்டிலும் இசை ரசனையானது எந்த திசையில் பயணிக்கிறது? என்று ஆராய, அவ்வப்போது புதிதாக வெளிவரும் தமிழ்படப்பாடல்களையும் கேட்ட பொழுது, மேற்குறிப்பிட்ட பரத்வாஜின் நேர்க்காணலில் வெளிப்பட்ட கருத்துக்கள் நினைவுக்கு வந்தன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில், 'சித்தாடைக் கட்டிக்கிட்டு' (https://www.youtube.com/watch?v=NuHMV2qo4QI), 'மாமா மாமா' (https://www.youtube.com/watch?v=oREibjUo8D0) என்பது போன்ற பல குத்துப்பாடல்கள், மெலடி பாடல்களைப் போலவே, காலத்தை வென்ற பாடல்களாக வெளிவந்திருக்கின்றன.

கடந்த பல வருடங்களாக வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படங்களில் நீண்ட காலம் நீடிக்கும் வகையிலான ஹிட் பாடல்கள் வெளிவரவில்லை. திரையில் பாடல் காட்சிகளில் ரசிகர்கள் வெளியேறும் போக்கும் அதிகரித்தது. எனவே ரசிகர்களை உட்கார வைக்க, பரத்வாஜ் குறிப்பிட்ட வடசென்னை பாணி குத்துப்பாடல்கள் திரைப்படங்களில் அதிகரித்து இன்று உச்சத்தில் உள்ளன. அது போன்ற பாடல்களை மாணவர்களும் இளைஞர்களுமே பெரும்பாலும் ரசிக்கின்றனர். அதிகம் படித்த மேல்த்தட்டு பிரிவினர் ரசிக்க முடியாமல் முணகி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் இன்றைய சமூகத்தின் வெளிப்பாடே மேற்குறிப்பிட்ட போக்கு ஆகும்.

ஒரு ஊரில் (செல்வாக்கில் வளர்ந்து, அல்லது வீழ்ந்து, அல்லது புதிதாக முளைவிடும்) வலம் வரும் இசையை ஆராய்ந்து, அந்த ஊரின் வரலாற்றுப்பின்னணியையும், இன்றைய 'யோக்கியதையையும்', கண்டுபிடிக்க முடியும் என்று சுட்டிக்காட்டும் சான்று வருமாறு:

'பணிவு இல் சீர், மாத்திரை இன்று நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூறப்படும்.' - நாலடியார் 242

சீர் என்பதானது, நேரசை, நிரையசை என்ற இருவகை (எழுத்தின் இசையொலியால் உருவான) அசைகளின் கூட்டால் உருவாகி, தன்னுள் பாலைநிலை, பண்ணுநிலை, வண்ணகூறுபாடு, தாளக்கூறுபாடு ஆகியவற்றை கொண்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இசைஉட்கூறு (significant musical substructure) ஆகும்.( சிலப்பதிகாரம்: அரங்:26 உரை)

தமிழ்நாட்டில் இன்று அதிகம் படித்த மேல்த்தட்டு பிரிவினர் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளனர்? என்பதை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

பல வருடங்களுக்கு முன், திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், ஒரு பகல் பொழுதில், விபத்துக்குள்ளான பேருந்தில், ப‌லர் படுகாயம் அடைந்து, சாலையில் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பொருட்படுத்தாமல், அந்த வழியில் பல வாகன‌ங்கள் கடந்து சென்றன. குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், தனது இரு கைகளையும் விரித்து, சாலையில் நடுவில் நின்று, மிரட்டி, வாகனங்களை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவர்களை அந்த வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைத்தார்.

‘'வீட்டுக்கு அடங்கி’ ‘ஒழுக்கமாக(?) நன்கு படித்த' பிள்ளைகள், 'சிக்கல்கள்' வரும்போது, எவ்வளவு இழிவான 'சுயநலக்கள்வர்'களாக‌ நடந்து கொள்கிறார்கள்? பெற்றோர்களால் 'ஊதாரி' என்று கண்டிக்கப்படுபவர்கள், எவ்வளவு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள்?' என்பதை, கதாநாயகனை மையமாக வைத்து, வெளிப்படுத்தியதில், 'புதிய போக்கை' முதலில் அறிமுகப்படுத்தி, வெற்றி பெற்றது; 'திருடா திருடி', 'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட தனுஷ் நடித்த  படங்கள் ஆகும். 

மேற்குறிப்பிட்ட பதிவில், ''ஒழுங்காக'(?) படித்த 'யோக்கியர்கள்' இழிவான 'சுயநலக்கள்வர்'களாக‌ நடந்து கொள்வதையும்,

'ஊதாரியாக' பேர் பெற்றவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும், தனுஷ் கதாநாயகனாக நடித்த படங்கள் மூலமாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் செல்வராகவன். அவர் இயக்கிய மேற்குறிப்பிட்ட 'என்.ஜி.கே' திரைப்படமானது, எம்.ஜி.ஆர் பாணியிலிருந்து எந்த அளவுக்கு விலகி, அநீதியை எதிர்க்கும் தன்னம்பிக்கையை படித்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்? என்ற ஆவலும்;

தமிழில் 'சாபக்கேடான' 'ஹிரோயிச' போக்கிலிருந்து மாறுபட்டு, சாத்தியமான எதிர்ப்பு வழிமுறைகளை அடையாளம் காட்டி, சாமான்யர்களுக்கு போராடும் தன்னம்பிக்கையைக் கூட்டும்? என்ற ஆவலும் எனக்கு இருக்கிறது.' என்று தெரிவித்திருந்தேன்.

ஆனால் அப்படமானது 'ஹிரோயிச' நோயில் சிக்கி தோல்விப்படமானது. இனி 'ஹிரோயிச' பாணி படங்கள் வெற்றி பெறாது, என்பதும் ரசனையின் மீட்சிக்கு நல்ல அறிகுறியாகும்.

ரசனை என்பது ஒரு மனிதரிடம் இயல்பாக வெளிப்படுவதாகும்.

தமிழ்நாட்டில் மைக்ரோஉலகம் என்பதானது, தன்மானம் என்ற‌ கோவணம் கட்டியவர்கள் ஊராகவும், படித்தவர்களும் வசதியானவர்களும் நிறைந்த மேக்ரோஉலகமானது அம்மணங்களின் ஊராகவும் நீடிப்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none.html

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பது போன்ற அடிப்படைத்தேவைகளுக்கு அல்லல்படும் கீழ் மட்டத்தில் பெரும்பாலோர் தன்மானத்துடன் வாழ்ந்து வருகையில்;

மேல்மட்டத்தில் இருக்கும் வசதி வாய்ப்புகளுடன் திருப்தி அடையாமல், தன்மானம் இழந்து சாகும் வரையில் வசதி வாய்ப்புகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் சிக்குவது முட்டாள்த்தனமாகாதா?

தமது இயல்பைத் தொலைத்து, தம்மிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை காப்பாற்றிக்  கொள்வதற்காகவோ அல்லது குறுக்கு வழியில் அதிவேகப் பணக்காரர் ஆவதற்காகவோ, இழிவானவர் என்று தமது மனசாட்சிக்குத் தெரிந்தும், அவர் அரசியலில் அல்லது அதிகாரத்தில் செல்வாக்கானவர் என்பதால், அவருக்கு வாலாட்டி வாழ்பவர்கள் எல்லாம், தமது இயல்பான வாழ்க்கையைத் தொலைத்து வாழ்பவர்கள் ஆவார்கள்.

அவ்வாறு வாழ்பவர்களின் ரசனையானது, சமூக அளவில் மதிப்பை இழந்த பலகீனமான ரசனையாகும். எனவே படித்தவர்களும் வசதியானவர்களும் ரசிக்கக்கூடிய மெலடி ரசனை பலகீனமாவதும், அரைகுறையாக படித்தவர்களை அதிகமாக ஈர்க்கும் குத்துப்பாட்டு ரசனையானது வலிமை பெறுவதும், இன்றைய தமிழ்நாட்டின் பிரதிபலிப்பு ஆகும்.

படித்தவர்கள் மற்றும் வசதியானவர்களின் மெலடி ரசனைக்கும், அரைகுறையாகப் படித்த பாமரர்களின் மெலடி ரசனைக்கும் வேறுபாடு உண்டு.

இன்றைய கர்நாடக இசை ரசனையில் உள்ள 'மனநீதியிலான கட்டுப்படுத்தல்' (Mental Conditioning) இருப்பதை எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளேன்.

அது போல மேற்கத்திய நாடுகளின் ரசனையை தாமும் ரசித்து தம்மை உயர்த்திக்கொள்ளும் காலனிய மனநோயாளிகளும் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் வசதியானவர்களாகவே இருக்கிறார்கள். 

மேற்குறிப்பிட்ட இரண்டு வகை 'மனநீதியிலான கட்டுப்படுத்தல்'களுக்கு உள்ளாகாமல், தமது இயல்பை ஒட்டிய மெலடி ரசனையே பாமரர்களிடம் உள்ளது.

மேற்குறிப்பிட்ட  'சித்தாடைக் கட்டிக்கிட்டு' , 'மாமா மாமா' என்பது போன்ற காலத்தை வென்ற பாடல்களில் எல்லாம், பாமரர்களின் மெலடி ரசனையைக் கலந்தே குத்துப்பாடல்கள் வெளிவந்திருப்பதை அறியலாம். அந்த பாணியில் நிகழ்காலத்தில் வெளிவந்த 'வால மீனுக்கும்' பாடலும் விதி விலக்காகவே பெரும் வெற்றி பெற்றது.

Chithiram Pesuthadi | Vaalameenukkum ;

அந்த பாடலும் இசையும் ஏற்கனவே உலவி வந்த கானா இசைப்பாடலாகும்.

அதற்குப் பின் அது போன்ற மெலடி கலந்த கானாப்பாடல் எதுவும் வெளிவரவில்லை.

அதற்கு அடுத்து, இந்திய இசைகளில் உலகின் பெரும்பாலான மொழிகளில் வெளிவந்த அளவுக்கு உலகப்புகழ் பெற்ற ஒரே பாடல் 'கொலை வெறி' ஆகும்.

நம்பிக்கையூட்டும் 'கொலை வெறி' பாடல் 'சிக்னல்';

'வால மீனுக்கும்' பாடலைப் போல, ஏற்கனவே உலவி வந்த கானா இசைப்பாடலாக இல்லாமல், அனிருத் மற்றும் தனுஷின் கூட்டு முயற்சியில் உருவான பாடல் அதுவாகும். இசை அமைத்தல் என்ற நோக்கமின்றி, அவர்கள் இருவரின் இயல்பை ஒட்டிய‌‌ பொழுதுபோக்கான முயற்சியில் உருவான பாடல் அது, என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.‌

'கொலை வெறி' பாடலில் கீழ்வருவபவை கவனிக்கத்தக்கதாகும்.

'மாலையிட்ட மங்கை'  திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய 'செந்தமிழ் தேன் மொழியாள்' பாடல் வரிகளை, இன்றும் கல்லூரி மாணவர்கள் பாட கேட்டிருக்கிறேன்.

அந்த பாடலின் முதல் வரியை,

'செந்தமிழ் செந்தமிழ் செந்தமிழ் தேன்மொழியாள்'
என்று அதே சுர அமைப்பில் சற்று மாற்றி பாடி,

'வை திஸ் வை திஸ் வை திஸ் கொலைவெறிடி' என்பதுடன் ஒப்பிடலாம், என்ற கருத்து வெளிவந்துள்ளதும், ஆராய்ச்சிக்குரியதாகும்.

அதே போல் அவற்றை வெளிப்படுத்திய கருவி இசையும், வாய்ப்பாட்டும் அதற்கு எவ்வாறு வலிவு சேர்த்தன என்பதையும், அடுத்து எனது ஆய்வுகளின் மூலமாக‌ வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.

இசைக்கான இலக்கண நெறிமுறைக்ளை மீறி, ஆட்சி அதிகார எதிர்ப்பு (anti-establishment)  போக்கில் வெளிப்பட்ட பாடல் இதுவாகும்.

அதே போல, அப்பாடலில் இடம் பெற்ற ஆங்கில மற்றும் தமிழ்ச் சொற்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள்,  'வெண்மை' உள்ளிட்ட மேல்த்தட்டு மேற்கத்திய மோகத்தினைக் கிண்டல் செய்து வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் கீழ்த்தட்டில் உள்ள இளைஞர்களின் மனநிலையில், வெவ்வேறு வகையிலான ஏக்கங்களுடன், மேல்த்தட்டு உள்ளிட்ட‌ அனைத்து மட்ட மக்களும், குறிப்பாக இளைஞர்களும் இருப்பதைப் படம் பிடித்து காட்டுவது தொடர்பாக, மேலும் ஆய்வு செய்ய வேண்டிய பாடல் இதுவாகும்.

அது மட்டுமல்ல, அந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாடலில் வாய்ப்பாட்டிற்கும், கருவி இசைக்குமான சுர அமைப்புகள் (Musical note structures) நன்கு பொருந்தியதும், இப்பாடலின் உலக வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மக்களிடமிருந்து அந்நியமாகி பயணிக்கும் 'தனித்தமிழ்' முயற்சிகள், ஆங்கிலவழிக்கல்வி  உள்ளிட்ட பல காரணங்களால், தமிழ் மொழியானது, தனது தகவல் பரிமாற்ற வலிமையை, தமிழும் ஆங்கிலமும் கலந்த 'தமிங்கிலீசில்', 'அதிவேகமாக' இழந்து வருகிறது.   
(‘தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற' பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்’;

தகவல் பரிமாற்றம்(communication)  கோணத்தில், தமிழின் மரணப்பயணம் குறித்து வெளிப்பட்டுள்ள அபாய அறிவிப்பாக, இப்பாடலின் வெற்றி அமைந்துள்ளது.

உலகமயமாதலில் ஆங்கிலம் கலந்த மொழியின் தகவல் பரிமாற்ற வலிமையின் ஆதிக்கத்தையும் இப்பாடல் வெளிப்படுத்தியதானது,

அதே வழியில் தமிழுக்குப் பதிலாக பிற மொழிச் சொற்களை சேர்த்து, தாம் விரும்பிய கிண்டலை வெளிப்படுத்த, பல மொழிகளில் இப்பாடல் வெளிவந்து, உலகைக் கலக்குவதற்கும் காரணமானது.

உலக அளவில் வெளிவந்த பலவற்றில் கீழ்வரும் கார்டூன் கொலை வெறிப்பாடல் என்னை மிகவும் ஈர்த்தது.


ஆட்சி அதிகார எதிர்ப்பு (anti-establishment)  போக்கில், செவ்விசை செல்வாக்கு இழந்து, பல வகையான மாற்று இசைகள் அந்தந்த கட்ட போக்குகளில் வளர்ந்து, படைப்பாற்றால் (creativity) பாதாளத்தில் உள்ள நிலை அடைந்து விட்டது. இனி அடுத்த கட்ட புதிய இசைக்கான காலம் கனிந்து வருகிறது என்பதை லண்டனில் இருந்து வெளிவரும் 'கார்டியன்'(Guardian)  இதழில் மார்ட்டின் கெட்டில்(Martin Kettle) என்ற எழுத்தாளர் கீழ்வரும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

“The popular music that once filled the place it vacated seems in turn to have largely burned itself out. Here, too, creativity is at its lowest ebb since the early 50s. The space awaiting good new music of any kind is immense.”- Guardian, February 1, 2005

'கொலை வெறி'ப் பாடலானது, தமிழ்நாட்டில் அந்த புதிய இசை தோன்றுவதற்கான சிக்னல் ஆகும் என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

'கொலை வெறி'ப் பாடலில் சொற்களில் உள்ள எழுத்துக்களை எல்லாம் தெளிவாக உச்சரித்ததானது மிகவும் முக்கியமான அதிசயமாகும். அதன்பின் வெளிவந்த திரைப்பட பாடல்களில் பெரும்பாலானவற்றில், குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் உருவான வெற்றிப்படங்களில், அவ்வாறு தெளிவாக உச்சரித்த பாடல்கள் வெளிவந்ததும் எனது கவனத்தை ஈர்த்தது. 
(‘'கொலைவெறி', 'பேட்ட' பின்னணி இசையான‌ பாடல்கள், 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'; https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

தமிழில் எழுத்தின் ஒலிக்கும், இசைச் சுருதிக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்ததை, விளக்கியிருந்தேன். தமிழில் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் அதைப் பின்பற்றாமல், திரைப்பாடல்கள் எழுதும் போக்கானது அறிமுகமானது.

கண்ணதாசனுக்குப் பின், திரை இசைப்பாடல்களில் சுருதி சுத்தமான எழுத்துக்கள் அடங்கிய திசையில் சொற்கள் தடம் புரண்டு, புதுக்கவிதை திறமைகளுடன்(?) வைரமுத்து பயணித்த திசையில், மேற்கத்திய மோகத்தில் சிக்கிய ரசனையும், எந்த அளவுக்கு வினையூக்கி (catalyst) ஆனது? என்பதும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய நேரமும் வந்து விட்டது.

இன்று 'ஹிட்' ஆகும் பாடல்கள் கூட, அந்த திரைப்படமானது திரை அரங்குகளிலிருந்து வெளியேறியவுடன், அடங்கி விடுகின்றன. அந்த வகை 'ஹிட்' பாடல்களும் அரிதாகி வருகின்றன.

தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் துணையுடன், மேற்கத்திய மோக ஆதிக்கத்தில், விளைந்த‌ ரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்தால், அது தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனையில் இருப்பதன் வெளிப்பாடாகும். எனவே திரை இசைத் தமிழை மீட்பதற்கான காலமும் இதுவாகும். 
(‘திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில்  மீண்டும் பயணிக்குமா?’; 

படித்தவர்கள் மற்றும் வசதியானவர்களில் தன்மானத்துடன் தத்தம் இயல்பை ஒட்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கில், மீண்டும் மெலடி பாடல்கள் உருவாகும் சமூக சூழல் வளரும்.

அது போல, வடசென்னை பாணி குத்துப்பாடல்கள் திகட்டும் அளவுக்கு உச்சத்தை நெருங்கி விட்டதால், பாமரர்களும் மெலடி பாடல்களுக்கு ஏங்கும் போக்கும் வெளிப்படும்.

தமிழ்நாட்டின் சமூக இயல்பில் தன்மானம் வீழ்ந்ததால், தலைவர்களின் பட்டங்களாகிய 'பெரியார், கலைஞர், தளபதி, ஆசிரியர், அம்மா' போன்றவை எல்லாம் பெயர்களாக, துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களும் மேடையில் அந்த வழிபாட்டுப் போக்கில் சிக்கிய அவலம் அரங்கேறியது.  இன்று ஈ.வெ.ரா, கருணாநிதி, ஸ்டாலின், கி.வீரமணி, ஜெயலலிதா போன்றவை, அந்த தன்மானக்கேடான வழிபாட்டுச் சிறையில் இருந்து விடுபடும் காலம் துவங்கி விட்டது. எனவே மெலடி இசை புத்துயிர் பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

கொரோனா மூலமாக தமிழ்நாட்டில் பொது ஒழுக்கமும் இயல்போடு வாழும் போக்கும் அதிகரித்து வருகிறது. 

எனவே மெலடி ரசனையானது புத்துயிர் பெறும் சமூக சூழலும் கனிந்து வருகிறது.

ஆனால், அவ்வாறு வளர்ந்து வரும் புதிய மெலடி தொடர்பான ரசனைகளுக்கு ஏற்றவாறு இசை அமைப்பதற்கான திறமைகள் கொண்ட‌  இசை அமைப்பாளர்களே இனி எடுபட முடியும். அதற்கான இரகசியங்கள் 'கொலை வெறி' பாடலில் உள் மறைந்துள்ளன (Latent).

டிஜிட்டல் யுகத்தில் காப்பி அடித்து  இசை அமைத்த பாடல்கள் எல்லாம் எளிதில் அம்பலமாகி விடும்.

எனவே இசை அழகியல் கூறுகள் கொண்ட புதிய‌ சுர கட்டமைப்புகளைக் (Musical Note structures) கொண்ட மெலடி இசையை உருவாக்கவல்ல இசை அமைப்பாளர்களே இனி எடுபட முடியும்.

அதற்கு சாமான்யர்களின் உலகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி வாழ்வது உதவும்.

சாமான்யர்களின் உலகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி வாழ்ந்து திரை உலகில் சாதனையாளர்களாக வளர்ந்தவர்களில், வசதி வாய்ப்புகளில் உயர்ந்த வாழ்க்கைக்கு யார் யார் அடிமையானார்கள்?  

அதன் விளைவாக, பொது ஒழுக்க நெறியை 'நுகரும்' திறன் இழந்து, மனிதத்தை இழந்த பிணங்களின் வாடை மிகுந்த சமூக மூச்சுத் திணறல் (Social suffocation) மிகுந்த சமூக வெளியில் (Social space) வாழ்ந்து, படைப்பாற்றலின் (Creativity) ஊற்றுக்கண்களாகிய‌ சாமான்யர்களின் உலகத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் எவ்வாறு அந்நியமானார்கள்? அதனால் தத்தம் சாதனையைத் தொடரமுடியாமல் எவ்வாறு  வீழ்ந்தார்கள்? என்ற ஆய்வுக்கு உகந்ததாகவும் தமிழ்நாடு இன்று இருக்கிறது. 

மனிதத்தை இழந்து பிணமாக வாழ்பவர்களின் சமூக வெளியில் இருந்து விடுபட்டு வாழ்ந்தால் தான், சாமான்யர்களின் உலகத்தோடும், இயற்கையோடும் ஒட்டி வாழ்வது  சாத்தியமாகும். 

ஹிட் ஆகும் ரசனையை உணர்ந்து, சாமான்யர்களின் உலகத்திலும், இயற்கையிலும் வெளிப்படும் ஒலிச் சந்தங்களைக் கவனித்து, அவற்றில் இருந்து புதிய‌ சுர கட்டமைப்புகளை உருவாக்குவதும் சாத்தியமாகும்.

இன்று குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற பட‌ங்களின் பாடல்களின் உள்ளடக்கமானது சாமான்யர்களின் உலகத்தோடும் மாணவர்கள் உலகத்தோடும் ஒட்டியதாகவே உள்ளன. அவை ரசனையிலும் இசைச்சுர கட்டமைப்பிலும் (Musical Note Structures) ஒத்திசைவான (Resonance) உறவுடன் உருவானால் மட்டுமே காலத்தை வென்ற பாடல்களாக வெற்றி பெற முடியும்.

கொரோனாவிற்கு பிந்தைய உலகத்தில், இசை உருவாக்கம் மற்றும் வியாபாரமானது 'ஆன்லைன்' (Online) திசையில் தான் பயணித்தாக வேண்டும். எனவே இசை அமைப்பாளர்கள் புதிய இசை பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவதும் சாத்தியமாகும்.

'இசை அமைத்தல்' என்பது ஓர் இசைக்கட்டிடம் (Musical Building) கட்டுவதைப் போன்றதே ஆகும்.  அந்த நுட்பத்தில், உலகில் எந்த வகை இசையையும், அல்லது புதிய ரசனைகளுக்கான புதிய வகை இசைகளையும் உருவாக்க முடியும்.

அதனை செயல்பூர்வமாக நிரூபிக்க, நான் உருவாக்கிய இசைகளில் ஒன்றையே, கம்போடியாவில் இசை ஆசிரியர் முன்னிலையில் நிகழ்த்தினேன். 
(Listen ‘Angkor 2020’ in http://muxel.sg/)

எனது இசை ஆராய்ச்சிகள் மூலமாக வெளிவந்த கண்டுபிடிப்பின் மூலமாக, கொரோனாவிற்கு பிந்தைய உலகத்தில் இசை அமைப்பாளர்களும், அவர்கள் மூலமாக இசைத்துறையும் பலன் பெறுவதே எனது இலக்காகும். 
(‘கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்தில், இசைத்துறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழலாம்?’; https://tamilsdirection.blogspot.com/2020/05/passive-proactive.html)



குறிப்பு: ஆர்வமுள்ளவர்கள் தங்களின் கருத்துக்களை (comments) கீழே பதிவு செய்து விவாதிப்பதை வரவேற்கிறேன்

என்னுடன் தொடர்பு கொள்ள; pannpadini@gmail.com

No comments:

Post a Comment