Thursday, October 8, 2020

கருணாநிதியின் சுயநல அரசியலானது, தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பம் ?

 

1996 தேர்தல்; சசிகலாவின் செல்வாக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் அதி ஆடம்பரத் திருமணம்; ஜெஜெ பயணங்களில் பல மணி நேரம் போக்குவரத்து சீர்குலைவு. அச்சுறுத்தல் கொலை மூலமாக, தனியார்ச் சொத்துக்களை அபகரித்தது (தற்போது மோடி அரசு கைப்பற்றியுள்ள பட்டியலில்); போன்ற காரணங்களால், துக்ளக் சோ உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க பங்களித்தார்கள். ஜெயலலிதா தோற்று, ஆட்சி மாற்றம் நடந்ததை வரவேற்ற எண்ணற்றவர்களில் நானும் ஒருவன்.

ஆனால், 1996இல் கருணாநிதி முதல்வரானது, தமிழுக்கு எந்த அளவுக்கு கேடாகும்? என்பது, எனக்கு எதிர்பாராத அதிர்ச்சியானது.

தமிழிசைக்கு உரிய முக்கியத்தும் கொடுத்து இசைப்பாடத்திட்டத்தை எவ்வாறு திருத்துவது? என்பதற்கான ஆலோசனைக் கூட்டமானது, வீ.பா.கா.சுந்தரம் உள்ளிட்ட‌ சுமார் 20 இசை அறிஞர்கள் பங்கேற்க, சென்னை தலைமைச்செயலகத்தில் மதியம் சுமார் 2 மணி அளவில் தொடங்கியது. தலைமை தாங்கிய அமைச்சர் தமிழ்க்குடி மகன் அனைவரையும் வரவேற்று பேசிவிட்டு, ' முதல்வரின் பேத்தி பட்டம் வாங்கும் பட்டமளிப்பு விழாவிற்கு நான் செல்கிறேன். நீங்கள் தொடர்ந்து விவாதிக்கலாம்' என்று சொல்லி விட்டு சென்றார். அவர் சென்ற பிறகு அரசு செயலாளர் தானும் அந்த பட்டமளிப்பு விழாவிற்கு செல்வதாகவும், தொடர்ந்து நீங்கள் விவாதிக்கலாம், என்று அறிவித்து விட்டு அவரும் சென்றார். பின் துணைச் செயலர்(Under Secretary) தலைமையில் அக்கூட்டம் நடந்து சுமார் 5 மணி அளவில் முடிந்தது. தேநீர் கூட வழங்கப்படவில்லை. வீ.பா.க.சுந்தரம் உள்ளிட்டு வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு பயணப்படி வழங்கப்படவில்லை. முக்கியத்துவம் அற்ற சடங்காக அந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தது.

1996 ஆட்சி மாற்றத்துக்கு முன், கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமி, திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனக்கு நெருக்கமானவர். அப்போது 'பெரியார்' கொள்கையாளராக இருந்த எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய நூல்களை தி.க வெளியிட்டதை அவர் அறிவார். 1989‍ - 1991 காலத்தில் அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொரு சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முதல் நாள், என்னை வீட்டில் சந்தித்து, பேச வேண்டிய குறிப்புகளை எடுத்துக் கொள்வார். முதல்வர் கருணாநிதியின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, கச்சத்தீவு உள்ளிட்டு 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்புடைய பிரச்சினைகளை சட்டசபையில் பதிவு செய்து, ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றார். எனவே 1991 அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் அரைகுறை தகவல்களுடன் விவாதிக்கும் போக்கினை நீக்குவதற்காக, ' பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளியிடுவதும், அந்த தேர்தல் அறிக்கையில் என்னால் இடம் பெற்றது. 

1991-க்குப்பின் ஜெயலலிதா ஆட்சியில் அவர் கல்வி அமைச்சரானார். கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.

"கர்நாடக அரசு கல்வி, நிர்வாகம், வேலை வாய்ப்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து ஆணைகள் அமுல்படுத்தியுள்ளது. அதே ஆணைகளை வாங்கி, 'கன்னடம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்' என மாற்றி ஏன் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்கக் கூடாது?"

"கர்நாடக அரசின் அந்த ஆணைகளை வாங்கித் தாருங்கள். நான் முயற்சிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னார். எனக்குத் தெரிந்த 'தனித்தமிழ்' முக்கிய நபரிடம் அதைத் தெரிவித்தேன். ஒன்றும் பலனில்லை.

அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தகவலைச் சொன்னேன். அவர் பெருமையுடன் "அந்த கர்நாடக அரசின் ஆணைகள் வந்து விட்டன. எனது துறையில் தான் உள்ளது" என்றார். அதாவது பேரா.பொன்னுசாமியின் முயற்சியால் அந்த ஆணைகள் கிடைத்த‌ பின், ஆட்சி மாற்றம் நடந்ததிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழிசை ப.தண்டபாணிக்கு ஏற்பட்ட முடிவே, 'அந்த' ஆணைகளுக்கும் நடந்தது. (‘ப.தண்டபாணி ‍ தமிழ் இசை அறிஞருடன் எனது அனுபவங்கள்’; https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, பேரா.பொன்னுசாமி 'கட்சி மாறி'யாகி விட்டார். அந்த தவறினை அவர் செய்யாமல், அ.இ.அ.தி.முகவில் நீடித்திருந்தால், மீண்டும் அவர் மூலம் முயற்சி நடந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய‌ கச்சத்தீவு தீர்மானத்தில் பேரா.பொன்னுசாமி ஆற்றிய முக்கிய பங்கினையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html)

கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமிக்கு, மேற்குறிப்பிட்ட 1991 தேர்தல் அறிக்கையை நினைவூட்டினேன். முதலில் பெரியாரின் கூட்டுத்தொகை நூல்வரிசையை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக வெளியிடலாம்; நிதியைக் காரணம் காட்டி அதை நிராகரித்தால், அரசு அனுமதியுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நன்கொடைகள் பெற்று அதனை வெளியிடலாம்; என்ற எனது ஆலோசனையை அவர் ஏற்றார். அத்தகவலை அந்நிறுவன இயக்குநர் இராமர்.இளங்கோவிடம் தெரிவித்தேன். அந்நிறுவனத்திற்கு கல்வி அமைச்சரே தலைவர். அடுத்து நடந்த அந்நிறுவனக் கூட்டத்தில், இராமர்.இளங்கோ மற்றும் பொன்னுசாமியின் பங்களிப்பால் அத்தீர்மானம் 1996இல் நிறைவேறியது. 1996இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் அமைச்சரான தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை நினைவூட்டியபோது, உற்சாகமாக அதை வரவேற்று எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அடுத்த முறை சந்தித்தபோது, அதை அரசு செய்வதை விட தனியார் செய்யலாம் என்று முதல்வர் கருணாநிதி கருதுவதாக தெரிவித்தார். 1996-இல் ஆட்சி மாற்றம் நடந்திருக்கவில்லை என்றால், பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் ஜெயலலிதா ஆட்சியில் வெளிவந்திருக்கும். கருணாநிதி ஆட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பவை மட்டுமே வெளிவந்தது. அவரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், பெரியார், அண்ணா ஆகிய இருவரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவர, கருணாநிதியே தடையாக இருப்பார், என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

பல வருடங்களுக்கு முன், 'தொல்காப்பியரும், வள்ளுவரும், இளங்கோவும் நின்று கொண்டு, உட்கார்ந்த நிலையில் உள்ள‌ தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்தும் சுவரொட்டிகளும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மேடையில்  அதை நடித்துக் காட்டிய நிகழ்ச்சிகளும் ஆழ்ந்த ஆய்விற்குரியவையாகும். அதாவது அறிவுபூர்வ போக்கு பலகீனமாகி, உணர்ச்சிபூர்வ போக்குகள் வளர்ந்த காலக் கட்டத்தில், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு, போன்ற தமிழரின் 'ஆணி வேர்கள்' தமிழர்க்குக் கேடானவை என்ற பிரச்சாரத்தை வலிமையுடன் பெரியார் மேற்கொண்டு வந்தார். 1949இல் தி.மு.க தோன்றி, 'இரட்டைக் குழல் துப்பாக்கி' என்று அறிவிப்புக்கு இணங்க, பெரியாரின் நிலைப்பாட்டை ஒட்டி, அந்தப் பிரச்சாரப் போக்கில் தமிழ் தொடர்பாகவும் தி.மு.க பயணித்ததா? அதில் அண்ணாவின் நிலைப்பாட்டிற்கும், கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாட்டிற்கும் எப்போது வேறுபாடு முளைவிட்டு, வளர்ந்து, மேலேக் குறிப்பிட்ட விளைவில் இன்று உள்ளது என்பதும் ஆழ்ந்த ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.   (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html)

மேலேக் குறிப்பிட்ட போக்குகள் தமிழை வளர்த்ததா? அல்லது வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது தமிழைத் திராவிட அரசியலில் சுயநல நோக்குகளுக்குப் பயன்படுத்தி, வீழ்ச்சித் திசையில் பயணிக்கச் செய்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இன்று கருணாநிதி - நாகசாமி கூட்டணி    தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பமானது மரண வாயிலை நெருங்கி விட்டது.

இளம் ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் இனி அச்சமின்றி தமிழ் தொடர்பான தமது ஆய்வுகளை முன்னெடுக்கலாம்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்குப் பின், முதல் முறையாக கருணாநிதி மற்றும் சசிகலா குடும்ப ஆட்சிகளில் சிக்காமல், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், தமிழ்நாடு பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் இருந்து, எந்த அளவுக்கு ஆளுங்கட்சி தப்பிக்கிறது? என்பதைப் பொறுத்தே, தமிழ்நாடு சீரழிவில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post_8.html)


குறிப்பு: இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில், எதிர் முகாமில் உள்ள தொடர்புகளை, வெளியில் தெரியாமல் தமது சுயலாபத்திற்கு பயன்படுத்தி வருபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், எந்த கட்சியையும் கொள்கையையும் வெறுக்காமல், அவற்றில் உள்ள முரண்பாடுகளை சரியாக அடையாளம் கண்டு, பொதுநல நோக்கில் வெளிப்படையாக நாம் செயல்பட்டால், தமிழையும் தமிழ்நாட்டையும் மீட்க முடியும்; நம் மீது 'சங்கி, கைக்கூலி' என்று குத்தப்படும் முத்திரைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நானறிந்த வரையில், தற்சார்புடன் (physically & mentally independent) நடமாடிய‌ வரையில், அவ்வாறு வெளிப்படையாக செயல்பட்ட ஒரே தலைவர் ஈ.வெ.ரா ஆவார். தமக்கு நெருக்கமான பிராமணர்களின் இடங்களில் பகிரங்கமாக தமது கட்சியின் பயிற்சி வகுப்பை நடத்தியது போல, பல உதாரணங்கள் இருக்கின்றன. (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

முரண்பாடுகள்(Contradictions) பற்றிய புரிதலின்றி, 'இந்து, முஸ்லீம், தலித், பெரியாரிஸ்ட், மார்க்சிஸ்ட்' போன்ற இன்னும் பல,‌  புற 'லேபிள்களை' வைத்து, அந்த 'லேபிள்'களுக்குள் உள்ள ஆக்கபூர்வ/அழிவுபூர்வ முரண்பாடுகள் (இயக்கத் தன்மையிலான சமூக தள விளைவு - dynamic social polarization) பற்றிய புரிதலின்றி, எந்த ஒரு மனிதரையும், கட்சியையும் விரும்பி/வெறுத்து வாழ்பவர்கள் எல்லாம் மனித எந்திரர்கள்ஆவர். மனித எந்திரர்களாக சுயலாப நோக்கின்றி வாழ்பவர்கள் எல்லாம், குடும்ப ஊழல் அரசியலுக்கு சுயநினைவின்றி துணை போகும் அபாயம் தமிழ்நாட்டில் இருக்கிறது.

நான் சந்தித்த சாமான்யர்களிடம், அந்த 'மனித எந்திரர்' போக்கு வெளிப்பட்டதில்லை. 

1 comment:

  1. கழகம் கெடுத்த தமிழ் மரபுகள் பல அவற்றில் ஒன்று துதி

    ReplyDelete