Sunday, August 2, 2020



என்ஜீன் நின்று போனாலும் ஓடும் கார் போலவே,


ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள்?


கந்த சஷ்டி கவசம்வெளிப்படுத்திய‌ பாடங்கள்?



தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நவீன கார்களில் பயணம் செய்பவர்களுக்கு, காரின் என்ஜீன் (engine) ஓடும் சத்தம் கூட கேட்காது. ஓடும் காரின் என்ஜீன் நின்று போனாலும், ஏற்கனவே ஓடி வந்த வேகத்தில் கொஞ்ச தூரம் ஓடும். அது தெரியாமல், பயணம் செய்பவர்கள் தமக்குள் உற்சாகமாக கதை பேசி கொண்டிருந்தால் என்ன ஆகும்? கார் நின்ற பின்பு, அதற்கான காரணத்தை வாடகைக் கார் ஓட்டுநர் (பண்புள்ளவராக இருந்தால் எரிச்சலின்றி) தெரிவித்த பின்பு,  அது தெரிய வரும்.

ஈ.வெ.ரா இந்து கடவுள்களைப் பற்றி பேசியதைக் கூட, இனி 'பெரியார்' கட்சிகள் பிரச்சாரம் செய்ய முடியுமா? என்பதும் சந்தேகமே. 'கறுப்பர் கூட்டம்' வழக்குகள் தம் மீதும் பாயாத அளவுக்கு, நிகழ்காலத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த ஒளிப்பதிவுகளை இணையத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும்.

அது மட்டுமல்ல, இனி பொது இடங்களில் இந்து கடவுள்களை கேலி செய்யும் நிகழ்ச்சிகளை, 'பெரியார்' கட்சிகள் உள்ளிட்டு எவரும் நடத்த முடியாத சமூக சூழலும் உருவாகி வருகிறது.


மேற்குறிப்பிட்ட கருத்துக்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

"கருத்து சுதந்திரம், விமர்சனம் தவறு என்றாகி விடாதா?"

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

எது விமர்சனம்? எது விமர்சனத்திற்கான வரம்பு மீறி கேலி கிண்டல் இழிவு? என்பது நீதிபதியின் பார்வையைப் பொறுத்தது. சட்டம் படித்தவன் என்ற அடிப்படையில் எனது கருத்து: 

ஈவெரா இந்து கடவுள்கள் பற்றி பேசியவற்றில் பெரும்பாலானவை சட்டப்படி தண்டிக்கத்தக்கதாகும்.  திராவிட கட்சிகளின் ஆட்சி என்பதால் தண்டிக்கவில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சட்டத்தின் ஆட்சி உள்ள எந்த நாட்டிலும் அதை அனுமதிக்க மாட்டார்கள். சிங்கப்பூரில் கூடுதலாக பிரம்படி தண்டனை கிடைத்தாலும் வியப்பில்லை.

மேற்குறிப்பிட்ட எனது விளக்கத்திற்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

"இராஜாஜிகாமராசர்ஓமந்தூரார்பக்தவச்சலம் ஆட்சிக் காலத்திலும் இது போல பெரியார் பேசி வந்துள்ளாரே."

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

ஆமாம். ராஜாஜி முதல்வராக இருந்த போது கும்பகோணத்தில் இந்து கடவுள்களை அடித்து ஈவெரா ஊர்வலம் நடத்தினார். சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெரிதுபடுத்த விரும்பாததால், எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று ராஜாஜி முடிவு செய்ததாக, ஈவெரா பேசி நான் கேட்டிருக்கிறேன். வைக்கம் போராட்டம் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்  ஈவெராவிற்கு தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்தியது. எனவே ஆட்சியாளர்கள் அவரை சகித்துக்கொண்டனர்.

மேற்குறிப்பிட்ட எனது விளக்கத்திற்கு, கீழ்வரும் பின்னூட்டம் வந்தது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களிலோ, உலகில் மற்ற நாடுகளிலோ நாத்திகப் பிரச்சாரம் அனுமதிக்கப்படுவதில்லையா?”

அதற்கு எனது விளக்கம் வருமாறு:

இங்கர்சால் பெட்ரண்ட் ரஸ்ஸல் வடநாட்டு நாத்திகர்கள் உள்ளிட்டு உலக அளவில் நான் படித்தவற்றில் இருந்தவைக்கும் ஈவெராவிடம் வெளிப்பட்டவைக்கும் வேறுபாடு உண்டு. அவர்களுக்கு எல்லாம் நாத்திகம் முதன்மை நோக்கமாக இருந்தது. பார்ப்பன எதிர்ப்பே ஈவெராவை நாத்திகம் திசையில் பயணிக்கச் செய்தது. அந்த கலவையாக அவர் மேற்கொண்ட நாத்திகப்பிரச்சாரம் உணர்ச்சி பூர்வமாக இழிவுபடுத்தி கண்டிப்பதாக  வெளிப்பட்டது. 
(https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html)

இராமரைக் கடவுளாக வணங்குவது போலவே, இராவணனையும் பிராமணர்கள் உள்ளிட்ட இந்துக்கள் கடவுளாக வணங்குவது தெரியாமல், ஈ.வெ.ரா இராமரை எதிர்த்து, இராவணனை ஆதரித்ததானது, எவ்வளவு அபத்தமான நிலைப்பாடு? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

மேற்குறிப்பிட்ட ஈவெராவிற்கு இருந்த‌ செல்வாக்கின் காரணமாக, அவரின் நாத்திகப் பிரச்சாரத்தை சகித்துக்கொண்ட ஆத்தீகத்தமிழர்கள் இன்று பெரும்பாலும் 70 வயதிற்கும் அதிகமானவர்கள் ஆவார்கள்.

ஈ.வெ.ராவின் இந்தி  மற்றும் மதுவிலக்கு தொடர்பான நிலைப்பாடுகளில் இருந்து 'பெரியார்' கட்சிகள் தடம் புரண்டு தி.மு.கவின் வாலாகப் பயணித்து வருகின்றனர். ஈ.வெ.ராவைப் பின் தள்ளி, பிரபாகரனை பிம்பமான முன்னுதாரணமாக்கி அவர்கள் பயணித்து வருகின்றனர். 
(‘‘Periyar’ parties’ ipso facto rejection of EVR -  LTTE Prabakaran replacing ‘Periyar’ E.V.R in Tamilnadu?’; 

எனவே மதிக்கத்தக்க ஈ.வெ.ரா இருளில் சிக்க, தி.க மற்றும் தி.மு.க மீதுள்ள கோபங்களின் குவியமாக 'பெரியார்' சிக்கி நம்ப முடியாத அளவுக்கு இழிவுபடுத்தப்படுகிறார்.

அதன் தொகுவிளைவாக, ஈ.வெ.ரா மூலமாக கிடைத்த எரிபொருள் வற்றிய சூழலில், ஊழலை நிர்வாகப்பிரச்சினையாகக் கருதி, பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒட்டிப் பயணிக்காமல், ஊழல் தலைவர்களை எல்லாம் புரவலர்களாகக் கருதி 'பெரியார்' கட்சிகள் பயணித்துள்ளார்கள்.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க, போன்ற இன்னும் பல அரசியல் கட்சிகளானாலும், அந்த கட்சிகள் செயல்படுவதற்கான சுயவலிமை என்பதானது, சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் தொடர்பில் இருக்கும் வரை தான் நீடிக்கும். அந்த தொடர்பு துண்டிக்குமானால், வெளி உதவியில், 'செயற்கை சுவாசத்தில்' அந்த கட்சிகள் நீண்ட காலம் நீடிக்க முடியாது.

அந்தத் தொடர்பு துண்டிக்கப்படாமல், பழுதடையலாம். பழுதைக் கண்டுபிடித்து சரி செய்தால் தப்பிக்கலாம். அவ்வாறு சரி செய்வதில் தோல்வியுற்றால், என்ன ஆகும்? நாளாக, நாளாக, பழுது அதிகரித்து, சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் இருந்த தொடர்பு குறையும் போக்கும் அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக, அந்த தொடர்பு துண்டிக்கப்படும்.

அவ்வாறு துண்டிக்கப்பட்டதும் தெரியாமல், அக்கட்சிகள் பயணிப்பதற்கும், மேற்குறிப்பிட்ட காரில் பயணித்தவர்களுக்கும் வேறுபாடு கிடையாது.

1919 முதல் 1944 வரை ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பமும் திரிதலுக்கு உள்ளாகி, பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டது. அதன் விளைவாக, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட வடிகால் மூலமாக ஈ.வெ.ரா வசம் இருந்த சமூக நேர்மையுள்ள சமூக ஆற்றல்களை எல்லாம் அழித்து, 1967இல் ஆட்சியை தி.மு.க‌ பிடித்தது. அதன்பின் ஆதாய அரசியல் மூலமாக அரசியல் நீக்கத்தை ஊக்குவித்து, வளர்ந்த பொதுவாழ்வு வியாபார சமூக ஆற்றல்களின் உண்மையான பலமானது, எவ்வாறு செல்லாக்காசு ஆனது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(‘ஈ.வெ. ரா -வின் வெளிப்படையான சாராம்சத்தை விட்டு விலகி, 'பெரியார்' ஆதரவாளர்கள் பயணிக்கிறார்களா? 'பெரியார்' பிம்பம்' ஈ.வெ.ராவின் சமாதியாகுமா?’ ; 

மத்தியில் சமரசமற்ற பாரபட்சமற்ற ஊழல் ஒழிப்பு முயற்சிகள் தீவிரமானால், தி.மு.க உள்ளிட்ட ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், 'செல்லாக்காசு' ஆகிவிட்டதும் வெட்ட வெளிச்சமாகி விடும். மத்திய ஆட்சியிலும், பா.ஜ.கவிலும் உள்ள 'ஊழல் பாதுகாப்பு கவசங்கள்' செல்லாக்காசாகும் வரையிலும் தான், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் நீடிக்க முடியும்.

'ஆதாய அரசியலில்' வளர்ந்த அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் எல்லாம் சருகாகி, 'தனிநபர் விசுவாசம்'அரங்கேறுவதானது தவிர்க்க இயலாததாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில், 'தனிநபர் விசுவாசம்' அடிப்படையில் மக்கள் செல்வாக்கோடு பயணித்த தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் கடைசி தலைவர் ஜெயலலிதா ஆவார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் அடிமட்ட மக்களின் துன்பங்களை ஆரம்ப காலத்தில் அனுபவித்து,பின் திராவிட அரசியல் வளர்ச்சிக் கட்டத்தில் பயணித்து, முதல்வர் ஆன பின்னால், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களால் அவமானப்படுத்தப்பட்ட புலமையாளர்கள் யார்? என்று அவர்களை (கி.ஆ.பெ.விஸ்வநாதன், டார்பிடோ ஜனார்த்தனம் போன்றவர்களை) தேடி கண்டுபிடித்து, தமக்கு பக்கபலமாக கொண்டு,முதல்வராகப் பயணித்தார்.


எம்.ஜி.ஆரை விட அதிக கல்வியறிவு கொண்ட ஜெயலலிதா அவர்கள், (எனது பார்வையில்) காமராஜரை விட  அதிக துணிச்சலை, 1991-இல் முதல்வரானதிலிருந்து சாகும் வரை வெளிப்படுத்தினார்; கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளிலும்; அம்மா உணவகம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களிலும்.

ஆனால் மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆருக்கு இருந்த பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி(Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்ததே, எவ்வாறு அவரின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் வழி வகுத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

முதல்வர் ஜெயலலிதா பெங்களுரில் சிறையில் இருந்த காலத்தில், குக்கிராமத்திலிருந்து வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, தனது கிராமத்தில், 'சசிகலா செய்த தவறுக்காக தான், அம்மா (ஜெயலலிதா) சிறைக்கு போக நேரிட்டது' என்று, தமது கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் பேசிக் கொள்வதாக‌, தெரிவித்தார். 

தமக்கு எதிரான சதி என்று ஜெயலலிதா வெளிப்படுத்தி, சசிகலாவும் அதை தனது மன்னிப்பு கடிதத்தில் ஒப்புக் கொண்டு; அது தொடர்பாகவும்;

ஜெயலலிதா அப்பொல்லோவில் சேர்க்கப்பட்டது முதல் மரணமடைந்து இறுதி சடங்குகள் நிகழ்ந்தது வரை, எழுப்பப்படும் ஐயங்கள் தொடர்பாகவும்;

இதுவரை சசிகலா விளக்கம் தராத நிலையிலும், அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டவர்கள் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளா? அல்லது தமது சுயநலனுக்காக, ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல, எவரையும் காவு கொடுக்க தயங்காத சுயநல பேர்வழிகளா?

அவர்களின் ஆதரவானது சசிகலாவிற்கு பலமா? பலகீனமா?

ஜெயலலிதாவிற்கே துரோகம் இழைத்தவர்கள்,  சசிகலாவிற்கு துரோகம் இழைக்க மாட்டார்களா?

தமது காலில் விழுபவர்களில் யார்? யார்? வாய்ப்பு கிடைக்கும்போது, தமது காலை வாரி, தம்மை படுகுழியில் தள்ளப் போகிறார்கள்? என்ற கவலையானது, சசிகலாவிற்கு இருந்தால், வியப்பில்லை.

சசிகலா மட்டுமின்றி, ஆதாய அரசியலில் பயணிக்கும் அனைத்து தலைவர்களுக்கும், எச்சரிக்கை தரும், வரலாற்றுப் பாடமாகி விட்டார் ஜெயலலிதா


திருக்குறள் (471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட, இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது. 

இன்றும் அதிகம் படிக்காத சாமான்யர்கள் மத்தியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு நீடிக்கிறது.
 
ஆனால் அ.இ.அ.தி.மு.க கட்சிகளின் நிர்வாகிகள் எல்லாம், மற்ற கட்சிகளைப் போலவே, 'எந்தப்பக்கம் காற்றடிக்கிறது?' என்று நுகர்ந்து தத்தம் வசதி வாய்ப்புகளை உயர்த்திக் கொள்வதிலேயே குறியாக உள்ளார்கள். எனவே அந்த செல்வாக்கின் பலன் அ.இ.அ.தி.மு.கவிற்கு எந்த அளவுக்குப் பயன்படும்? என்பதும் கேள்விக்குறியே ஆகும்.

ஆக, ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம், சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகளுடன் தொடர்பறுந்து பயணிக்கும் கட்சிகளே ஆகும்.

1944இல் முளை விட்டு வளர்ந்த பொதுவாழ்வு வியாபாரப் போக்கினை எதிர்க்காமலும், தமது 'என்ஜீன்' நின்று போனது தெரியாமலும், பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதரவில் பயணித்த‌ 'பெரியார்' கட்சிகளின் எதிர்காலத்தை கந்த சஷ்டி கவசம்சர்ச்சையானது கேள்விக்குறியாக்கி விட்டது.

தனிமனிதராக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், குறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்தும் செயல்நுட்பத்திற்கு உள்ளாகவில்லை என்றால், தரத்தில் வீழ்ச்சி என்பது தவிர்க்க இயலாததாகும். 

சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகண்கள் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன.என்பவை தொடர்பான எனது ஆய்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
(https://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களுடன் தொடர்பு முறிந்து பயணிக்கும் போக்கில், 'நேர்மை வழிகாட்டியானது' (Ethical Compass) எவ்வாறு சீரழியும்? என்ற முனைவர் பட்ட‌ ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கு, என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்.


ஊழல் ஆட்சிகளில் மக்கள் படும் அவதிகளை கண்டுகொள்ளாமலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 'நமது குடும்பம் இல்லை' என்ற துணிச்சலிலும், மனசாட்சியை அடகு வைத்து, 'தனித்தமிழ்நாடு' போதையில் பயணித்ததும், 'இந்து கடவுள்களை கேலி கிண்டல் செய்து மகிழ்ந்ததும் தவறு என்பதை இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும்.
('‘கந்த சஷ்டி கவசம்மூலமாக 'பெரியார்' ஆதரவாளர்களுக்கு 'சமூகத் தளவிளைவுநெருக்கடி

வைக்கம் போராட்ட வீரர் ஈ.வெ.ராவிற்கும், 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி பயணித்த ஈ.வெ.ராவிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் காரணமாக, ரசனையில் வீழ்ச்சியுடன் பொதுவாழ்வு வியாபாரிகளும் முளைவிட்டு வளர்ந்தார்கள்.

தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்ற சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களில் இருந்து ஈ.வெ.ரா விலகத் தொடங்கியதே, அந்த வீழ்ச்சிகளுக்கு காரணமானது.

ஈ.வெ.ரா தொடங்கி வைத்த ரசனை வீழ்ச்சியானது, எவ்வாறு ஈ.வெ.ராவிற்கே எமனாக மாறியது? என்பதையும் விளக்கியுள்ளேன்.

'பிரிவினை' பற்றி ஈ.வெ.ராவைப் போல துணிச்சலாக 'நியாயப்படுத்தி' இன்று பேச முடியுமா? இந்து கடவுள்களை கண்டித்து ஈ.வெ.ரா பேசியபோது, 'சகித்துக் கொண்ட' ஆத்தீக தமிழர்கள், இன்று அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கிறார்களா?

எனவே வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் பயணித்தால் மட்டுமே, இனி 'பெரியார்' கட்சிகள் தமிழ்நாட்டில் எடுபட முடியும். தவிர்த்தால் ஆத்தீகத் தமிழர்களின் எதிர்ப்பில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவது நிச்சயமாகி விடும்.. அதுவே 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடமாகும். 

சமூக ஆற்றல்களின் (Social Energy) ஊற்றுகண்களுடன் தொடர்பு கொண்டு, மீண்டும் தமது சமூக என்ஜீனை உயிர்ப்பித்து வைக்கம் ஈ.வெ.ரா பாணியில் 'பெரியார்' கட்சிகள் பயணிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் இந்தி பயில்வதை ஈ.வெ.ரா எதிர்க்கவில்லை. மத்திய அரசின் செலவில், மத்திய அரசில் பணியாற்றும் தமிழர்கள் இந்தி பயில்வதை அவர் ஆதரித்தார். இந்தி பிரச்சினையில் 'பெரியார் தந்த புத்தியில்' இருந்து தி.க தடம் புரண்டு, தி.மு.க திசையில் பயணிப்பது தவறாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2019/09/3.html

தி.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் புதிய கல்விக்கொள்கையை எந்த அளவுக்கு எதிர்க்கிறார்களோ, அந்த அளவுக்கு கீழ்வரும் கோரிக்கையும் வலிமையாகும்.

தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ (C.B.S.E) பள்ளிகளிலும், சர்வதேசப் பள்ளிகளிலும் (International Schools) இரு மொழி கொள்கையை அமுல்படுத்த வேண்டும். அது முடியாதெனில், தமிழக அரசு பள்ளிகளிலும் அப்பள்ளிகளைப் போல இந்தி படிக்க அனுமதிக்க வேண்டும்.

கட்சித்தலைவர்களின் குடும்பப் பிள்ளைகளுக்கு ஒரு நீதி? சாமான்யர்களின் பிள்ளைகளுக்கு வேறு நீதியா?

ஆக. 'புதிய கல்விக்கொள்கையும்' இன்னொரு கந்த சஷ்டி கவசம்சர்ச்சையாகும் அபாயத்தையும் திராவிடக் கட்சிகள் சந்திக்கப் போகின்றன. இதில் சந்தேகம் உள்ளவர்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுடன் உரையாடி உண்மையை உணரலாம்.

1944இல் முளை விட்டதானது, ஆதாய அரசியலில் தமிழையும் தமிழ்நாட்டையும் சீரழித்தது. 'கந்த சஷ்டி கவசம்' உணர்த்தும் பாடத்தை விளங்கிக் கொண்டு, உரிய திருத்தங்களுடன் 'பெரியார்' கட்சிகள் 'வைக்கம்' ஈ.வெ.ராவைப் போல‌ பயணித்தால், அதன் தொடர்விளைவாக, தமிழ்நாடானது ஆதாய அரசியலில் இருந்து விடுபட்டு, ஆக்கபூர்வ அரசியல் திசையில் பயணிக்கும்.

அது போலவே, தாய்மொழித் தமிழ், இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றை முன் நிறுத்தி 'தமிழ் இந்துத்வா' திசையில் பயணித்தால் மட்டுமே இந்துத்வா கட்சிகள் தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியும். அத்தகைய தமிழத்துவா மூலமே, இந்தியர் என்ற அடையாளமும், தேசியக்கட்சிகளும் தமிழ்நாட்டில் வளர முடியும்.

இவையெல்லாம் கந்த சஷ்டி கவசம்மூலமாக வெளிப்பட்டுள்ள பாடங்கள் ஆகும்.


குறிப்பு: 'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே; ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே';   https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html 

No comments:

Post a Comment