Wednesday, August 26, 2020


அழுகிய கழகங்களால் அழுகும் தமிழக பா.ஜ.க (4)


தமிழக பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிப்ப‌து இயற்கையின் தண்டனை ?



2014இல் மோடி பிரதமரானது, எவ்வாறு இந்தியாவிற்கு நல்லதாகவும், தமிழ்நாட்டிற்குக் கெடுதலாகவும் ஆனது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

பிரபாகரனின் விடுதலைப்புலிகளின் முட்டாள்த்தனத்தால், இலங்கையின் ஆட்சி ராஜபட்சே குடும்பத்திடம் சிக்கியது.

எனது தலைமுறையானது தி.மு.கவின் கவர்ச்சித்தமிழில் ஏமாந்ததால், தமிழ்நாடானது கருணாநிதியின் குடும்ப ஆட்சியில் சிக்கியது. ஆனால் தி.மு.கவில் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களால், அதில் இருந்து எம்.ஜி.ஆர் மூலமாகத் தப்பித்தது தமிழ்நாடு.

எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின், சசிகலா குடும்ப ஆட்சியில் தமிழ்நாடு சிறையுண்டது. சசிகலா குடும்ப ஒத்துழைப்பில் தமிழ் மீண்டும் கருணாநிதியிடம் சிறைபட்டது. 
(‘தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; 
https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

அந்த சிறையில் இருந்து விடுபட முயன்று தோற்றதே ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குக் காரணமானது. 

பிரபாகரனைப் போலவே ஜெயலலிதாவும், தமது முட்டாள்த்தனத்தால் தமது முடிவைத் தாமே வரவழைத்துக் கொண்டார்.

தமிழக பா.ஜ.க நோஞ்சான் கட்சியாகப் பயணித்ததால், ஜெயலலிதாவின் மரணத்திற்குப்பின், சரியான தேச்சக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் எவ்வாறு கெட்டது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 'ஊழல்' புலியைக் கொல்லப் புறப்பட்டு, அதன் வாலைப் பிடித்த 'நாயரான‌'  பிரதமர் மோடி பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

அதைப் பயன்படுத்தி, முட்டாள்த்தனமாக இந்துத்வா ஆதரவு முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்' எவ்வாறு வளர்ந்து வருகிறது? என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html)

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்கள்' எல்லாம், உணர்ச்சிபூர்வ பரிமாற்ற வெறுப்பு அரசியலில் சமூக நேர்மையைச் சீர்குலைத்துப் பயணிப்பதானது, 2014 முதல் வேகமெடுத்து வரும் ஆபத்தான சமூக சிக்னலாகும்.

மேற்குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, சசிகலா குடும்பத்திற்கும், ஸ்டாலின் குடும்பத்திற்கும் நெருக்கமான 'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் போக்கும் தீவிரமாகியுள்ளது. 

நித்தியானந்தாவைப் பாராட்டிய ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் எல்லாம், சரியான தேச்சக்கட்டுமான திசையில் தமிழ்நாடானது தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சிக்கு எவ்வாறு அனுகூல சத்ருவாக பங்களித்து வருகிறார்கள்
(‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics -EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?; 

2014இல் பிராமணர்கள் சார்புள்ள கட்சி என்று கருதப்பட்டிருந்தாலும், திராவிடக்கட்சிகளைப் போலின்றி, நாகரீகமான நேர்மையான கட்சி என்ற பெயர் தமிழக பா.ஜ.கவிற்கு இருந்தது. தமிழ்நாட்டில் 2014 தேர்தலில் ஏன் வெற்றி பெற்றோம்? என்பது தெரியாமல், மோடியின் தோளில் பயணித்து, இன்று தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கினையும் வீழ்த்தி, தமிழக பா.ஜ.க நோட்டாக் கட்சியாகி விட்டது.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் தமக்குள்ள ஆர்வத்தை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் தொடர் முயற்சியின்றி,

மோடியின் செல்வாக்கு என்ற முதுகின் மேல், 'திராவிட' கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், இந்துத்வாவை விட தமக்கான முக்கியத்துவத்தில் 'குவியமாகி', தமது 'விசுவாசிகள்' கூட்டத்தை பேணி பாதுகாத்து வரும் 'குழு'(?) தலைவர்கள் அரசியலில் சிக்கி பயணித்து வரும் தமிழக பா.ஜ.கவானது;

தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பிடித்து வரும் 'இந்துத்வா' மூலம் பலன் பெற வாய்ப்பில்லை. 

பகிரங்கமாக மூகாம்பிகை கோவிலில் வழிபட்டு, ஆன்மீக திசையில் திராவிட அரசியல் பயணிக்க வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு இருந்த புலமையாளர்களின் பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி (Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்ததே, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஜெயலலிதாவிற்கும் எவ்வாறு கேடாக முடிந்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘தமிழக அரசியல்  நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வரும் காட்சிகள்: விஜயகாந்த் வழியில் சசிகலா - நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?’; 

1967 முதல் சாகும் வரை அண்ணா பயணித்த வழியிலும், பின் அந்த வழியில் சாதனைகள் புரிந்த எம்.ஜி.ஆர் வழியிலும் தமிழ்நாடு பயணித்தால் மட்டுமே மீட்சி திசையில் இனி பயணிக்க முடியும்.  

சசிகலாவின் பினாமி ஆட்சியாக கூவத்தூரில் ஈ.பி.எஸ் முதல்வரானார். பின் ஓ.பி.எஸ் 'புரட்சி' நடந்தது. பின் அணிகள் இணைய ஓ.பி.எஸ் துணை முதல்வரானார். சசிகலா, மத்தியில் மோடி அரசு, தி.மு.க என்ற மும்முனையின் பின்னணியில் உள்ள அழுத்தங்களை இன்றுவரை வெற்றிகரமாக சமாளித்து வருகிறது ஈ.பி.எஸ் ஆட்சி.

எந்திரவியலில் இயக்கத்தன்மையில் (dynamic) உள்ள மூன்று திசைகளில் செயல்படும் விசைகளின் (Forces) தொகுவிளைவாக (Resultant) 'தற்காலிக சமநிலை' (Temporary Equilibrium) உருவாக வாய்ப்புண்டு. தமிழ்நாட்டு சமூக எந்திரவியலில், அத்தகைய சமநிலையில் ஈ.பி.எஸ் அரசானது நீடித்து வருகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தான், அது சசிகலாவின் 'பி டீமா?  இல்லையா? தெளிவாகும். 
(‘'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களான‌ (Recruiting agents) பிராமணர்கள்? சசிகலாவின் இன்னொரு 'பி.டீமாக' தமிழக பா.ஜ.க?’; 

கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் பாடம் கற்று, பா.ஜ.கவை ஓரங்கட்டி, ஜெயலலிதா பாணியில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில் சாமான்யர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பிரமாண்ட வெற்றியை சுவைத்த பின்னர், சசிகலாவால் அ.இ.அ.தி.மு.க பிளவுபடாது.

தப்பித்தவறி பிளவு பட்டாலும், சசிகலா எதிர்ப்புடன் பா.ஜ.கவை ஓரங்கட்டி போட்டியிட்டால், அ.இ.அ.தி.மு.க எதிர்பார்க்காத பிரமாண்ட வெற்றி பெறும் என்பது எனது கணிப்பாகும்.

"ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலால் கட்சி உடையுமா?" என்று அ.இ.அ.தி.மு.கவில் நீண்ட காலமாக அடிமட்டத் தொண்டராக இருக்கும் ஜெயலலிதா விசுவாசியிடம் கேட்டேன். கீழ்வரும் பதில் கிடைத்தது.

"ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸிடம் பணிந்து போய் உடைவதைத் தவிர்த்து விடுவார்."

அவர் குரலில் இருந்த உறுதியும் தெளிவும் எனக்கு வியப்பைத் தந்தது.

இலங்கை ஆட்சி ராஜபட்சே குடும்பத்திடம் சிக்க, பிரபாகரனின் மரணம்  வழி வகுத்தது. ஜெயலலிதாவின் மரணமானது தமிழக பா.ஜ.கவை நோட்டாக்கட்சியாக்கி விட்டது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் மற்றும் இறுதிச்சடங்கு தொடர்பான 'சமூக ஊமைக்காயத்தின்' ஆழம் புரியாமல், தமிழக மக்களை முட்டாளாகக் கருதி, தமிழக பா.ஜ.க முட்டாளாகி வருகிறது.

திருமங்கலம் ஃபார்முலாவை அமுல்படுத்தி பிரமாண்ட வெற்றியைச் சுவைத்த தி.மு.க 2011 சட்டசபை பொதுத்தேர்தலில் 180க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தமிழ்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. தமிழக மக்களிடையே வெளிப்பட்ட தி.மு.க எதிர்ப்பு அலையை எவரும் கணிக்கவில்லை. ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகி, தி.மு.க 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்தது.

அந்த தேர்தலில் வாக்களிப்பதற்காகவே புதுக்கோட்டையில் இருந்து சென்னை சென்று வந்தேன். பேரா. (ஞானாலயா) டோரதி கிருட்டிணமூர்த்தி "யாருக்கு சார் வாக்களித்தீர்கள்?" என்று கேட்டார்.

"அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன்' என்று பதில் சொன்னேன். உடனே அவர் தெரிவித்தது, எனக்கு மறக்க முடியாத சமூக சிக்னல் ஆனது.

"நான் இதுவரை கேட்டவர்களில் நீங்கள் ஒருவர் தான் அ.இ.அ.தி.மு.கவிற்கு வாக்களித்தேன் என்று சொன்னீர்கள். மற்ற எல்லோரும் தி.மு.கவிற்கு வாக்களித்ததாகவே சொன்னார்கள். ஆனால் முடிவுகள் அவர்கள் சொன்னதற்கு எதிராக இருக்கிறது"

அரசால் கைப்பற்ற முடியாத ஊழல் பணத்தை நம்மால் முடிந்த அளவு கைப்பற்றி, தமது கோப அலையை எவருமே கணிக்க முடியாத அளவுக்கு வாக்களிக்கும் போக்கு தமிழக மக்களிடையே வளர்ந்து விட்டது. மேக்ரோஉலகத்தை விட்டு விலகி, இயன்றவரை சாமான்யர்களின் மைக்ரோஉலகத்தோடு ஒட்டி வாழ்ந்து வருவதே, எனது பதிவுகளில் நான் வெளியிட்ட  (2016 இல் ஜெஜெ மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்; கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும் நோட்டா கட்சியாக தமிழக பா.ஜ.க மாறி விட்டது; ஆனாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் ஈபிஎஸ் ஆட்சி கவிழாது) என்பது போன்ற கணிப்புகள் சரியானதற்குக் காரணமாகும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க 3ஆவது இடத்துக்கு வரும், டெபாசீட் இழந்தாலும் வியப்பில்லை, பண விநியோகத்தைப் பொறுத்து இரட்டை இலை அல்லது தினகரன் வெற்றி பெறலாம், என்று தேர்தல் முடிவுக்கு முன்பே, நான் கணித்தற்கு, மேலே குறிப்பிட்ட, மீடியா செல்வாக்கு வளையத்தில் வராத பிரிவினரின், அந்த நாடித்துடிப்பை உணரும் வகையில் நான் வாழ்ந்து வருவதே முக்கிய காரணமாகும்.

நான் ஆர்.கே.நகர் வாக்காளராக இருந்திருந்தால், முதல் முறை ஒத்திவைக்கப்படாமல் தேர்தல் நடந்திருந்தால், ஜெயலலிதாவின் மர்ம மரணம் ஏற்படுத்தியிருந்த கோப அலையில்,  மதுசூதனனுக்கு வாக்களித்திருப்பேன். போனமுறை தினகரனுக்கு ஆதரவாக வலம் வந்த ஈ.பி.எஸ் குழுவினர் இந்த முறை மதுசூதனனுக்கு ஆதரவாக வந்ததால், நான் நோட்டாவிற்கு தான் வாக்களித்திருப்பேன். நான் பணக்கஷ்டத்துடன் வாழும் பிரிவினராயிருந்து, சசிகலாவின் படத்தைத் தவிர்த்து வாக்குக்கு ரூ 10,000 தினகரன் கொடுத்திருந்தால், குக்கருக்குத் தான் வாக்களித்திருப்பேன். 
(https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

ஒப்பீட்டளவில் அ.இ.அ.தி.மு.க வாக்கு வங்கிக்கு அதிக சேதாரம் இன்றி, தி.மு.க, பா.ஜ.க வாக்குகளே அதிகமாக பணத்திற்கு விலை போனதை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறும் வாய்ப்பினை 2018 சனவரியில் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

ttps://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_6.html

இந்தியாவின், தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் வெற்றி வாய்ப்பினைக் கெடுக்கக்கூடாது;

என்பதே 2005 முதல் மோடி ஆதரவாளராகப் பயணித்து வரும் எனது விருப்பமாகும், ராஜபட்சே பாணி குடும்ப ஆட்சியில் சிக்கும் வாய்ப்பில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பதற்காக‌.

2016 டிசம்பர் பதிவில் கீழ்வருவது வெளிவந்தது.

'மோடி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆன பின்னும், இன்றுவரை எந்த 'மெகா' ஊழல் வழக்கும் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஊழலையும், கறுப்பு பணத்தையும், ஒழிப்பதாக கூறி, பிரதமர் மோடி முன்னெடுத்த பணநீக்க (Demonetization)  முயற்சியை தோற்கடிப்பதில், ஊழல் நோயில் சிக்கிய அரசு அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும் எந்த அளவுக்கு  வெற்றி பெறுவார்கள்? அல்லது தோல்வியைத் தழுவார்கள்? என்பதும் இனி தான் தெரியும்.  அந்த முடிவில் தான், தமிழ்நாடும் ஊழல் அரசியலிலிருந்து விடுதலை ஆகுமா? ஆகாதா? என்பதும் தெளிவாகும். 'டிஜிட்டல் யுகத்தில்'(Digital Age), எந்த அரசுக்கும் மனதும், துணிவும் இருந்தால், ஊழல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பது சாத்தியமே.

மோடி பிரதமரான பின், தமிழ்நாட்டில் வாக்குகளுக்கான பணம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

நானறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான (கட்சித் தொடர்பில்லாத) கல்லூரி மாணவர்கள் 2014 தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இருந்தார்கள். 2019 தேர்தலில் நான் விசாரித்த அனைவருமே விதி விலக்கின்றி மோடிக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள்.

கருணாநிதி - மாறன் குடும்பம், சசிகலா குடும்பம், மற்றும் அவர்களை ஒட்டி ஊழல் புரிந்த அனைத்து கட்சிகளின் முக்கிய புள்ளிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், மோடி ஆட்சியில் நடந்த சோதனைகள் அடிப்படையிலான வழக்குகள், வைகோவால் பிரபலமான சாதிக்பாட்சா கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படும் வரையில், தமிழக பா.ஜ.கவானது நோட்டாக்கட்சியாகப் பயணிக்கப் போவது இயற்கையின் தண்டனையாகும். 



குறிப்பு:

புதிய தொழில், வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்க வல்ல‌ எனது கண்டுபிடிப்புகள் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்திருந்தால், அவை  உடனே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்;

என்பதும் எனது கருத்தாகும்               

எந்த வகையான வெறுப்பு அரசியலையும் நான் ஆதரிக்க முடியாது. எனக்கு வேண்டியவர்களாயிருந்தாலும், அவர்களின் ஆய்வுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் புலமையின் வளர்ச்சிக்கு முக்கியமாகும்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி, பிரபாகரன் 'வழிபாடு வலைப்பின்னல்களில்' இடம் பெறாமல், தனித்து அறிவுபூர்வ விமர்சனப்பார்வையோடு நான் பயணித்து வருவதே, மேலே குறிப்பிட்ட இருட்டடிப்புக்கு காரணமாக இருக்கலாம். மோடி ஆட்சியில் வெளிப்படும் நிறைகளைப் பாராட்டினாலும், குறைகளையும், இந்துத்வா ஆதரவு முகாம்களில் வெளிப்படும் குறைகளையும் சுட்டிக்காட்டி வருவதால், இந்துத்வா ஆதரவு முகாம்களிலும், அதே பாணி இருட்டடிப்பு தொடரலாம். 

1 comment: