Monday, September 7, 2020


மறைந்த தலைவர்களின் கட்சிகளின் அரசியலில் தான் வெற்றிடம்? (1)


திருப்புமுனை மாற்றத்திற்கான அரசியல் சூறைக்காற்று தொடங்கி விட்டது 


முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

'சில அரசியல் தலைவர்கள் காலமானார்கள் என்பதற்காக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று சொல்வது எந்த வகையான அரசியல்?

ஒரு சில தலைவர்கள் தானா அரசியல்?

அரசியலில் தத்துவம் கொள்கை கோட்பாடு எல்லாம் எங்கே போனது?'

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடைகள் காணும் முயற்சியானது, தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு வழி வகுக்கும்.

சில அரசியல் தலைவர்கள் காலமானார்கள் என்பதற்காக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று சொல்வது எந்த வகையான அரசியல்?

ஆதாய அரசியல் மூலமாக அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) உள்ளான சமூகத்தில் வெளிப்படும் தனிநபர் தலைவர்களை மையப்படுத்திய அரசியல் தான் தமிழ்நாட்டில் நீடிக்கிறது. தலைவர்கள் மறைந்து விட்டதால், அந்த தலைவர்களின் கட்சிகளின் அரசியலில் தான் வெற்றிடம் உள்ளது. ஆனால் அந்த தலைவர்களை மையப்படுத்திய அரசியல் நீடிக்கிறது.  அந்த அரசியலை  ஆராய்வதன் மூலமாக, அந்த வெற்றிடத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரலாம்? என்பதற்கு விடை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு சில தலைவர்கள் தானா அரசியல்?

ஆதாய அரசியல் செல்வாக்குடன் நீடிக்கும் வரையில், மக்கள் மத்தியில்  செல்வாக்கினை நிரூபித்த ஒரு சில தலைவர்கள் அரசியல் போக்கே தொடரும்.

அரசியலில் தத்துவம் கொள்கை கோட்பாடு எல்லாம் எங்கே போனது?

கம்யூனிஸ்டுகளும் அவர்களின் கொள்கை எதிரியான சுதந்திரா கட்சியும்,

தமிழ் அரசியலை முன் நிறுத்திய ம.பொ.சியின் தமிழரசு கழகமும், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியும், அந்த இரண்டு கட்சிகளாலும் எதிர்க்கப்பட்ட தி.மு.கவும்,

1967இல் சங்கமமாகி கூட்டணி அமைத்த போதே, தமிழ்நாட்டில் அரசியலில் தத்துவம் கொள்கை கோட்பாடு எல்லாம் மக்கள் அரங்கை விட்டு வெளியேறி விட்டது.

அந்த கூட்டணி 1967இல் ஆட்சியைப் பிடித்ததும் இரண்டு முக்கிய அறிகுறிகள் வெளிப்பட்டன.

ஊழல் ஆதாய அரசியல் திசையில் தி.மு.க பயணிக்கத் தொடங்கியதைக் கட்டுப்படுத்த முடியாமல் வருந்திய முதல்வர் அண்ணா, மருத்துவமனையில் தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் ராமமூர்த்தியிடம் தாம் விரைவில் மரணமடைய விரும்பியதாக தெரிவித்ததை ராமமூர்த்தி தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தி.மு.கவின் தாய்க்கழகமான தி.கவின் தலைவர் ஈ.வெ.ரா அவர்கள் பொதுவாழ்வில் மனம் வெறுத்து முனிவராக விரும்பினார். முதல்வர் அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் முயன்று அவரை சமாதனப்படுத்தினர்.

அந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் மத்தியில் அவை இரண்டும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

தி.மு.கவுடன் 'தேன்நிலவு' முடிந்து விட்டது என்று அறிவித்த‌ ராஜாஜியின் துணையுடன், அண்ணா மறைந்த பின்பு 1969இல் கருணாநிதி முதல்வரானார். ராஜாஜியின் உயிர்க்கொள்கையான மதுவிலக்கை முதல்வர் கருணாநிதி ஒழித்து சாராயக்கடைகளைத் திறந்தார். மனமுடைந்து ராஜாஜியும் மரணித்தார்.

1967இல் எதிரெதிர் கொள்கைகள் சங்கமமாகி கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் அரசியலில் தத்துவம் கொள்கை கோட்பாடு எல்லாம் மக்கள் அரங்கை விட்டு வெளியேறிய பின்னணியில்;

1969 முதல் கருணாநிதியின் ஆட்சியில் அறிவியல் ஊழல் வளர்ந்த வேகத்தில் ஆதாய அரசியல் வளர்ந்து, அரசியல் நீக்கத்தை விரைவுபடுத்தியது. அதன் தொகுவிளைவாக, தி.மு.க அரசியலானது கருணாநிதி என்ற தனிமனிதரின் அரசியலானது. கருணாநிதியின் தனிமனித அறிவியல் ஊழலுக்கு எதிராக முளைவிட்ட எம்.ஜி.ஆரின் தனிநபர் அரசியலில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வீழ்ந்தது.

அதன்பின், தமிழ்நாட்டு அரசியலானது, எம்.ஜி.அர் மற்றும் கருணாநிதி என்ற இரண்டு தனிநபர்களின் அரசியலாகப் பயணித்தது. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரண்டு தனிநபர்களின் அரசியலாகப் பயணித்தது. இன்று ஜெயலலிதாவும் இல்லை. கருணாநிதியும் இல்லை.

அந்த மூவரும் மறைந்து விட்டதால், அந்த தலைவர்களின் கட்சிகளின் அரசியலில் தான் வெற்றிடம் உள்ளது. 

ஆனால் அந்த மூவரையும் மையப்படுத்திய அரசியல் நீடிக்கிறது.  

கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களை மையப்படுத்திய அரசியலில் என்னென்ன வேறுபாடுகள் வெளிப்பட்டன? என்று ஆராய்வோம்.

முதலில் கருணாநிதியை மையப்படுத்திய அரசியலைப் பற்றி ஆராய்வோம். அந்த அரசியலின் முன்னோடியாக, 1967க்குப்பின் அண்ணா முன்னெடுத்த அரசியலைப் பற்றி அறிவது முக்கியமாகும்.

'கம்ப ரசம்' எழுதி, 'தீ பரவட்டும்' என்று கம்ப ராமாயணம் மீது வெறுப்பினை ஈ.வெ.ராவுடன் சேர்ந்து வளர்த்த அண்ணா, 1967இல் முதல்வரான பின், கம்பருக்கு மட்டுமின்றி, ஈ.வெ.ராவால் கண்டிக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் முன் நிறுத்திய பலருக்கும் சென்னை மெரினாவில் சிலைகள் வைத்தார். அது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் முகாமுடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவகம் உருவாக்கும் முயற்சி சந்தித்த‌ தடைகள் எல்லாம் நம்பமுடியாத அளவுக்கு, 'தேசியம்' மற்றும் 'இந்துத்வா' ஆதரவாளர்களிடம் இருந்து வெளிப்பட்டிருந்த சூழலில்;

1967இல் தமிழக முதல்வராக அண்ணா ஆன பின், அவருக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் நடந்த சந்திப்புகள் எல்லாம், அந்த தடைகளை கடந்து, ஏக்நாத் ரானடே தமது முயற்சியில் வெற்றி பெற எந்த அளவுக்கு உதவியது?  அது தொடர்பாக தி.மு.கவில் அண்ணாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இடம் பெற்றவர்களில், ஏன் அன்றைய அமைச்சர் கலைஞர் கருணாநிதி இடம் பெறவில்லை? முதல்வரான அண்ணா வாடிகன் சென்று போப்பை சந்தித்த போது; கோவா விடுதலை போராட்டத்தின் போது, போர்ச்சிகீசிய அரசால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த ஆர்.எஸ்.எஸ்காரரான மோகன் ரானடேயை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது ஏன்?

உடல்நலக்குறைவில் சிக்காமல் அண்ணா நல்ல ஆரோக்கியத்துடன் முதல்வராக தொடர்ந்திருந்தால்;

அண்ணாவுக்கும் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் மலர்ந்திருந்த நல்லுறவானது;

சுயலாப நோக்கின்றி 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு', திராவிட அரசியலை வளர்க்க விரும்பிய போக்கில்;

திராவிட அரசியலுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிக்கும் இடையில் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன்கள் விளைந்திருக்க கூடிய நல்லுறவாக வளர்ந்திருக்கும்;

என்பது எனது ஆய்வு முடிவாகும். 

அண்ணா முன்னெடுத்த அரசியலில் இருந்து, எவ்வாறு கருணாநிதி தடம் புரண்டார்? என்ற ஆய்வுக்கு, கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையானது திறவுகோலாகும்.

அண்ணாவும் ஏக்நாத் ரானடேயும் சந்தித்த போதேல்லாம், நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்களே இடம் பெற்றனர். அதில் கருணாநிதி இடம் பெறவில்லை. பின் எம்.ஜி.ஆர் முதல்வரான பின், ஏக்நாத் ரானடேயின் முயற்சியால் தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை எடுப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் ஜெயலலிதா எவ்வாறு கருணாநிதியிடம் ஏமாந்தார்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தி.மு.க ஆட்சியில் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜெனார்த்தனம், கி.ஆ.பெ.விஸ்வநாதன் உள்ளிட்ட இன்னும் பல புலமையாளர்களை எல்லாம் தேடி, வரவழைத்து, மிகுந்த மரியாதை செய்து, ஆலோசனைகள் பெற்று முதல்வர் எம்.ஜி.ஆர்  ஆட்சியை நடத்திய பாதையிலிருந்து ஜெயலலிதா தடம் புரண்டு, எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி பயணித்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

அவ்வாறு அவர் பயணித்ததால், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக முக்கிய காரணமாக ஏக்நாத் ரானடேயும், எம்.ஜி.ஆரும் இருந்தார்கள்;

என்ற உண்மையானது இருளில் மூழ்கி, முழு குவிய வெளிச்சமும் தி.மு.க தலைவர் கருணாநிதி பெற, ஜெயலலிதா காரணமாகி விட்டார். 

அதாவது தி.மு.கவின் அரசியலை ஆர்.எஸ்.எஸ் நல்லுறவுடன் தேசிய திசையில் முன்னெடுக்க முனைந்த அண்ணாவின் அரசியலையும், அதில் இருந்து தடம் புரண்ட கருணாநிதியின் அரசியலையும், அதில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, அண்ணாவை விட சிறப்பாக தமிழின் வளர்ச்சி நோக்கி முன்னெடுத்த எம்.ஜி.ஆரின் அரசியலையும், அதில் இருந்து பகுதியாக தடுமாறிய ஜெயலலிதாவின் அரசியலையும் ஆராய்வதற்கான முக்கிய புள்ளியாக, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை உள்ளது.‌

தமிழ்நாட்டில் திராவிட அரசியலில் வளர்க்கப்பட்ட அடையாளச் சிக்கலானது, எவ்வாறு கருணாநிதியின் 'கட்டுமரம் அரசியலின்' அடித்தளமானது?

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடித்து வந்த போக்கினை, எவ்வாறு தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக, 1969இல் முதல்வரான கருணாநிதி வளர்த்தார்?

'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் வலிமையானதற்கு ராஜாஜி எவ்வாறு பங்களித்துள்ளார்?

தமிழரின் அடையாளச் சிக்கலில், ஈ.வெ.ராவின் பங்களிப்பால், எவ்வாறு 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' நோய் வளர்ந்தது?‌ 

அதன் எதிர்விளைவாக, எவ்வாறு 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா' நோயும் வளர்ந்தது?

எவ்வாறு ராஜாஜியின் பங்களிப்புடன் இரண்டு வகை நோய்களையும் மூலதனமாக்கி, கருணாநிதி தமது குடும்ப அறிவியல் ஊழலுக்கு உதவும் 'சமூக கீரி - பாம்பு சண்டை'யாக வளர்த்து விட்டார்?

எம்.ஜி.ஆருக்கு இருந்த புலமையாளர்களின் பக்கபலமின்றி, சசிகலா குடும்ப வலைப்பின்னலில் சமூக தொடர்பு நீக்கத்திற்குள்ளாகி (Social Insulation), முதல்வராக ஜெயலலிதா பயணித்தார். அதன் காரணமாக, கருணாநிதிக்குப் பிடிக்காத புலமையாளர்களும், படித்த பிராமணரல்லாதோருக்கும் நடராஜன் எவ்வாறு இன்னொரு 'கட்டுமரமாக' வெளிப்பட்டார்?

அதன் மூலமாக, கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த ஏரிகளும், ஆறுகளும், கிரானைட், தாது மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், அதிக மதிப்புள்ள தனியார்ச் சொத்துக்களும் இரையாகும் அளவுக்கு, கருணாநிதியின் குடும்பத்தையும் விஞ்சி எவ்வாறு சசிகலா நடராஜன் குடும்பம் சாதனை படைத்தது?

என்பதை எல்லாம் எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.                                

மேற்குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் அரசியல் மூலமாக, எவ்வாறு சமூக ஊமைக்காயங்கள் முளைவிட்டு வளர்ந்து, இன்னும் மோசமான சமூக ஊமைக்காயங்களைத் தூண்டி தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கியது? என்பதையும் ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளேன். 

ஒரு நாட்டில் ஊழல் என்பதானது நிர்வாகப் பிரச்சினை அல்ல.

ஊழல் மூலமாக கண்ணுக்கு தெரியும் அறிகுறிகளையும் தாண்டி,

ஒரு அரசின் சட்டபூர்வ நியாயத்துடனும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்புடனும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையுடனும் (the engagement of civil society) தொடர்புகள் கொண்டதாக அரசியல் விஞ்ஞானிகள் அணுகுகின்றனர்.

Political scientists look beyond the visible signs of corruption to the broader setting in which it occurs. They see corruption in relation to the legitimacy of the state, the patterns of political power, and the engagement of civil society. 

அந்த அணுகுமுறையில், தமிழ்நாட்டின் ஊழலானது,

தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் 'உட்குழுவாகவும்', பிராமணர்கள் 'வெளிக்குழுவாகவும்' நீடிக்கும் போக்குடனும்,

'தமிழர்' உட்குழுவாகவும், 'இந்தியர்' வெளிக்குழுவாகவும் நீடிக்கும் போக்குடனும்,

அவற்றை மூலதனமாக்கி கருணாநிதியின் குடும்ப அரசியல் வளர்த்த‌ 'சமூக கீரி - பாம்பு சண்டை'யுடனும், கருணாநிதியின் பாசறையில் பயின்று சசிகலா நடராஜன் குடும்பம் இன்னும் மோசமாக்கி வளர்த்துள்ள 'சமூக கீரி - பாம்பு சண்டை'யுடனும்,

மேற்குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் அரசியல் மூலமாக, தமிழ்நாட்டின் முதல்வரையேக் காவு வாங்கிய அளவுக்கு வளர்ந்துள்ள‌  சமூக ஊமைக்காயங்களுடனும்,

தொடர்புடையதாக இருக்கிறது.

உலக அளவில் ஊழலில் சீர் குலைந்த நாடுகளின் அரசியலானது,

எவ்வாறு ஊழல் ஒழிப்பை மையமாகக் கொண்டு, அந்தந்த நாடுகளின் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, தண்டித்து, ஊழல் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து வருகிறார்கள்? உலக அளவில் எந்த அளவுக்கு அம்முயற்சிகள் வெற்றி பெற்று வருகின்றன? என்பது தொடர்பான தகவல்களுக்கு:




தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பில் சிவில் சமூகத்தின் யோக்கியதை எவ்வளவு மோசமாக இருந்தது? என்பதற்கு நேரடி ஒளிபரப்பில் மாதக்கணக்கில் நடந்த 'முதல்வர்' ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சையும், மரணமும் வரலாற்றுக் கேவலமான இறுதிச்சடங்கும் சான்றுகளாகி விட்டன. 1967 முதல் முளைவிட்ட சமூக ஊமைக்காயங்களைக் கண்டுகொள்ளாத 'யோக்கிய'(?) சிவில் சமூகமானது தமிழ்நாட்டில் வளர்ந்ததால் வந்த விளைவு அதுவாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/08/1967-1967.html)

படித்த, வசதியான 'கோழை' சிவில் சமூகத்திலிருந்தும், ஊடகப்பார்வையில் இருந்தும் அந்நியமாகி பயணித்து வரும், ஆட்சியிலும் கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் வாழும் எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர்களும், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீட்கும் நோக்கில் ஊழல் ஒழிப்பை ஆதரிப்பவர்களும் மட்டுமே, ஊழல் ஒழிப்பில் சமூகப் பொறுப்புள்ள சிவில் சமூகமாகப் பங்களித்து வருகிறார்கள்.‌

தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு கட்சிகள் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் அல்லது அறிவாலயத்திலும் சங்கமமாகியுள்ளனர்.  அவ்வாறு சங்கமித்த பத்திரிக்கையாளர்களில் பலர், வெளியில் யோக்கியர்கள் போல கருத்துக்கள் தெரிவித்து வரும் நகைச்சுவைகளுக்கும் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை.

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவின் மூலமாக வளர்ந்த ஊழல் அரசியலுக்கு, சமூக அளவில் அலெக்சிதிமிக் தற்கொலைகளை ஊக்குவித்தது, எந்த அளவுக்கு லாபகரமானது? என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்கு உகந்தததாகவும் தமிழ்நாடு இருக்கிறது. 

கருணாநிதியும், ஜெயலலிதாவும், நடராஜனும் மறைந்துள்ள நிலையில்,

ஸ்டாலின் கருணாநிதியின் கட்டுமரம் அரசியலை முன்னெடுப்பதில் வெற்றி பெறுவாரா?

சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தமது கணவர் முன்னெடுத்த இன்னும் மோசமான கட்டுமரம் அரசியலை முன்னெடுப்பதில் வெற்றி பெறுவாரா?

இரண்டு குடும்பங்களின் நேரடி பிடியில் இதுவரை சிக்காத ஈபிஎஸ் - ஓபிஎஸ் அரசின் அரசியலானது, சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின் தாக்கு பிடிக்குமா?

பா.ஜ.க உள்ளிட்ட தேசியக்கட்சிகளை எல்லாம் தமிழ்நாட்டின் ஊழலுக்கு 'சலாம்' போட வைத்த போக்கு தொடருமா?

என்று ஆதாய அரசியலில் பயணித்த கட்சிகள் எல்லாம் குழம்பி கிடக்கின்றனர்.

அந்த குழப்பங்களில் சிக்காமல், ஆட்சியிலும் கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் வாழும் எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர்களும், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீட்கும் நோக்கில் ஊழல் ஒழிப்பை ஆதரிப்பவர்களும் அரசியல் சூறைக்காற்றினைக் கிளப்பி கட்சிகளை எவ்வாறு குழப்பி வருகின்றனர்? என்பதையும் எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்
(‘ராஜாஜியும், ஈ.வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற சமூக செயல்நுட்பம்?
https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) விரும்பும் கட்சி சார்பில்லாத தமிழக மக்களின் பார்வையில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பில், மோடி அரசின் சட்டபூர்வ நியாயமும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்பும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையும் (the engagement of civil society) கேள்விக்குறியாகியுள்ளது. 

பாரபட்சமற்ற தமிழ்நாட்டு ஊழல் ஒழிப்பில் பிரதமர் மோடி தயங்கும் வரையில், தமிழ்நாட்டில் பா.ஜ.கவை நோட்டாக்கட்சியாகவே நீடிக்கச் செய்யும் அரசியல் சூறைக்காற்றானது எவ்வாறு தொடரும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். 
(https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_25.html)

மறைந்த தலைவர்களின் கட்சிகளின் அரசியலில் தான் வெற்றிடம் உள்ளது. அந்த தலைவர்களை மையப்படுத்திய அரசியலில் இருந்த வேறுபாடுகளையும், அவற்றினுள் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் உள்ள கூறுகளையும் கணக்கில் கொண்டால்,

தமிழ்நாட்டின் அரசியலானது, அடையாளச்சிக்கலைத் தீர்த்து சரியான தேசக்கட்டுமானம் (Nation Building) திசையில் பயணிக்கும் வகையில், திருப்புமுனை மாற்றத்திற்கான அரசியல் சூறைக்காற்றாக‌ நன்கு வீசத் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment